வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று செவ்வாய்க்கிழமை வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.