ஐ.தே.க உடன் இணைய முன்வருமாறு ஐ.ம.சக்திக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஐ.தே.க உடன் இணைய முன்வருமாறு ஐ.ம.சக்திக்கு ஜனாதிபதி அழைப்பு!

editor 2

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைவரும் எங்களுடன் இணைய முன்
வர வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வர வேண் டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குருநாகல் – குளியாப்பிட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் பேரணியும் முதலாவது பொதுக்கூட்டமும் நடந்தது. இதில், உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கஷ்டமான காலத்திலேயே மக்கள் தற்போது இருந்து வருகின்றனர். அதனால் குறுகிய அரசியல் பிரச்னைகளை மறந்து நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல அனைவரும் முன்வரவேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பதற்கே இந்த இடத்துக்கு வந்தேன்.

வங்குரோத்து நிலையில் இருந்த நாடு தற்போது அதில் இருந்து மீள ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மே, ஜூன் மாதமளவில் கடன் பெற்ற நாடுகளுடன் கைச்சாத்திட இருக்கிறோம். இதன் மூலம் எமது நாடு வங்குரோத்து அடைந்த நாடு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அத்துடன், இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு 2020 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டது. அதன் காரணமாக நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்தோம். என்றாலும் தேர்தலில்
நாங்கள் உண்மை விடயத்தை மக்களுக்கு தெரிவிப்போம். இதன் மூலம் சில காலம் செல்லும் போது எங்களுக்கு அரசாங்கத்தை அமைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் தெரிவிதேன்.

ஆனால், எனது கருத்துக்கு சிலர் இணங்கவில்லை. அதனால் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டனர். ஆனால், நாங்கள் எமது தேர்தல் பிரசாரத்தில் பல உண்மைகளை தெரிவித்தோம். அதாவது 2023ஆகும் போது நாடு 7 இலட்சம் கோடி ரூபாயை
இழக்கும் அதேநேரம் 3 இலட்சம் கோடி ரூபாய் எமக்கு தேவைப்படும் எனத் தெரிவித்தோம். அதுவே தற்போது ஏற்பட்டது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெரிவித்த விடயங்களையும் திரையில் காட்சிப்படுத்தினார். அத்துடன் காலி முகத்திடலுக்கு அநுரகுமார மற்றும் சஜித்
பிரேமதாச சென்றபோது அவர்களை அங்கு தாக்க முற்பட்ட காட்சிகளையும்
திரையிட்டு பழைய சம்பவங்களையும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

மேலும் நாடு வங்குரோத்து அடைந்தபோது – காலி முகத்திடலில் இளைஞர்கள் போராட்டம் நடத்திய போது – நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. சஜித், அநுர
அவர்கள் முன்வராதது தவறு இல்லை.

ஏனெனில், காலிமுகத்திடலுக்கு அன்று செல்ல முடியாமல் போன இவர்களுக்கு
எப்படி நாட்டை பொறுப்பேற்று நடத்தமுடியும்.

அதனால் யாரும் முன்வராத நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ் என்னைப்
பொறுப்பேற்குமாறு தெரிவித்தார்.

அதன் பிரகாரமே நான் பொறுப்பேற்றேன். அதன் பின்னர் ஜூலை 9 காலிமுகத்திடல் இணைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர் இதன் போது அவர் என்னை விரட்டவா அல்லது கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டவா வந்தார்கள் என தெரியாது.

என்னையும் பிரதமர் பதவியை விட்டு செல்லுமாறு தெரிவித்தார்கள்.

என்றாலும் கோட்டாபய ராஜபக்ஷ் சென்ற பின்னர் – பதில் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் – ஐக்கிய மக்கள் சக்தி அனைவரும் என்னுடன் இணைவார்கள் என்றே நான் நினைத்தேன். அவ்வாறு அவர்கள் இணைந்தால் பொதுத் தேர்தலுக்கு சென்று நாங்கள் அனைவரும் அரசாங்கம் அமைத்து நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்லவே நினைத்தேன்.

ஆனால், அவர்கள் என்னுடன் இணைந்து செல்ல மறுத்தார்கள். ஏனெனில், மகிந்த ராஜபக்ஷ்வுடன் நான் இருப்பதால் என்னுடன் இணைந்து செயல்பட முடியாது என்றார்கள்.
ஆனால், தற்போது மகிந்தவுடன் இருந்த ஜீ. எல். பீரிஸ், நாலக கொடஹேவா அவர்களுடன் இருக்கிறனர். ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடமில்லை. நாலக கொடஹேவாவின் ஆலோசனையின் பிரகாரமே அங்கும் எல்லாம் நடைபெறுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள் அவர்களுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தேன்.

அரச நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டிசில்வா இதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால், இறுதி நேரத்தில் நாலக கொடஹேவாவின் ஆலோசனையைகேட்டு, இந்த சந்திப்புக்கு வரமுடியாது என எதிர்கட்சி எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

எனவே, இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கத்தில் இருந்து நாங்கள் விடுபட்டு நாட்டை முன்னேற்ற அனைவரும் முன்வர வேண்டும். அதனால் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பழைய விடயங்களை மறந்து, மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டும். சிலர் எம்முடன் ஏற்கனவே இணைந்துகொண்டுள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் – என்றார்.

Share This Article