இந்த வருடத்தில் இதுவரையான நாள்களில் மட்டும் 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். இவர்கள்
அனைவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்
உதயகுமார அமரசிங்க மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டில ஆயிரத்து 232 சிறுவர் பாலியல் வன்புணர்வுகள் பதிவா கின. 2023இல் இது ஆயிரத்து 497 சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், கடந்த செப்ரெம்பர் 168 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகினர். இதில், 16 வயதுக்குட்பட்ட 110 முதல் 112 வரையிலான சிறுமிகள் கருத்தரித்தனர்.
நீதிமன்றில் பதிவாகியுள்ள வழக்குகள் அடிப்படையில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிலர் அவர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்து வந்த பின்னரும் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவ்வாறான நபர்கள் தொடர்பில் சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான சிறார் வன்புணர்வுகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – என்றும் கூறினார்.