வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி ஏற்பாடுகளைச் செய்வதற்காக அங்கு சென்ற ஆலய பூசகர் உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தின் அனுமதிக் கட்டளையுடன் வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட பூசை ஏற்பாடுகளை செய்வதற்காக நேற்று உழவு இயந்திரத்தில் ஆலயத்துக்கு சென்ற போதே அந்த சூழலில் வைத்து பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
முன்னதாக, இன்றைய தினம் மகா சிவராத்திரி தின விசேட பூசை – வழிபாட்டை மேற்கொள்ள பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.
இதையடுத்து, அவர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.
இதை ஏற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆலய விவகாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட – தொல்பொருள்களுக்கு சேதம் ஏற்படுத்தாதவாறு பூசை ஏற்பாடுகளை செய்ய முடியும் – என்ற கட்டளையின்படி செயல்பட கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதி வழங்கியது.
இதன்படி, நேற்றைய தினம் மகா சிவராத்திரி விசேட பூசை ஏற்பாடுகளை செய்வதற்காக சென்றபோதே பொலிஸார் பூசகரையும் அவரின் உதவியாளரையும் கைது செய்தனர்.
முன்னதாக, தமிழர்களின் தொன்மை மிகுந்த கோயிலான வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பௌத்த தொல்லியல்கள் காணப்படுகின்றன என்று கூறி அந்த இடத்தில் விகாரை அமைக்க தொல் பொருள் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் செயல்படுகின்றனர்.
இது தொடர்பான வழக்கு வவுனியா நீதி மன்றில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.