அண்ணனின் உடலை ஆராத்தி எடுத்து வரவேற்ற சாந்தனின் தங்கை!

editor 2

சாந்தன் அவர்களின் புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது.

இதன்போது அனைவரது நெஞ்சையும் கலங்கவைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆராத்தி எடுத்து வரவேற்றார்.

இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில் ஒம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது.

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வவுனியாவில் இன்று காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சாந்தனுடைய வருகைக்காக அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக காத்திருந்த நிலையில் இறுதியில் சடலமாகவே வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (4) காலை 10 மணியளவில் ஆரம்பமாகும்.

இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின் பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.

வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.

Share This Article