தமிழகத்தில் உயிரிழந்த சாந்தன் அவர்களின் புகழுடலுக்கு முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்று காலை வவுனியாவில் அஞ்சலி செலுத்த திரண்ட மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார் முயன்றபோது மக்கள் பெருமளவில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்ததால் பொலிஸார் அங்கிருந்து அகன்றதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை,
முல்லைத்தீவின் மாங்குளம் சந்திப்பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக புகழுடல் வைக்கப்பட்டது. அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகான பகுதியில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் சாந்தன் அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தற்போது புகழுடல் அங்கிருந்து யாழ்ப்பாணம் தீருவில் நோக்கி எடுத்துவரப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை தீருவிலில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று மாலை வேளை, புகழுடல் அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
நாளை வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று புகழுடல் எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடாகியுள்ளது.