‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, தேர்தல் ஒக்ரோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்.’ என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒக்ரோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசமைப்பில் ஏற்பாடு இல்லை. அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா என என்னால் கூற முடியாது. அவ்வாறு நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு முடியும்.
அதற்கான சட்டப்பூர்வ அனுமதி அவருக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும்,
குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் ஊடாக பொதுத்தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் நீதி அமைச்சர் என்ற வகையில் நானோ அல்லது அமைச்சரவையில் வேறு எவரோ யோசனை எதையும் முன்வைக்கவில்லை. அதற்கான உத்தேசமும் இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் அது ஜனநாயக ரீதியிலான பொறிமுறையும் அல்ல. சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல.
1982 இல் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பால் ஏற்பட்ட கறுப்பு புள்ளி இன்னும் மாறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.