வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நேற்று உருவாகிய தாழமுக்கம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை இரவு (25.11.2024) அல்லது 26.11.2024 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அம்பாறைக்கு தென் கிழக்காக 422 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 25.11.2024 இரவு அல்லது 26.11.2024 அன்று அம்பாறைக்கு அருகாக வந்து பின்னர் 26.11. 2024 இரவு 27.11.2024 அல்லது காலை வடக்கு நோக்கி நகர்ந்து 28.11.2024 அன்று வடக்கு மாகாணத்திற்கு அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் எப்பகுதியில் கரையைக் கடக்கும் என தற்போது வரை கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் தற்போதைய நிலையில் இது சென்னைக்கும் நெல்லூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு மிக அருகாக நகரும் என்பதனால் மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
கிழக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைக்கும் கன மழை எதிர்வரும் 29.11.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை (25.11.2024) முதல் கிழக்கு மாகாணத்திற்கு மிகக் கன மழை கிடைக்க தொடங்கும்.
குறிப்பாக நாளை அதிகாலை 5.00 மணி முதல் அம்பாறைக்கும், 8.00 மணி முதல் மட்டக்களப்பிற்கும் 11. 00 மணி முதல் மிகக் கன மழை கிடைக்க தொடங்கும்.
நாளை காலை முதல் படிப்படியாக காற்றின் வேகம் கரையோரப் பகுதிகளில் அதிகரிக்க தொடங்கும்.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மிதமான மழை நாளை முதல் தீவிரமடையும். நாளை முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்க தொடங்கும். குறிப்பாக 26.11.2024 முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடக்க தொடங்கும். இம் மழை 30.11.2024 வரை கிடைக்கும்.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை பிற்பகல் முதல் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உறவுகளே…
இந்த புயல் முன்னெச்சரிக்கையை சாதாரணமாக கருத வேண்டாம்.
எதிர்வரும் 26ம் திகதி முதல் 28.11.2024 வரை கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதியிலேயே இப்புயல் நகரும். கரையிலிருந்து சராசரியாக 80-120 கி.மீ. தூரத்திலேயே இப்புயலின் கண் நகரும்.
ஆனால் அதன் உள் மற்றும் வெளி வலயங்கள் 25, 26 மற்றும் 27 ம் திகதிகளில் கிழக்கு மாகாண நிலப்பகுதியில் இருக்கும்.
26,27 மற்றும் 28 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் (இந்த புயலின் நகர்வு வேகத்தை பொறுத்து இந்த திகதிகள் சில வேளைகளில் மாற்றமடையலாம்). பொதுவாக கட்டமைப்பு ரீதியாக புயலுக்கு பகுதிகள் உண்டு.
1. கண்/ மையப்பகுதி (Eye)- இதனை அமைதி வலயம் என்று அழைப்பர். புயலின் மையப்பகுதி ஒரு இடத்தை கடக்கும் போது காற்றின் வேகமும் மழையும் குறைவாக இருக்கும்.
2. உள் வலயம்/ சுழிப்பு வலயம் (Eye Walls)- புயலின் மிக ஆபத்தான பகுதி. இப்பகுதியில் மிக கன மழையும், மிக வேகமான காற்றும் வீசும். அத்தோடு இப்பகுதியிலேயே காற்று சுழற்காற்றாகவும் வீசும். எதிர்வரும் 25.11.2024 பின்னிரவு முதல் இப்பகுதியே எமது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் மேல் நிலவும்.
3. வெளி வலயம்/ மழை வலயம் (Rainbands) – இவ்வலயத்தில் வரும் பகுதிகளுக்கு கன மழை கிடைக்கும். நாளை முதல் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளும் 26 முதல் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளும் இதனுள் அடங்கும்.
இந்த புயலின் உள் வலயத்திற்குள் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் வருவதனால் மிகப் பெரிய பாதிப்புக்களை இரண்டு மாகாணங்களும் எதிர்கொள்ளும்.
இன்று முதல் (24.11.2024 காலை 6.00 மணி) எதிர்வரும் 27 .11.2024 இரவு 12.00 மணி வரை கிழக்கு மாகாணம் திரட்டிய மழைவீழ்ச்சியாக 500 மி.மீ. இற்கும் கூடுதலான மழையைப் பெறும்.
வடக்கு மாகாணம் நாளை (25.11.2024) காலை 6.00 மணி முதல் 29.11.2024 காலை 6.00 மணி வரை திரட்டிய மழை வீழ்ச்சியாக 500மி.மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சியை பெறும்.
நாளை முதல் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசும். காற்றின் வேகம் 26.11.2024 முதல் மேலும் அதிகரிக்கும்..
கடற்பகுதிகள் மிகக் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
அரசாங்கமும் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றது. இதன் அர்த்தம் மிகப் பெரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதே. பொதுவாக அனர்த்த நிலைமைகளில் அதன் தீவிர தன்மையை பொறுத்து மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என நிறக் குறியீடுகளை பயன்படுத்துவார்கள். சிவப்பு என்பது நாம் அதியுச்ச தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே.
போதுமான தயார்ப்படுத்தலோடு இந்த புயலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாண, மாவட்ட பிரதேச நிர்வாக அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் துறைகள் சார்ந்து மக்களுக்கு உதவுவார்கள்.
இயற்கை அனர்த்தங்களை நாம் நிறுத்த முடியாது. ஆனால் நாம் முன்னேற்பாட்டுடன் இருந்தால் அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்க முடியும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற பின்னர் இந்த புயல் தொடர்பான பிந்திய நிலைமைகளைப் பற்றிய தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில்( குறைந்தது ஒரு மணித்தியால இடை வெளியில்)உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.
-நாகமுத்து பிரதீபராஜா-