கூட்டமைப்பையும் உள்ளடக்கி அமைகிறது தேசிய அரசாங்கம்?

editor 2

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று சனிக்கிழமை அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்கவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல கட்டமாக பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணி எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கில் தமிழ்க்கட்சிகள், மலையக அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையவுள்ளதாகவும் இந்த கூட்டணியை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பு காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலையக அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஏற்கனவே ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

மேலும், மலையகத்தின் பலம் வாய்ந்த அரசியல் தலைவரான பழனி திகாம்பரத்தை இந்தக் கூட்டணிக்குக் கொண்டு வருவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இந்த அரசியல் கூட்டணியை கட்டி யெழுப்பிய பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நியமிக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் இந்தக் கூட்டணியின் பலமான தலைவர் ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்தக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவது
தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் பல பலமான அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல அரசியல் தலைவர்கள் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article