இலங்கை அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் போதிய சமூகப் பாதுகாப்பின்மை ஆகியவை நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளிலிருந்து பல இலங்கையர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுக் கூடல் சுதந்திரத்தை தொடர்ந்து ஒடுக்குகின்றது.
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் கொள்கைகளை பின்பற்றுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.
மில்லியன் கணக்கான இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கப் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக சுமையை கொடுக்கும் கொள்கைகளை பின்பற்றுகிறது.
அதே நேரத்தில் பொறுப்புக்கூறக்கூடிய, ஜனநாயக முடிவெடுப்பதற்கு அவசியமான குரல்களை அடக்குவதாக மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நிலைமைக்கு, இலங்கை அரசாங்கம் பதிலளிப்பது நாட்டில் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 17 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
அத்துடன், 5 வயதுக்குட்பட்ட சிறார்களில் 31 சதவீதமானோர் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத் திட்டம், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதில், கவனம் செலுத்தியது.
எனினும் கட்டமைக்கப்பட்டபடி அது குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மீதான சுமையாக மாறியுள்ளதாக மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்
மதத்தலங்கள் உட்பட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சொத்துக்களை குறிவைக்கும் ‘நில அபகரிப்பு’ கொள்கையை அரசாங்க அமைப்புகள் பின்பற்றி வருகின்றன.
பயங்கரவாதச் தடைச் சட்டம் திருத்தப்படுகிறது. எனினும் இது அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பொதுமக்களின் கருத்துக்களை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.