நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையால் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.