விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வரத் தாமதமானதால் அவரின் உயிர் பறிபோனது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை அனலைதீவில் இடம்பெற்றுள்ளது. இதில், அதே இடத்தை சேர்ந்த தர்சன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த இளைஞர், புளியந்தீவில் இருந்து உழவியந்திரத்தினை தனியாக செலுத்தி வந்துள்ளார். வரும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரிய வராத நிலையில், உழவியந்திரம் நின்ற இடத்தில் இருந்து ஒருசில மீற்றர்கள் தூரத்தில் இளைஞர் படுகாயமடைந்து காணப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னரே இளைஞரை கண்ட ஊரவர்கள் அவரை அங்கிருந்து தூக்கிச் சென்றனர்.
அத்துடன், அவரை ஊர்காவற்துறை மருத்துவமனையில் சேர்ப்பிப்பதற்காக அம்புலன்ஸ் படகுக்கும் அறிவித்துள்ளனர்.
படகு வரத் தாமதமாகியிருந்தது. இதனால், கடற்படையினரின் விரைவு படகு மூலமாக ஊர்காவற்துறைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
எனினும், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே இளைஞர் உயிரிழந்து விட்டார்.
அனலைதீவில் போதிய மருத்துவ வசதிகளை செய்து தருமாறு பல வருடங்களாக தாங்கள் கோருகின்ற போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.
இதனாலேயே இந்த உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. இது விடயத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.