இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெருமளவிலான அபின் மற்றும் கேரள கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகிந்த குணரட்ன, யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சுள செனரத், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கமகே மற்றும் காங்கேசன்துறை பிராந்தியம் இரண்டுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இலங்கைக்கோண் ஆகியோரது வழிகாட்டுதலில், பருத்தித்துறை பொலிசாரினால் குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தக் கடற்கரை பகுதியில் படகில் வந்த மர்ம நபரகளால் பொதி ஒன்று வீசப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த பேததைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் பருத்தித்துறை பொலிசார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த பொதியில் தலா ஒவ்வொரு கிலோ நிறையுடை 48 பொதிகளில் 48 கிலோ அபின் போதைப்பொருள் மற்றும் தலா இரண்டு கீலோ நிறையுடைய 14 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 28 கிலோ கேரள கஞ்சா என்பன இதன்போது மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட அபின் போதைப் பொருள் ஒரு கிலோ ரூ. ஒரு கோடி 80 லட்சம் என்ற அடிப்படையில் கைப்பற்றப்பட்ட மொத்த அபின் போதைப் பொருளின் பெறுமதி ரூபா 86 கோடி 40 லட்சம் எனவும், ரூ.44 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருப்பதாக பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தெரிவித்தார்.