வடக்கின் நகர் பகுதிகளுக்கு குதிரைகள் மற்றும் கழுதைகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தின் நகர் பகுதிகளில் பல குதிரைகள் கட்டாக்காலிகளாக கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளன.
அதேவேளை சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு கழுதைகளும் கொண்டுவரப்பட்டு விடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று அண்மையில் நல்லூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தது.
அதேவேளை,
முல்லைத்தீவிலும் கழுதைகள் இரண்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர் வைத்தியர் உதயசீலன் கற்கண்டு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமீப காலங்களாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குதிரைகள், கழுதைகள் போன்றன கொண்டு வரப்பட்டு விடப்படுகின்றன. அவற்றிற்கான வாழ்விடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு நகரப்பகுதிக்குள் விடப்படுகின்றன.
அவை உணவு தேடி அலைந்து இறுதியில் வீதியில் வீசப்படும் கழிவுகள், குப்பைகளை உண்கின்றன. வாழிடம் நீக்கப்பட்டு வீதிக்கு கொண்டு வரப்படும் இவ்விலங்குகள் வீதி விபத்துக்களாலும், பொலித்தீன் போன்ற கழிவுகளை உண்பதாலும் இறந்து போகின்றன. அத்துடன் கட்டாக்காலி நாய்களால் கடிபடும் நிலையில் உள்ளன. அண்மையில் நல்லூர் பகுதியில் கழுதை ஒன்று வீதி விபத்தில் இறந்து போனது.
ஏற்கனவே இரண்டு பெரிய மற்றும் ஒரு குட்டி குதிரைகள் விடப்பட்டு இருந்த நிலையில் மேலும் நான்கு பெரிய குதிரைகள் நகருக்குள் விடப்பட்டு இருக்கிறது.
இவற்றை யார் கொண்டு வந்து விடுகிறார்கள். யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் இவ்வகையான குதிரைகள் நெடுந்தீவில் மட்டுமே உள்ளன. விலங்குகளை வாகனங்களில் கொண்டு செல்வது தொடர்பில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் யாரால்? எதற்காக? விடப்படுகிறது..
முகாம்களில் வளர்க்ப்பட்ட இவை முகாம்கள் கைவிடப்படுவதால் வீதிக்கு வந்திருக்கலாம் என சிலர் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியாயினும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விலங்குகளை அவை வாழ்தகவுள்ள இடங்களிற்கு கொண்டு சென்று பாதுகாக்க வேண்டும். இல்லை எனில் உயிர்ம நேயர்கள்/ ஆர்வலர்கள் இவற்றிற்கான பாதுகாப்பான மையங்களில் இவற்றை விடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.