ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் புதுதில்லியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இதற்குரிய பிரத்யேக அஞ்சல் தலையை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே. பி. நட்டா வெளியிட, இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். மேலும் இந்நிகழ்விற்கு பார்வையாளராகவும், சிறப்பு அதிதிகளாகவும் இலங்கையிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் புது தில்லிக்கு வருகை தந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது,
”இலங்கையிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான தமிழர்களுக்கு முறையான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகள் தரப்பட்டன. அவை உடனடியாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றப்பட வேண்டும்.
வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அவர்களில் பலரும் இங்கு குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் சிலர் சட்டவிரோதமாகவும் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பலர் இங்கு குழந்தை பெற்றிருக்கிறார்கள். வேறு சிலருக்கோ. இலங்கையிலும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இங்கும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருக்கிறது. ஆகையால் அப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக முகாம்களில் பிறந்தவர்களுக்கும், தீவிர குற்ற பின்னணி இல்லாதவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இதற்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.