மஹிந்த தரப்பின் எம்பிகள் 71 பேர் ரணிலுக்கே ஆதரவு என்கிறார் நிமல் லன்சா!

editor 2

சிறீலங்கா பொதுஜன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு ஆனால், தற்போது அந்த கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 71 பேரைக் கொண்ட புதிய கூட்டணியை அமைத்திருக்கின்றோம். இந்தக் கூட்டணி ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடன் இணையாது. மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்து,
அந்தக் கூட்டணிக்கான பணிமனையை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு நிச்சயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டிய ஆண்டாகும் என்பதோடு,
அது ஜனாதிபதி தேர்தலாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

தேவையேற்படின் ஜனாதிபதி நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைக்கூட நடத்தலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாகவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பே முதலில் வெளியாகும் என்பது எனது நிலைப்பாடாகும்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு ஆனால், தற்போது அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 71 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அந்த 71 பேரை உள்ளடக்கியே புதிய கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியை எம்மால் நிறுவ முடியும்.

இன்றிலிருந்து எமது புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதி தேர்தலின் போது பரந்த அணியாக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் எமது அணி பலமான அணியாக செயல்பட்டு வருகின்றது.

உண்மைகளையும் பொய்களையும் மக்களுக்கு கூறும் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் தேர்தல் வரவுள்ளது.

எந்தவொரு கட்சிக்கும் வாக்குறுதிகளை வழங்க முடியும். ஆனால் அவை அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. பணத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது. இன்றிலிருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். மக்கள் தூற்றுவார்கள் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் நன்கு அறிவர். மக்கள் எவ்வளவு விமர்சித்தாலும் உண்மைகளையும், யதார்த்தத்தையும் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ வந்து வரிகளை குறைத்த பின்னர் என்ன நடந்தது? அது அனைவருக்கும் நன்றாக இருந்தது.

ஆனால், அதன் பின்னர் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை. எமது பயணம் பொருளாதார திட்டத்துடன் கூடியதாகும். ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்களும்
சிறப்பாகக் காணப்படுவதால் நாம் அவரை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாயின் மக்களுக்கு சார்பான முடிவுகளை எடுப்பது கடினமாகும்.

இது கடினம் என்றாலும், இந்த உண்மையை நாம் எற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் இன்றிலிருந்து மக்களுக்கு உண்மைகளைக் கூறுவோம்.

இந்தக் கூட்டணி சிறீலங்கா பொது ஜன பெரமுனவுடன் நிற்காது என்பதை நாம் தெளிவாகக் கூறுகின்றோம். நாலக கொடஹேவா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வலது கரம்போன்றவர்.

அந்த சந்தர்ப்பத்தில் வரியைக் குறைக்க வேண்டாம் என்று வழங்கிய ஆலோசனைகளை அவர்
கேட்கவில்லை. தற்போது அவருக்கு என்னவானது? அரசியல் சார்பற்ற ஒருவரை ஜனாதிபதியாக்குவதாகக் கூறி நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளனர். பொதுஜன பெரமுனவினாலோ, ஐக்கிய மக்கள் சக்தியாலோ ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து கூட்டங்களை நடத்த முடியாது.

தற்போது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஜே.வி.பிக்கும் நாம் சவாலான கூட்டணியாக இருப்போம். மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து 22 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றி பெறக் கூடிய பலம் மிக்க கூட்ட ணியாக நாம் வலுப்பெறுவோம் – என்றார்.

Share This Article