வடமராட்சி கிழக்கில் இரண்டு மீன்பிடிப் படகுகளும் வலைகளும் தீக்கிரை!

editor 2

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – கேவிலில் இரு மீனவர்களுக்கு சொந்தமான இரு படகுகள் மற்றும் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் என்பவை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கேவில் – பாலையடி – மேற்கு களப்பில் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேவில் கடற்றொழிலாளர் கூட்டத்தில் இறால்களின் இனப் பெருக்கத்துக்காகவும் அவற்றின் வளர்ச்சி அதிகரிப்புக்காகவும் இறால் கூடு கட்டுவதை தற்காலிகமாக தடை செய்திருந்தது.

இதை மீறி தொழிலில் ஈடுபட்ட பலரின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில், விஷமி ஒருவர் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்துள்ளார் என்று கேவில் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

க. மதிவாணன், க. சிவம், ஆகியோரின் படகுகள் மற்றும் வலைகளே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share This Article