சிறைச்சாலைகளில் இட நெருக்கடி நிலை!

editor 2

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருவதால் தற்போது சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாடளாவிய ரீதியில் முப்படைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின்
கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக சிறைச்சாலைகளில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் உள்ள 28 சிறைச்சாலைகளிலும் 2, 255
இற்கும் அதிகமான புதிய கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை ஆரம்பிக்க முன்பதாக சிறைச்சாலைகளில் 28ஆயிரம் கைதிகளே
தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பொதுவாக இந்த நாட்டில் சிறைச்சாலைகளில் 11,000 பேரைதடுத்து வைக்க முடியும்.

அதேநேரம் பெண் கைதிகளின் எண்ணிக்கையும் 800 இல் இருந்து 1,124 வரை அதிகரித்திருக்கிறது. அத்துடன் சிறைச்சாலைகளின் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக மில்லனிய பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி தெரிவு செய்து அங்கு கட்டடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் பாதுகாப்பான கட்டடங்களை தெரிவு செய்து, சிறைச்சாலைகளில்
இருக்கும் மேலதிக கைதிகளை குறித்த கட்டடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்’-என்றார்.

Share This Article