தமிழ் – முஸ்லிம் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட கூட்டணி!

editor 2

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியமைத்து 2024 இல் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிடுவோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை இனி ஆதரிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் குடியரசின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

2024 தீர்மானமிக்கது. 2019இல் 69 இலட்ச மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறின் பிரதி பலனை ஒட்டு மொத்த மக்களும் தற்போது எதிர்கொள்கிறார்கள். பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என ராஜபக்ஷர்களும் அவர்களின் சகாக்களும் இனி குறிப்பிட முடியாது.

ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என உயர்நீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். விசேட மருத்துவர்களின் வெளியேற்றத்தால் நாட்டின் சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிகளை நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் ரீதியில் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பலர் வரிசையில் நிற்கின்றனர் என்ற ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

2019ஆம் ஆண்டும் இவ்வாறு கூறித்தான் அவர்கள் கோட்டாபய ராஜபகஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார்கள்.

இதன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டும் அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள்.

2024 தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் – என்றார்.

Share This Article