பண்டிகை காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் 24 மணிநேரமும் இதற்கான சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் அதிகளவான விபத்துகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்ட நிலையில், பெறுமதியான உயிர்களை பாதுகாக்கும் வகையில், இந்த விசேட சுற்றிவளைப்பு இடம்பெறுகின்றது.
எனவே, பொலிஸாரின் உத்தரவுகளுக்கு அமைய, அவர்களது சோதனை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது போதைப்பொருட்கள் தொடர்பில் ஆதாரப்பூர்வமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தெளிவூட்டல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அண்மைய காலமாக ஒரு சில பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளில் இருந்து சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருளுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாகாண ஆளுநர்களுக்கும், கல்விப் பணிப்பாளர்களுக்கும்; பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.