ஆளும் பொதுஜன முன்னணி கட்சிக்குள் பஷில் ராஜபக்ஷ – நாமல் ராஜபக்ஷ தரப்புக்களுக்கு இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு அண்மையில் இடம் பெற்றிருந்தது. இதில் மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கட்சியின் தலைவராக மீண்டும் மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். மாநாடு நிறைவடைந்த பின்னர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது என கூறியிருந்தார்.
இந்த மாநாடு முடிந்த நிலையில், கட்சியின் நிறைவேற்று சபையும் கூடியிருந்தது. இதன் போது கட்சியின் முக்கிய பதிவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில், கட்சியின் செயலாளராக சாகர காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், முக்கியப்பதவியான தேசிய அமைப்பாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
முன்னதாக கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தப் பதவிவெற்றிடமாகியுள்ளது.
இந்நிலையிலேயே, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு பசில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருட மாநாடு மற்றும் நிறைவேற்று சபையில் நாமலின் பெயர் அந்த பதவிக்கு முன்மொழியப்படவிருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக அந்த பிரேரணைக்கான அங்கீகாரம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.