13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக் குழுவை சட்டமாக்குவதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ்க் கட்சிகள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன் மற்றும் கோவிந்தன் கருணாகரம், குலசிங்கம் திலீபன் ஆகியோர் இந்த சந்திப்பில்
பங்கேற்றிருந்தனர்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கருத்துரைத்துள்ளதுடன், அதற்கு தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற
உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.