ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு மீண்டும் அதே பதவியை வழங்க வேண்டுமென கட்சிக்குள் ஒரு குழு கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.
என்றாலும், முன்னாள் அமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென மற்றுமொரு குழு ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஜனவரி மாத இறுதிக்குள் கட்சியில் பல மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளதாகவும், மேலும் பல பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்சி சார்ப்பற்ற பொது வேட்பாளராக களமிறக்கக் கூடிய தகுதியுடைய ஒரே வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே எனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது