பல்வேறு குற்றச் செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு – அமைச்சர் நளிந்த அறிவிப்பு!

பல்வேறு குற்றச் செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு - அமைச்சர் நளிந்த அறிவிப்பு!

Editor 1

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் (சி.சந்திரகாந்தன்) பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றமை
தெரியவந்துள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த விடயங்கள் தெரிய வந்தன என்று நேற்றைய தினம் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ‘கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தப்பட்ட விடயத்துடன் பிள்ளையான் தொடர்புபட்டுள்ளார் என்ற விடயம் மாத்திரமே பலருக்கு தெரியும். எனினும், அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் பல சாட்சியங்கள் கிடைத்தவண்ணமுள்ளன. அந்த விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவார்கள்.

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறான சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.

ஒருசில குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவை. அவ்வாறான அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதலால் துணைவேந்தரின் கடத்தலுடன் மாத்திரம் பிள்ளையான் தொடர்புபட்டுள்ளார் என்று தீர்மானித்து விடக்கூடாது – என்றார்.

அத்துடன், ‘ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா’, என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘பிள்ளையானை சந்தித்து வந்ததன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை என உதயகம்மன்பில கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படும்
போது இந்த வலையமைப்பு மற்றும் அதன் விசாலம் குறித்து அறிந்து கொள்ளமுடியும்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன. எனவே, பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா?
என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் – என்றார்.

Share This Article