முல்லைத்தீவில் கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள பொதுமக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மக்கள் சார்பில் மன்றில் வாதிட்ட சட்டத்தரணி சி. தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுண் டிக்குளம் பிரதேசத்தை அண்மித்த பகுதி களில் வசிக்கும் மக்களுக்கு எதிராக வன ஜீவராசிகள் திணைக்களம் 130 நபர்களுக்கு எதிராக வழக்குகளை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
அவர்கள் அத்துமீறி குடியிருந்தனர், தாவரங்களை அழித்தனர் என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். சுண்டிக்குளம் பிரதேசத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கு எதிராக – இதில் இறந்தவர்களும் அடக்கம். அத்துடன், ஒருவருக்கு எதிராக மூன்று வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சரியான வரைபடங்களோ, எந்த காலப்பகுதியில் அப்பகுதி சரணாலயமாக இருந்தது என்பதற்கான எந்தவித தகவல்களோ இல்லாத நிலையில் போலியான விசாரணையை நடத்தி வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவை திணைக் களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
அடிப்படை ஏதுக்கள் அற்ற நிலையில் – மக்களின் நில உரிமையை பறிக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.
வழக்கு விசாரணையில், வழக்கு தொடுநர் தரப்பு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நீதிவானால் பணிக்கப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வருடம் மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது – என்றும் கூறினார