விடுதலைப்புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை – அமைச்சர் சாமர!

editor 2

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட் டமைப்பின் 9 எம். பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரின் செயல்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. இவர் சிங்கள பெண்ணை மணக்கவுள்ளார். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டு விவகாரங்கள் மற் றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம். பி., ‘என்னை புலி என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறேன்’, என்று கூறினார்.

இதனை சுட்டிக்காட்டி உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், ‘சபையில் பேசிய சாணக்கியன் ‘நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்” என்று குறிப்பிட்டார்.

அவருக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மகிந்த ராஜபக்ஷ சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பதவி பெற்றார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டார். அது மட்டுமல்ல, இவர் கண்டியில் உள்ள சிங்கள பாடசாலையில்தான் கல்வி கற்றார். சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்கள பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார். எனவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒன்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. ஏனெனில், அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள் – வாழ்ந்தார்கள். ஆனால், சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது – என்றார்.

Share This Article