யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் கடந்த இரவே இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் மயிலிட்டி துறைமுகப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.
அவர்கள் பயன்படுத்திய படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றுடன் அவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே,
இந்திய வெளியுறவு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய நாள் இராமேஸ்வரம் பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில் அங்கு கூடிய மீனப்பிரதிநிதிகளும் மக்களும் அவர் இருந்த வீட்டினைச் சுற்றிவளைத்திருக்கின்றனர்.
இதனை அடுத்து நிர்மலா சீதாராமன், இலங்கையின் உயர்மட்டத்துடன் பேச்சு நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.
இதன் தொடராக,
இந்திய மீனவர்கள் 22 பேரையும் உடனடியாக விடுவிக்க கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
மீனவர்களை சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இறால், மீன்களை மீள ஒப்படைக்குமாறு இந்திய மீனவர்கள் கோரியுள்ளனர்.
அவ்வேளை,
மீன்களை ஒப்படைக்குமாறு கடற்படை அதிகாரி வலியுறுத்தியபோது அவை அங்கு காணப்படவில்லை என்றும், அதன் பின்னர் அதிகாரி விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த இறால் மற்றும் மீன்கள் மீளவும் இந்திய மீனவர்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் சர்வதேச கடற்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் பருத்தித்துறைத் தகவல்கள் எமக்குத் தெரிவித்தன.