விடுதலைப் போராட்ட காலத்தில் வெளியாகியிருந்த பெருமளவான திரைப்படங்கள் மற்றும் வீதி நாடகங்களில் முக்கிய பங்காற்றி நடித்த பிரபல கலைஞர் மாணிக்கம் ஏரம்பு நேற்று காலமானார்.
யாழ்ப்பாணம் அராலியைச் சேர்ந்த ஏரம்பு யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விடுதலைப்போராட்டக் கலைப்படைப்புக்களில் பங்கேற்றிருந்தார்.
காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, இராமர் கதை, சத்தியவான் சாவித்திரி, பண்டாரவன்னியன் போன்ற யாழ்ப்பாணத்து மரபுவழிக் கூத்துக்களில் சிறந்து விளங்கிய அவர் போர்க்காலப் படைப்புகளில் தன்னை இணைத்துப் பயணித்தார்.
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வன்னிக்கு இடம்பெயர்ந்த அவர் இறுதிப்போர் முடிவுறும் வரையில் அங்கு வாழ்ந்திருந்தார்.
அதன் போது தெரு வெளி அரங்குகளில் நடைபெற்ற நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
ஜெயசிக்குறு நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் இடம்பெற்ற வீதி நாடகம் ஒன்றில் ஜெயசிக்குறு சண்டியன் பாத்திரம் ஏற்று நடித்து அனைவரதும் பாராட்டைப்பெற்றிருந்த அவர் பின்னாட்களில் “ஜெயசிக்குறு சண்டின்” என்று அழைக்கப்பட்டார்.
விடுதலைப் போராட்டகாலத்தில் வெளியாகிய பெருமளவான முழுநீளத் திரைப்படங்கள் மற்றும் ஏராளமான குறும்படங்களிலும் பங்கேற்று நடித்திருந்தார்.
குறிப்பாக காற்றுவெழி, உயிர்ப்பூ, கடலோரக்காற்று, காற்றுவெளி, சின்னவிழிகள், குருதிச்சன்னங்கள், அம்மா நலமா? உட்பட்ட ஏராளம் போர்க்காலப் படைபுக்களில் அவர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட கலைஞர்களில் ஏரம்புவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏரம்பு கலைஞராக மட்டுமல்லாது சிறந்த சாரதியாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதர்சனம் பிரிவில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிருந்தார்.
போருக்குப் பின்னரும் அண்மையில் வெளிவந்த பல படங்களிலும் அவர் நடித்திருந்தார். அவருடைய இழப்பு ஈழத்தமிழ் மக்களின் திரைத்துறை மற்றும் அரங்கத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்கின்றனர் சக கலைஞர்கள்.