அரச சுகாதார சேவையில் தாதியர்கள் 2519 பேர் புதிதாக இன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அலரி மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சரால் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
குறித்த நிழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண,
தாதியர் தொழிலைப் பொறுத்தமட்டில், எனது வாழ்நாளில் இலஞ்சம், ஊழல், மோசடி, முறைகேடுகள் பற்றி எந்த முறைப்பாடுகளையும் கேட்டதில்லை.
உலகிலுள்ள சகல தொழில்களிலும் தாதியர் என்பது மறுக்க முடியாத ஒரு சிறந்த தொழிலாகும். அந்தச் சிறப்பைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.
1948 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் உட்பட 400 வைத்தியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது சுகாதாரத்துறையில் சுமார் 300 தாதியர்கள் இருந்தனர்.
75 வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறையானது தாதியர்கள் 43 ஆயிரம் பேர், வைத்திய அதிகாரிகள் 23,000 பேர் மற்றும் 8,000 துணை வைத்தியர்கள் உட்பட ஒரு இலட்சம் பேரைக் கொண்ட பாரிய துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.
இத்துறை சிறந்த சேவைகளை வழங்கும் தொழில்சார் சேவையாக மாறியுள்ளதுடன், அதன் பரிணாம வளர்ச்சியுடன், குறைந்த செலவில் உலகில் சிறந்த தரமான சுகாதார சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாக இன்று இலங்கை அடிக்கடி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குறிப்பிடப்படுகின்றது.
சேவை மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்பு அந்த பெருமைக்கு உரியதாகும் என்றார்.