பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் 0112 112 718 என்ற எண்ணுக்கு அழைத்து உணவின் தரம் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஃப்லாடாக்சின் என்பது ஒரு நச்சு இரசாயனமாகும். அதிக அளவு அஃப்லாடாக்சின்கள் கடுமையான விஷத்திற்கு (அஃப்லாடாக்சிகோசிஸ்) வழிவகுக்கும், இது பொதுவாக கல்லீரலுக்கு சேதம் ஏற்படுவதால் உயிருக்கு ஆபத்தானதாக அமையும். பொதுவாக அசுத்தமான உணவுகளில் இந்த அஃப்லாடாக்சின் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.