இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மோஷே ஆபெலுக்கும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவுக்கும் இடையில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சில் வைத்து குறித்த உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், அந்த நாட்டின் விவசாயத் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இஸ்ரேலியப் போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், மேலும் 20 ஆயிரம் பாலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் குளோப்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் 10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களை உடனடியாக விவசாய கைத்தொழில் சேவைகளுக்காக இஸ்ரேலில் பணியமர்த்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் வாரங்களில் இலங்கைப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு வரவுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.