கட்சியை தனது பிடிக்குள் கொண்டுவர சுமந்திரன் முயல்வதாக தவராசா குற்றச்சாட்டு!

editor 2

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டி விட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பெருந் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அவர், உள்ளூராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரப்பட்டபோது, சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து தமிழரசுக் கட்சியை தனிமைப் படுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் அரசியலை விட்டும் விலகப் போவதாகக் கூறிய சுமந்திரன், தற்போது உங்களைப் பதவி விலகச் சொல்வது வேடிக்கையானது என்றும் கே.வி.தவராசா, சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பை சுமந்திரன் திட்டமிட்டு சிதறடித்தமையின் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து உங்களைத் தூக்கியெறிவதே என்றும் கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே உடனடியாகக் கட்சியை மீட்டு தமிழ்த் தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்த் தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்தவேண்டும் என்றும் அதை செய்யாமல் விட்டால் அது இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகம் என்றும் அவர் கூறியுள்ளார். 

Share This Article