நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது, இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின் முக்கியத்தை எடுத்துக்காட்டியதாக சுட்டிக்காட்டிய சீன ஜனாதிபதி, இலங்கை கொண்டுள்ள மத்தியஸ்தமான நிலைப்பாட்டையும் பாராட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டம் என்பவற்றை ‘பெல்ட் எண்ட் ரோட்’ வேலைத்திட்டத்தின் கீழான முதலாவது வேலைத்திட்டங்களாக கருதுவதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை உற்பத்திகளை சீனாவிற்கு இறக்குமதி செய்வதுடன் இலங்கைக்குள் சீன முதலீடுகளை அதிகளவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு நட்பு ரீதியான, நடைமுறை மற்றும் துரித ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாரெனவும் சீன ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.