விஜய் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் லியோ. நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், பிர்யா ஆனந்த், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மடோனா செபஸ்டியன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
குறித்த படம் தொடர்பில் தினமணி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள விமர்சனத்தினை வாசகர்களுக்காகப் பகிர்கிறோம்..
தமிழ் சினிமாவில் இந்தளவு எதிர்பார்ப்பை எந்தத் திரைப்படமும் ஏற்படுத்தியிருக்காது எனும் அளவிற்கு லியோ திரைப்படத்திற்கான விளம்பரங்கள் பெரிய ஆவலை படத்தின் மீது ஏற்படுத்தியிருந்தன. ஒரு பக்கம் இது படத்திற்கு சாதகமாக அமைந்தாலும் அதே அளவு பாதகமான ஒன்றும்கூட. நடிகர் விஜய்க்கு இது வெற்றியா தோல்வியா என்பதைக் காட்டிலும் இயக்குநர் லோகேஷுக்கு இது எந்தளவு கைகொடுத்திருக்கிறது?
லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அதிகம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யும், த்ரிஷாவும் இணைகின்றனர், இயக்குநர் லோகேஷின் எல்சியூ வட்டத்தில் லியோ, முன்னணி நடிகர்கள் பட்டாளம் என நாளுக்கு நாள் இப்படத்தின் விளம்பரங்கள் படத்தை மற்ற படங்களிலிருந்து வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு காஃபி ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் பார்த்திபன் எனும் விஜய்க்கு மிஷ்கினின் கும்பலுடன் மோதல் வருகிறது. அதில் பார்த்தியால் அக்கும்பல் கொல்லப்பட அந்த செய்தி மூலம் பார்த்தியை தெலுங்கானாவில் இருக்கும் போதைப் பொருள் உற்பத்தி கும்பலான தாஸ் அண்ட் கோ அறிகின்றனர். பார்த்தியைத் தேடி தாஸ் (சஞ்சய் தத்) கும்பல் இமாச்சல் பிரதேசம் செல்கிறது. எதற்காக தாஸ் கும்பல் பார்த்தியைத் தேடி செல்கிறது? அவர்களுக்கும் பார்த்திக்கும் என்ன சம்பந்தம்? யார் அந்த லியோ? இதுதான் இத்திரைப்படத்தின் கதை.
நடிகர் விஜய்யின் படம் என்பதைத் தாண்டி இது இயக்குநர் லோகேஷின் படம். தனது முந்தையை திரைப்படங்களில் பயன்படுத்திய பல அடையாளக் காட்சிகளை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். பழையப் பாடல்கள், துப்பாக்கிக் காட்சிகள், உணவு, விலங்குகளுக்கான சிறப்புக் காட்சிகள் என படம் விரிகிறது.
நடிகர் விஜய் தனது வழக்கமான உடல்பாவனைகள் இல்லாமல் புதிதாக முயற்சித்திருக்கிறார். படம் முழுக்க விஜய்யை மையமிட்டே சுழல்வதால் அதற்கேற்ப பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்த்தியாக வரும் அவரின் கதாபாத்திரத்தின் தொடக்கத்திற்கும், எழுச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை ரசிகர்களுக்குக் கடத்த மெனக்கெட்டுள்ளார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். லியோவாக அவரின் இளமை ரசிக்கும்படியாக இருக்கிறது. சிறிதுநேரமே வரும் அக்காட்சிகளில் அக்கதாபாத்திரத்திற்கான வித்தியாசத்தை இன்னும்கூட காட்சிப்படுத்தியிருக்கலாம். நடிகர் விஜய் நல்ல ஆக்ஷன் மசாலா படமாக வந்திருக்கும் லியோவை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
ஒருபக்கம் விஜய்யை கவனித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சாந்தமாக வந்து ஸ்கோர் செய்திருக்கிறார் சத்யா எனும் த்ரிஷா. கோபக்கார, கண்டிப்பான மனைவியாக ரசிக்க வைக்கிறார். தனது கணவரை சந்தேகப்படும் இடங்களில் த்ரிஷாவின் நடிப்பும், தான் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டதாக உணரும் இடங்களில் நடிகர் விஜய்யின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. இளமை மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறார் த்ரிஷா.
சஞ்சய் தத்தின் நடிப்பு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நடிகர் அர்ஜூன் அந்தக் குறையைப் போக்கிவிட்டார். சாண்டியின் நடிப்பு தனித்துவமாக இருந்தாலும் அதை முதல்பாதிக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டது ஏனோ? இவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பெரிதாக நடிப்பதற்கான இடமோ, திரைக்கதையில் எழுத்தோ இல்லை என்பதால் விட்டுவிடலாம்.
முன்பே சொன்னதைப் போல லோகேஷ் திரைப்படத்தில் வரும் பழைய பாடல்கள் இந்த முறை சண்டைக்காட்சியுடன் வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக முதல்பாதியில் வரும் “தாமரைப் பூவுக்கும், தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை” பாடல் நன்றாகப் பொருந்திப் போயிருந்தது.
படத்தின் பலம் மக்களுக்கு பரிட்சயமானவர்களைக் கதாபாத்திரங்களாகப் பயன்படுத்தியது. அதேதான் பலவீனமும். அதிகப்படியான நபர்களை பயன்படுத்தினாலும் அவர்களை எந்தளவு இயக்குநர் பயன்படுத்தினார் என்றால் பெரிய கேள்வியே மிஞ்சுகிறது. படம் முழுக்க ஆக்ஷன் தெறிக்கிறது. ஆனால் வனச்சரகராக கெளதம் மேனன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இமாச்சலத்தின் தியோக் பகுதியே கொலைக்களமாக மாறும்போது காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்விகள் காட்சிக்கு காட்சி விரிகின்றன.
அனுராக் கஷ்யப், மடோனா செபாஸ்டியன், சாண்டி, மிஷ்கின் என அனைவரையும் கூட்டி வந்து காலி செய்திருக்கிறார் லோகேஷ். எல்சியூ எனும் உலகத்திற்குள் இந்தக் கதையை கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சித்ததாகவே புரிந்துகொள்ள முடிகிறது. விக்ரம் திரைப்படம் கைதி திரைப்படத்துடன் இணைவதற்கு ஒரு லாஜிக்கான காரணம் இருந்தது. ஆனால் அப்படி எந்தக் காரணமும் இல்லாமல் அத்திரைப்படங்களின் சில கதாபாத்திரங்களை மட்டும் லியோவில் உலவவிட்டு இதுவும் எல்சியூ என எப்படி இயக்குநரால் அறிவிக்க முடிகிறது எனப் புரியவில்லை.
வழக்கம்போல அனிருத்தின் இசை படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளது. அதேபோல் கேமரா பணிகளும் பாராட்டும்படியே இருந்தன.
நடிகர் ரஜினிகாந்த் மாதிரி சிகரெட்டை தூக்கிப் போட்டு கமலுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் விஜய்யை லியோ காப்பாற்றினாலும் இயக்குநர் லோகேஷுக்கு இது சற்று சறுக்கல்தான். ஒரு சரக்கிற்கு நன்றாக விளம்பரம் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ். அதற்கு மத்தியில் சரக்கை தரமாகத் தயாரிக்க மறந்து போய்விட்டார்.
நன்றி – தினமணி