முடிவுக்கு வந்தது நாகை – யாழ். கப்பல் சேவை?

editor 2

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளை (வெள்ளி) தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காலநிலையை காரணம் காட்டி அவர்கள் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள போதிலும் பயணிகள் ஆர்வம் காட்டாமையே இதற்கான காரணம் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாளாந்தம் கப்பல் சேவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் போதிய பயணிகள் முன்பதிவு செய்யாமையால் வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் அதிலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதால் நாளை முதல் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறாது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே,

வட கிழக்குப் பருவ மழை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமையாலும் நாகை துறைமுக விரிவாக்கப்பணி காரணமாகவும் காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் சேவை நாளை வெள்ளிக்கிழமையுடன் (20) நிறுத்தப்படுவதாக இந்தியத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை காங்கேசன்துறை செல்லும் கப்பல் அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர்கள் ஜனவரி மாதம் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,

இலங்கையிலிருந்து பயணிக்கும் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம், விமானத்தில் பயணிக்கப் போதுமான கட்டணத்திற்கு நிகராக இருப்பதால் இலங்கைப் பயணிகள் கூடுதல் அக்கறை காட்டவில்லை என்று யாழ்ப்பாணச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article