கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் கட்டிவைத்து தம்மிடமிருந்து பெருமளவான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்யுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரணியத்தை அண்மித்த வானவன் மகாதேவி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இரண்டு படகுகளில் நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு படகு ஒன்றில் வந்த கடற்கொள்ளையர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களின் கைகள், கால்களைக் கட்டியதுடன் அவர்களை கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.
அவர்கள் தம்மை தாக்கியதுடன் கடலில் தள்ளி சித்திரவதையும் செய்தனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் தாம் பல மணி நேரம் கடலில் தத்தளித்து நீந்தியதாகவும், கொள்ளையர்கள் 5 இலட்சம் ரூபாய் (இந்திய ரூபாய்) பெறுமதியிலான மீன்பிடி வலைகள் மற்றும் தாம் அணிந்திருந்த தங்க நகைகள் உட்பட்ட உபகரணங்களை அபகரித்துச் சென்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அங்கு வந்து தம்மை மிரட்டிக் கொள்ளையிட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு காயம் பட்ட வானவன் மகாதேவி மீனவர்களுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆறுதல் கூறினர்.