மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தெரிவித்தார்.
புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கல்லூரி அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப், சாரணர் ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன், சாரண ஆசிரியர் இன்னாசி கிறிஸ்டி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே எதிர்வரும் 23 திகதி புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட சாரண மாணவர்கள் மூவர் இணைந்து இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து பாக்குநீரிணையை குறுகிய நேரத்திற்குள் கடந்து தலைமன்னாரை வந்தடையவுள்னர்.
இதில் புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ ஆகிய இருசகோதார்களுடன் இருதயநாதன் கெல்வின் கிசோவும் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து பாக்குநீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்து சாதனை நிலைநாட்டவுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவனும் சிரேஸ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷpகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்ததுடன் ஜனாதிபதி விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.