யாழ்ப்பாணத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கு
எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில் சீனா உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் நாட்டின் பிரபல நாளிதள்களில் ஒன்றான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடத்தவுள்ள இசை நிகழ்ச்சி நடத்தவிருந்தார். இந்த இசை நிகழ்ச்சி யாழ். போதனா மருத்துவமனையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலை நினைவுநாள் என்பதால் அதன் திகதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையிலேயே தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் இந்தக் குற்றச்சாட்டு
வெளியிடப்பட்டது.
மேலும் அந்த செய்தியில் இலங்கை அதிகாரிகளை மேற் கோள்காட்டி, ‘கடந்த 1987இல்
நடந்த ஒரு சம்பவத்தை மேற் கோள் காட்டி, இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற
னர். இதன் பின்னணியில், அரசியல் சூழ்ச்சி உள்ளது.
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தான், இசை நிகழ்ச்சியை எதிர்க்கின்றனர். மேலும், அவர்கள் சீனாவுக்கு ஆதரவான மன நிலையிலும் உள்ளனர். அது, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு.
எதிர்காலத்தில் இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, இலங்கை அரசு வாயிலாக, இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்து, மீள் உருவாக்கத்துக்கு தடை ஏற்படுத்துவதோடு, சீனா ஆதரவு பிடியில், இலங்கை தமிழர்கள் முழுவதுமாக சென்று விடாமல் பாதுகாக்க வேண்டும்.
சாதாரண இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் வாயிலாக சீனாவின் ஆதிக்கம்
தமிழர்கள் மத்தியிலும் ஊடுருவி உள்ளதை காண முடிகிறது’, என்று குறிப்பிட்டுள்ளது.