கூல் சுரேஷின் பெயரை பிரதீப் முன்மொழிந்த போது ‘இவன் சந்தோஷமா சொல்றானா.. காண்டா சொல்றானான்னே தெரியல’ என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் சுரேஷ்.
பிக் பாஸ் டிக்ஷனரியில் ‘கன்டென்ட்’ என்பது முக்கியமான வார்த்தைகளுள் பிரதானமானது. கன்டென்டில் பல் துலக்கி, கன்டென்டில் தலை வாரினால்தான் அந்த வீ்ட்டில் ஒருவர் பிழைக்க முடியும்.
ஆனால் இந்த கன்டென்ட் என்கிற சமாச்சாரம் மிகையானால் திகட்டி விடும். சீசனுக்கு சீசன் இந்த திகட்டல் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த செயற்கைத்தன்மை தொடர்ந்தால் இந்த ஆட்டத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும். ஏனெனில் அசலான உணர்வு மோதல்கள், உரசல்கள்தான் இந்த நிகழ்ச்சியின் ஆதாரமான சுவாரசியமே. மாறாக ‘எல்லாமே நடிப்பா கோப்பால்?’ என்றாகி விடக்கூடாது. உணவு விஷயத்தில் அற்பமான காரணத்தைச் சொல்லி ‘ஸ்ட்ரைக்’ செய்து அழிச்சாட்டியம் செய்த சின்ன வீ்ட்டாரை கமல் கண்டிப்பார் என்று பார்த்தால் ‘கன்டென்ட்டுக்காக செஞ்சீங்களா… அப்படி உண்மையை சொல்லிட்டுப் போங்க.. சமத்து’ என்று செல்லம் கொஞ்சி விட்டுப் போனார். ஒருவேளை அடுத்த எபிசோடில் கண்டிப்பு காட்டுவாரோ?!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 13 EP14)
மஞ்சள் டி- ஷர்ட்டுடன் மங்கலகரமான புன்னகையுடன் அரங்கில் நுழைந்தார் கமல். ‘இன்று உலக சிறப்பு நாள்..’ என்று பொதுவாக ஆரம்பிப்பார். காலண்டரை புரட்ட மறந்து விட்டாரோ, என்னமோ. ‘உள்ளே எல்லாம் அறுந்த வால்கள்’ என்று சண்டை போடும் பிள்ளைகளை அடக்க முடியாத ஸ்கூல் மாஸ்டர் மாதிரி புன்சிரிப்புடன் சொன்னார். ‘சண்டைன்னா உடனே நின்னு வேடிக்கை பார்க்கறதுதானே நம்ம பழக்கம்.. ‘கன்டென்ட்’ நல்லாயிருந்துச்சா.. என்று பார்வையாளர்களைக் கேட்ட படி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள க்ரூப்பிஸம் பற்றி சுரேஷிடம் விசாரி்ததுக் கொண்டிருந்த விசித்ரா ‘நான் தனியாளு.. எந்த க்ரூப்பிலும் இல்ல’ என்று கெத்தாக சொல்ல “ஏன்னா. உங்களை யாரும் சேர்த்துக்க மாட்றாங்க’ என்று டைமிங்காக கவுண்ட்டர் சொல்லி அந்தப் பெருமிதத்தில் உடனே மண்ணையள்ளிப் போட்டார் பிரதீப். பூர்ணிமா பேசாமல் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு சின்ன வீட்டில் சென்று செட்டில் ஆகி விடலாம். அந்த அளவிற்கு அந்த ஏரியா பக்கம்தான் அதிகம் தென்படுகிறார். எல்லை தாண்டிச் சென்று அவர்களின் திண்ணையில் படுத்துக் கொள்கிறார். மணிரத்னம் படத்தின் வசனம்போல லோ வாய்ஸில் மாயாவுடன் பொழுதன்னிக்கும் புறணி பேசுகிறார்.
அடுத்த வார கேப்டனைத் தேர்வு செய்யும் நேரம். எனவே பிக் பாஸ் வீட்டை அரசியல் மேகங்கள் உக்கிரமாக சூழ்ந்தன. ‘தங்கள் வீட்டிலிருந்து ஒருவர்தான் கேப்டனாக வர வேண்டும். அப்போதுதான் பக்கத்து வீட்டை ‘வெச்சு செய்ய முடியும்’ என்று இரு தரப்புகளுமே ஆவேசமாக இருக்கின்றன. பெரிய வீட்டில் யுகேந்திரனை வேட்பாளராக நிறுத்த மெஜாரிட்டியாக முடிவு செய்தார்கள். ‘எப்படியோ.. என்னை விட்டா போதும்… யம்மாடி… இந்த ஒரு வாரத்துல நான் பட்ட பாடு. பாவம் யுகேந்திரன்… யாரு பெத்த பிள்ளையோ’ என்று சரவணனின் மைண்ட் வாய்ஸ் நிம்மதியாக ஆசுவாசமாகியிருக்கும். அடுத்த வார கேப்டன் சாய்ஸிலும் சரவணனின் பெயரை சிலர் முன்மொழிய’ ‘யப்பா. சாமிகளா உங்க பூசாரித்தனமும் வேணாம்… பொங்கச் சோறும் வேணாம். ஆள விடுங்க’ என்று உள்ளுக்குள் அலறியிருப்பார்.
“ஜோவிகா புத்திசாலி.. பிக் பாஸ் வீடு சொல்லுது’
வேட்பாளர் பட்டியலில் யுகேந்திரனுக்கு அடுத்தபடியாக ஜோவிகாவின் பெயரும் நிறைய அடிபட்டது. நிறைய விஷயங்களை சரியாக யோசிக்கிறாராம். முதிர்ச்சியாக செயல்படுத்துகிறாராம். கல்வி தொடர்பான சர்ச்சையில் அடிபட்ட ஜோவிகா, எதையும் திட்டமிட்டுச் சரியாக செயல்படுவதில் நல்ல பெயர் வாங்குவது சுவாரசியமான விஷயம்தான். சின்ன வீட்டில் ஐஷூவிற்கு நிறைய ஆதரவு இருந்தது. அவரும் விவாதங்களை சரியாக முன்வைக்கிறாராம். கூல் சுரேஷின் பெயரை பிரதீப் முன்மொழிந்த போது ‘இவன் சந்தோஷமா சொல்றானா.. காண்டா சொல்றானான்னே தெரியல’ என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் சுரேஷ்.
கேப்டனுக்கான போட்டி ஆரம்பித்தது. யுகேந்திரன், ஜோவிகா மற்றும் ஐஷூ ஆகிய மூவரும் கலந்து கொள்ள அவர்களுக்கு தலா ஒவ்வொரு உதவியாளர் இருப்பார். ஏழு கல் விளையாட்டு மாதிரியான போட்டி. தங்களின் வட்டங்களை அடுக்கும் அதே சமயத்தில் எதிராளியின் வட்டங்களையும் கலைக்க வேண்டும். (அடுத்தவன் காலை வாரினாதான் ஜெயிக்க முடியும் என்பது பிக் பாஸ் ஆட்டங்களின் அடிப்படையான ஸ்டைல்!)
வழக்கம் போல் கச்சா முச்சாவென்று நடந்த இந்தப் போட்டியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு படுத்துப் போராடிய யுகேந்திரன் வெற்றி. தள்ளுமுள்ளாக நடந்த போட்டியின் இறுதியில் அவருடைய வட்டங்கள்தான் அதிகமாக இருந்தன. “அவங்க ஜெயிச்சிட்டாங்க.. பழிவாங்கற மோடிற்கு அவங்க போனா நாமளும் ரிவேஞ்ச் மோடிற்கு போவோம்” என்று பேசிக் கொண்டிருந்தார் மாயா. இவர் ஏன் எப்பவும் வில்லன் கேரக்ட்டர் மாதிரி ‘செஞ்சிடுவோம்.. தூக்கிடுவோம்’ என்றே எப்போதும் கொலைவெறியுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
தோற்ற ஆவேசத்தில் மாயா கிளப்பிய அபத்தமான சந்தேகம்
பெரிய வீடு வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத மாயா, யுகேந்திரனின் வெற்றியில் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். ‘வட்டங்கள் முழுமையாக அடுக்கப்பட்டால்தான் வெற்றி என்றுதான் ரூல் புக் சொல்கிறது. அப்படி இல்லாத நிலையில் எப்படி முடிவை அறிவிக்கலாம்? Biased ஆக செயல்பட்டாய்..’ என்று சரவணணை வறுத்தெடுக்க, அவர் பயந்து போய் ‘பிக் பாஸ்.. பிக் பாஸ்.. நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்.. மாயா.. மாயா.. எல்லாம் மாயா..’ என்று நடுங்கினார். தலைமைத்துவக் குணாதிசயம் இல்லாத கேப்டன் என்பதை மீ்ண்டும் இந்தச் சமயத்தில் நிரூபித்தார் சரவணன். யோசித்து எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதுதான் ஒரு நல்ல லீடருக்கான அடையாளம். ஒருவேளை அந்த முடிவில் ஏதாவது பிசிறு இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது.
ஏறத்தாழ அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ‘பிக் பாஸ்.. பிக் பாஸ்.. நீங்கதான் ஒரு நல்ல முடிவா சொல்லணும்’ என்று காமிரா முன்னால் வந்து விடுகிறார் சரவணன். பிரதீப் முன்பு சொன்ன ஒரு திருவாசகத்தை இந்தச் சமயத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். ‘பிக் பாஸ்ன்றது கடவுள் மாதிரி. அவரைப் பார்க்க முடியாது. வரமோ சாபமோ அவரு தருவாரு. அதை வெச்சு நாமதான் சமாளிக்கணும்’ என்று சொன்னது இந்த ஆட்டத்தின் அடிநாதமான விஷயம். பிரச்சினைகளை நாம்தான் சமாளிக்க வேண்டும். ‘சார். அந்தப் பையன் கிள்ளிட்டான்’ என்று அழுது கொண்டே ஒவ்வொன்றிற்கும் மாஸ்டரிடம் செல்லக்கூடாது.
‘முழுமையை நோக்கி நகர்ந்தாலே அது முழுமைதானே?’
கமல் என்ட்ரி.. ‘ஸேஃபா இருக்கீங்களா?’ என்று வந்தவுடனே மாயாவிற்கு ஒரு சர்காஸ்டிக் குண்டூசியை பரிசாக வழங்கினார். ‘இங்க எனக்கு பாதுகாப்பு இல்ல’ என்றெல்லாம் பிக் பாஸிடம் முன்பு அனத்திக் கொண்டிருந்தார் மாயா. ஆனால் அவர் செய்கிற ராவடிகளையெல்லாம் பார்த்தால் அவரிடமிருந்துதான் மற்றவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் போலிருக்கிறது. “கேப்டன் வெற்றி முடிவுல உங்களுக்கு ஏதோ சந்தேகம் போல இருக்கே?” என்று ஆரம்பத்திலேயே அந்தப் பஞ்சாயத்தைக் கூட்டினார் கமல். பிறகு தனது பாணியில் அதைப் பற்றி விளக்கியது சிறப்பு. அந்தப் போட்டியின் முடிவை புரிந்து கொள்வதில் எந்தவொரு சிரமமும் இல்லை. ஆனால் ‘தங்கள் அணி வெற்றி பெறும். எதிர் தரப்பு ஆட்களை ‘வெச்சு செய்யலாம்’ என்று வெறியுடன் காத்துக் கொண்டிருந்த மாயாவால், இந்த முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் விஷயம்.
“முழுமையாக இல்லையென்றாலும் முழுமையை நோக்கி நகர்ந்திருப்பதைத்தான் வெற்றியாக எடுத்துக் கொள்ள முடியும். இந்தியால நமக்கு வழக்கமேஅப்படித்தானே.. இருக்கற மோசத்துல குறைந்த மோசத்தை தேர்வு செய்ய வேண்டிய சூழல்லதானே இருக்கோம்” என்று இதற்கு இடையில் கமல் நுழைத்த அரசியல் நையாண்டி அருமை.
மாயா விவகாரத்தை முடித்த பின்னர் விஷ்ணுவிற்கு நகர்ந்தார் கமல். ‘சோர்வு’ என்று தன்னை முத்திரை குத்தி சின்ன வீட்டிற்கு அனுப்பிய சரவணன் மீது விஷ்ணு கொலைவெறியில் இருக்கிறார். இதெல்லாம் பிக் பாஸ் ஆட்டம் தரும் நெருக்கடிகள். தானும் கூட அப்படித்தான் செயல்பட வேண்டியிருக்கும்’ என்கிற எளிய லாஜிக் கூட விஷ்ணுவிற்குப் புரியவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ‘சரி.. நீங்களா இருந்தா இந்தப் பட்டங்களை யாருக்கு கொடுத்திருப்பீங்க?’ என்று கேட்க ஆரம்பித்தார் கமல். அது தனக்கு விரிக்கப்பட்ட வலை என்பது விஷ்ணுவிற்குப் புரியவில்லை. உற்சாகமாக பேச ஆரம்பித்து தடுக்கி வலையில் விழுந்து பிறகு அவரே அதை போர்வையாகப் போர்த்திக் கொண்டார்.
அக்ஷயா மீது விஷ்ணுவிற்கு என்ன தனிப்பட்ட வெறுப்பு என்று தெரியவில்லை. ‘சோர்வு’ன்ற பட்டத்தை அக்ஷயாவிற்குத்தான் தருவேன்.. டூர் வந்த மாதிரி ரிலாக்ஸா இருக்காங்க.. எந்தவொரு விவாதத்துலயும் கலந்துக்கல. நானா இருந்தா ஹெல்த் விஷயத்தை வெச்சே ‘பூரில ஏன் இவ்வளவு எண்ணைய்’ன்னு கேட்டு கதகளியே ஆடியிருப்பேன்’ என்ற விஷ்ணு, ‘சுயபுத்தி இல்லாதவர்’ என்கிற பட்டத்தை வம்படியாக ஜோவிகாவின் மீது சுமத்தி ‘எல்லாத்துலயும் முன்னாடி நிக்கணும்னு பார்க்கறாங்க” என்று அபத்தமாக விளக்கம் தந்தார். ‘தன்னை முன்னிலைப்படுத்திக்கறது எப்படி சுயபுத்தி இல்லாததா ஆகும்?’ என்று சரியாக மடக்கினார் கமல். அதற்கும் தத்துப்பித்தென்று உளறினார் விஷ்ணு.
விஷ்ணுவிற்கு பாடம் கற்றுத்தந்த வாத்தியார் கமல்
‘உங்களுக்கு இதே டாஸ்க் தரப்பட்டாலும் நீங்களும் இதே மாதிரிதான் குழம்பியிருப்பீர்கள்.. சொதப்பியிருப்பீர்கள். தனிப்பட்ட வெறுப்பைக் காண்பித்திருப்பீர்கள்.. இதெல்லாம் மனிதனின் ஆதார குணங்கள்.. இதையெல்லாம் உமக்கு உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடலை ஆடினோம்’ என்பதுதான் சுற்றிச் சுற்றி விஷ்ணுவிற்கு கமல் உணர்த்த நினைத்த பாடம். அது நல்லபடியாகவே முடிந்தது. ஆனால் விஷ்ணுதான் பாடத்தை சரியாக கற்கவில்லை. கமலின் தலை மறைந்ததும் ‘மரியாதைன்னா என்னன்னு உனக்குத் தெரியாதா.. பார்த்து ஒழுங்கா பேசு.. வெறும் ஜாக்கி மாட்டத் தெரிஞ்சா போதாது.. நான் என்ன உனக்கு வேலைக்காரனா?’ என்றெல்லாம் அநாவசியமாக கோபப்பட்டார். பேசாமல் விஷ்ணுவிற்கு சம்பளத்திற்குப் பதிலாக ‘மரியாதை’ என்று எழுதப்பட்ட கவரை மட்டும் தந்து விடலாம். அந்த அளவிற்கு எல்லோரிடமும் மரியாதையே தராமல் மிரட்டி மிரட்டி மரியாதையை கேட்டு வாங்குகிறார்.
‘ஓகே.. வேற யாருக்கெல்லாம் அவங்களுக்கு தரப்பட்ட பட்டங்கள்ல உடன்பாடு இல்லை?’ என்று கமல் ஆரம்பிக்க “சுயபுத்தி இல்லாதவர்’ன்னு என்னைச் சொன்னாங்க.. ஆக்சுவலி.. அது ரவீனாவிற்குத்தான் பொருந்தும்’ என்று ஒரு பெரிய வெடிகுண்டின் திரியை அநாசயமாக கொளுத்திப் போட்டார் ஐஷூ. இதற்கு ரவீனா தந்த எக்ஸ்பிரஷனைப் பார்க்க கண்கோடி வேண்டும். அவர் நடித்த எந்தவொரு சீரியலிலும் இப்படியொரு அசலான முகபாவத்தைப் பார்த்திருக்க முடியாது. ஆக.. இருக்கு.. ‘சக்களத்தி’ சண்டை மாதிரி ஏதோவொண்ணு இந்த சீசன்ல நிச்சயமா இருக்கு.
சுரேஷின் டர்ன் வரும் போது ‘ஒண்ணுமே இல்லாததுக்கு ஏதோவொரு பட்டமாச்சும் கொடுத்தாங்களேன்னு சந்தோஷமாத்தான் இருக்கு’ என்று சொன்ன போது கமல் வாய் விட்டு சிரிக்க, பார்வையாளர்களின் கூட்டத்தில் இருந்தும் விசில் பறந்தது. சுரேஷ் தெரிந்து சொன்னாரோ அல்லது தெரியாமல் சொன்னாரோ.. அதுவொரு நல்ல லாஜிக். நாம் ஒரு விஷயத்தில் ஈடுபடும் போது ஏதாவதொரு பாதிப்பை அதில் நிகழ்த்த வேண்டும். அப்போதுதான் நம்முடைய இருப்பு அங்கே இருக்கிறது என்று பொருள். மாறாக ‘அவனா.. அவனைப் பத்தி என்ன சொல்றது?’ என்று ஒருவர் யோசித்தால் நாம் எதுவுமே செய்யவில்லை என்றுதான் அர்த்தம். அக்ஷயாவும் வினுஷாவும் அந்த கேட்டகிரியில்தான் இருக்கிறார்கள்.
விஷ்ணு – விசித்ரா – சுவாரசியமான மோதல்
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘ரெண்டு வீடும் தனித்தனியா உக்காருங்க.. சின்ன வீடு செஞ்ச புரட்சிப் போராட்டம் பற்றி பேசுவோம்..” என்று அவர் ஆரம்பிக்க “ஏழு போ் இருக்க வேண்டிய இடத்துல ஆறு பேர்தான் இருந்தோம்.. வேலைப்பளு அதிகம். குறை சொல்லிட்டே இருக்காங்க. ஆர்டர் போடறாங்க.. எங்களுக்கு வர வேண்டிய ஃபெனிபிட் போச்சு.. நாங்க வேணும்ன்ட்டே உணவை மோசமா சமைக்கறதா சொன்னாங்க..’ என்று அதே பழைய பல்லவியை மீண்டும் பாடியது சின்ன வீடு.
வீட்டின் உள்ளே விஷ்ணு சண்டைக்கோழியாக இருந்தாலும், கமலின் முன்னால் விளக்கம் சொல்லும் போது அவரது பேச்சில் சுவாரசியம் தென்படுகிறது. அந்த நகைச்சுவையுணர்வை அவர் பெரும்பாலும் வைத்திருந்தால் நன்று. “நாங்களே.. நவக்கிரகம் மாதிரி எதிரும் புதிருமாத்தான் ஒரு மாதிரி சேர்ந்து சமைக்க ஆரம்பிச்சோம். பிரதீப் வேற ஆரம்பத்துலயே தனிக்கொடி பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு. ‘வைஸ் கேப்டன் பதவிக்கு டீல் போட்டாரு’ என்று விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘வைஸ்.. என்ன ஸ்பெலிங்.. Wise-ஆ? என்று இடைமறித்து கமல் கிண்டலாக கேட்டது பிரதீப்பிற்கான ஒரு காம்ப்ளிமென்ட். பிரதீப்பின் மீது கமலுக்கு ஒரு தனியான பிரியம் உருவாகி விட்டதைப் போல் தெரிகிறது.
‘இந்தப் போராட்டம் பற்றி பெரிய வீட்டுக்காரவுக என்ன நெனக்கறீக?” என்று கமல் விசாரணையை அந்தப் பக்கம் திருப்பிய போது ‘ஸ்ட்ரைக் பத்தி முன்னாடியே சொல்லிருக்கலாம்’ என்று ஜோவிகா சொன்ன போது ‘அப்சலூட்லி’ என்று ஆமோதித்தார் கமல். தன்னுடைய டர்ன் வரும் போது பூர்ணிமா பேச ஆரம்பித்து “ஆக்சுவலி. கேப்டன் கிட்ட சொல்லியாச்சு’ என்று விளக்க ஆரம்பிக்க ‘நீங்க பெரிய வீட்டைச் சேர்ந்தவங்கதானே?!’ என்று குறும்பாக ஒரு பவுண்டரியை கமல் விளாசியது சிறப்பான டைமிங்.
“ரூல் படி அவங்க சமைச்சுத் தரணும். முடியாதுன்னு அவங்க சொன்னதை நீங்க ஏன் அனுமதிச்சீங்க?’ என்கிற ஆதாரமான கேள்வியை கமல் முன்வைத்தார். ‘ஒரு ஆளு ஹெல்ப் பண்றதுக்கு கேப்டன் போயிருக்கலாம்ன்னு சொன்னேன்’ என்று யுகேந்திரன் சொன்னது நல்ல யோசனை. ‘தண்ணி கூட கொடுக்கலை சார்” என்று பெரிய வீடு கண்ணீர் விட ‘அதுவொரு மோசமான போர் உத்தி’ என்றார் கமல். “ஸ்ட்ரைக்கிற்கான காரணமே சரியில்ல. ஆக்சுவலி.. அவங்களுக்கு வேலை கம்மி. போன வாரம் நான் கூட அங்க இருந்தேன்.’ என்றார் ரவீனா. “வீட்ல எங்க அம்மாவோ, பாட்டியோ எந்தக் குறையும் சொல்லாம ஒரே ஆளா எல்லோருக்கும் சமைச்சு கொடுத்திருக்காங்க” என்று வினுஷா சொன்ன போது கூட்டத்திலிருந்த அம்மாமார்கள் உற்சாகமாக கைத்தட்டினார்கள்.
“எனக்குப் பேசவே பயமா இருக்கு” என்று தயக்கத்துடன் எழுந்த விசித்ரா, ‘விஷ்ணு ரொம்ப தகராறு பண்றாரு.. கிச்சன் சுத்தமா இருக்கணும்னு சொன்னது ஒரு தப்பா சார்…? என்று சலித்துக் கொள்ள அதற்கு விளக்கம் அளிக்க எழுந்த விஷ்ணு “மேடம் தினமும் காலைல இன்ஸ்பெக்ஷனுக்கு வந்து குறையா கொட்றாங்க சார்.. டார்ச்சர் பண்றாங்க’ என்றதும் கமலுக்கே சிரிப்பு வந்தது. விஷ்ணுவும் விசித்ராவும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். “ஆக.. கேள்வி கேட்டதுதான் உங்களுக்குப் பிரச்சினை.. இல்லையா.. வேலைப் பளுன்னு சொன்னது எல்லாம் லுலுவாய்க்கு.. அப்படித்தானே?” என்று சின்ன வீட்டாருக்கு கிடுக்குப்பிடியை போட ஆரம்பித்தார் கமல்.
‘வன்முறைப் பேச்சைக் கண்டிக்கத் தவறினாரா கமல்?’
‘சரி.. ஸ்ட்ரைக்குன்னு முடிவு பண்ணீங்க.. ஓகே.. அதுக்கான நியாயம்ன்னு ஒண்ணு இருக்கணுமில்லையா.. முன்னறிவிப்பு இல்லாம ஒரு ஸ்ட்ரைக்கை செய்யக்கூடாது.. இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது..’ என்றெல்லாம் உபதேசம் செய்த கமல் “என்னத்துக்குத்தான் ஸ்ட்ரைக் பண்ணுங்க. இப்பவாவது நெஜத்தைப் பேசுங்க’ என்று இறுதிச் சுற்றுக்கு வந்ததும் ‘கன்டென்ட்டுக்குத்தான் செஞ்சோம்’ என்று சின்ன வீட்டார் கோரஸாக சொன்னதும் ‘சத்தமா பேசறதைவிட உண்மையா பேசினா கைத்தட்டல் கிடைக்கும்” என்று பன்ச் பேசினார் கமல்.
கன்டென்ட் என்றால் அதில் சிறிதாவது சுவாரசியம் இருக்க வேண்டும். ஆனால் அந்தக் காரணத்தைச் சொல்லி சின்ன வீடு செய்த கலாட்டாவில் பெரும்பாலும் வெறுப்பும் வன்மமும் பழிவாங்குதலும் மட்டுமே இருந்தது. இந்த மாதிரி நெகட்டிவ் ‘கன்டென்ட்’களை பார்வையாளர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். கமல் இதை சிரித்துக் கொண்டே மழுப்பி ஊக்குவித்தால் ‘கன்டென்ட்’ என்கிற பெயரில் நிறைய அழிச்சாட்டியங்கள் பெருகி நிகழ்ச்சியின் மீதே வெறுப்பை வரவழைத்து விடும்.
போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்ட கமல், அரங்கத்திற்கு வந்து ‘இது தொடர்பா கேப்டனின் சாட்சியம் முக்கியம். அதைப் பற்றி நாளை பேசுவோம்’ என்று விடைபெற்றுக் கொண்டார். ‘என்னாது. கன்டென்ட்டுக்கு செஞ்சாங்களா.. விஷ்ணு அத்தனை கோபமா பேசினதெல்லாம் கன்டென்ட்டா?” என்று விசித்ரா அங்கலாய்த்துக் கொண்டதில் நியாயமிருக்கிறது. கடந்த வாரத்தில் விஜய்யின் வன்முறைப் பேச்சைக் கண்டித்து ஸ்ட்ரைக் கார்டு (இதிலும் ஸ்ட்ரைக்கா?!) தந்த கமல், இந்த வாரத்தில் அதையே செய்த விஷ்ணுவையும் பிரதீப்பையும் நிச்சயம் கண்டிப்பார் என்று நம்புவோம்.
இந்த வாரம் யார் வெளியேறுவார்? ‘வெச்சு செஞ்சிடுவேன்’ என்று மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தவரைத்தான் பார்வையாளர்கள் ‘வெச்சு செய்திருப்பதாக’ கணிப்பு முடிவுகள் ஆரூடம் சொல்கின்றன. என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்ப்போம்.
- சுரேஷ் கண்ணன்
- நன்றி – விகடன்
- (விகடன் இணைப்பு)