பிக்பாஸ் 7; 12 ஆம் நாள் – நடந்தது என்ன?

editor 2

ஷாப்பிங் தொகையைச் செலுத்துவதற்கான அடுத்த டாஸ்க். “இது உங்கள் மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ஒருவேளை இதில் தோற்றால் உணவு வழங்கப்படமாட்டாது” என்றெல்லாம் ஓவராக பில்டப் தந்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் சோற்றுப் பிரச்னை ஒருவழியாகத் தீர்ந்ததும், அடுத்ததாக அலசப்படும் தீவிரமான பிரச்னை இதுதான். மணிக்கும் ரவீனாவிற்கும் இடையில் இருப்பது என்ன? நட்பா அல்லது காதலா அல்லது லவ் கன்டென்ட் டிராமாவா? ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்கிற ரேஞ்சுக்கு இதை அறிந்து கொள்வதற்குத் துடிக்கிறார்கள்.

இதில் ஐஷூவின் இம்சை வேறு பிரத்யேகமானது. ‘மணியை எனக்கு முன்னாடியே தெரியும். ஏதாச்சும் இருந்தா என்கிட்ட சொல்லிட்டுத்தான் பண்ணனும். ஆனா செய்யலை’ என்று அபத்தமாக அனத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் இப்படியொரு ‘ரொமான்ஸ் டிராக்’ எப்படியோ அமைந்து விடுகிறது அல்லது டிசைனே அப்படித்தானோ என்னமோ!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 12 EP 13)

‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என்கிற கவித்துவமான வரிகளைக் கொண்ட திரையிசைப் பாடலோடு நாள் 12 விடிந்தது. “உங்க வீட்ல ஏதோ டிஸ்கஷன் நடந்துதாமே… வாக்கெடுப்பெல்லாம் நடந்துதாம்” என்று விசித்ராவிடம் காலையிலேயே நமட்டுச் சிரிப்புடன் விசாரித்துக் கொண்டிருந்தார் சுரேஷ். “அந்த ரகசியம்லாம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?” என்று பாவனையாக ஜெர்க் ஆனார் விசித்ரா.

பெரிய வீட்டில் நடப்பதையெல்லாம் அங்கே போட்டுக் கொடுக்கும் நபர் யாராக இருக்கும்? இது திறந்த ரகசியம்தான். ‘காம்பவுண்ட் சுவர்’ தோழிகளான பூர்ணிமாவும் மாயாவும் தொடர்ந்து ரகசியக் குரலில் பேசும் போதே தெரிகிறது. பூர்ணிமாதான் அந்த ரகசிய உளவாளி என்று.

மாயா vs விசித்ரா – ஒரு சர்காஸ்டிக் டிராமா

மாயாவின் கிண்டல்கள் விசித்ராவை எரிச்சலூட்டுகின்றன. ஆனால் அவரால் நேரடியாக மாயாவை எதிர்க்க முடிவதில்லை. எனவே ஒரு மாதிரி சமாதான எல்லைக்குள் சர்க்கஸ் செய்கிறார். “மாயா நல்ல பொண்ணுதான். ஆனா அவ பண்ற கிண்டல்தான் சர்காஸ்டிக்கா இருக்கு… ஹர்ட் ஆகுது… பதிலுக்கு நாம ஏதாவது சொன்னா மட்டும் தப்பாயிடுது” என்று ஐஷூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா. அதற்காக கேஸ் ஸ்டவ் அழுக்காக இருப்பதையும் கல்யாணத்தையும் இணைத்து சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்லலாமா?

“இத்தனை நாள் இங்கே எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியல” என்று தன்னைத் தானே ஆச்சர்யப்பட்டு யுகேந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா. “நீங்க சண்டை போட்டாலும் உடனே சமாதானம் ஆயிடறீங்க. அதான் மேட்டர். ஜோவிகா கூட சண்டை போட்டீங்க. ஆனா இப்ப பழைய மாதிரியே மாறிட்டீங்க. அவ ‘விச்சு’ன்னு பழைய மாதிரி கூப்பிடறா” என்று இதற்கான காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் யுகேந்திரன். ஒருவர் உண்மையிலேயே மன்னிப்பது வேறு. சமாதானம் போல் பாவனை செய்து விட்டு உள்ளே வன்மத்தை வைத்திருப்பது வேறு.

கேமரா முன்னால் அனத்தும் தனியாவர்த்தனத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டார் விசித்ரா. “என்ன திடீர்ன்னு என் மேல அம்மா அம்மான்னு பாசத்தைக் காண்பிக்கறாங்க… இந்த பூர்ணிமாதான் ரெண்டு இடத்துல மாத்தி மாத்திப் பேசிட்டு இருக்கா… அவளுக்கு ஒரு பாயசாத்தைப் போட்டாதான் சரியா வரும். வயசானாலும் எனக்கு புத்தி ஸ்ட்ராங்கா இருக்கு” என்றெல்லாம் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார் விசித்ரா. பிறகு நேராக மாயாவிடம் சென்று “கல்யாண மேட்டர் பத்தி நான் சொன்னது தப்புதான். ஆனா உங்க கூட்டத்துலயே உங்களுக்கு எதிரா ஒரு உளவாளி இருக்கு. யாருன்னு சொல்ல மாட்டேன்… ஐ லவ் யூ உம்மா!” என்று தன் பிரச்னையையும் தீர்த்துக் கொண்டு பூர்ணிமாவையும் நைசாக போட்டுக் கொடுத்து விட்டு வந்த ராஜதந்திரம் இருக்கிறதே! ஆனால் அந்தப் பக்கம், மாயாவோ பத்து விசித்ராக்களுக்கு சமமாக இருக்கிறார். இதுவரை நடந்த சீசன்களிலேயே அதிக சக்தி வாய்ந்த ‘விஷ பாட்டிலாக’ மாயாதான் இருப்பார் என்று தோன்றுகிறது.

உளவாளி பூர்ணிமாவும் டெரரான மாயாவும்

ஷாப்பிங் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான இரண்டாம் தவணைக்கான போட்டி. களிமண் பரப்பில் போடப்பட்டிருக்கும் ஒற்றையடிப் பாதையில் கால்களை கீழே வைக்காமல் குழந்தைகள் சைக்கிளின் மூலம் கடக்க வேண்டும். இதில் தோற்றால் அனைத்து ஆடைகளையும் பிக் பாஸிடம் ஒப்படைத்து விடவேண்டும். கடைசியாக வந்த வினுஷாவிடம்தான் வீட்டின் ஒட்டு மொத்த மானமும் இருந்தது. அவர் ஜெயித்தால் மட்டுமே இந்த டாஸ்க்கில் வெற்றி கிடைக்கும். இந்த அழுத்தத்தினாலோ என்னவோ அவர் தடுமாறியதில் பிக் பாஸ் வீடு தோல்வியடைந்து ஆடைகளை ஒப்படைத்து நிராயுதபாணியாக நின்றார்கள்.

மாயாவும் பூர்ணிமாவும் ஒன்று காம்பவுண்ட் சுவர் அருகில் புறணி பேசுகிறார்கள். அல்லது டிக்கெட் கவுன்ட்டரில் தலையை நுழைப்பது போல கிச்சன் தடுப்பின் இடைவெளியில் புகுந்து வம்பு பேசுகிறார்கள். தங்களின் அணியில் ஒருவர் அடுத்த வாரம் கேப்டன் ஆகிவிட்டால், எதிர் தரப்பினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் ஆர்வத்தில் இருக்கிறார் மாயா. குறிப்பாக யுகேந்திரன் மற்றும் ஜோவிகாவை வெச்சு செய்வாராம். ‘என்னைப் பார்த்தாலே அவங்களுக்கு ஒரு நடுக்கம் வரணும்’ என்று தன்னை ஒரு டெரரான ரவுடியாகக் கருதிக் கொண்டிருக்கும் மாயா, அடுத்த வரி பேசும் போதே ‘கைப்புள்ளயாகி’ விடுகிறார். ஒருவேளை சின்ன வீட்டிலேயே தொடர நேர்ந்தால் எந்தவொரு வேலையிலும் ஒத்துழைக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம்.

இந்த வீட்டோடு அப்படியே மிங்கிள் ஆயிட்டேன். சித்தப்பா, அம்மம்மா, பெரியப்பா” என்று சில நாட்களுக்கு முன் சொன்ன மாயா, “இவங்க கூடல்லாம் என்னால குப்பை கொட்ட முடியாது. கௌம்பிடுவேன்” என்று அவ்வப்போது சொல்வது வெற்று சீன். பிக் பாஸ் வீடு என்பது அரசியல் மாதிரி. அங்கே நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர பகைவனும் கிடையாது. “நீ அவங்க கூட சேர்ந்துடு… இல்லைன்னா எல்லோரும் உன் மேல குத்தி வெளியே அனுப்பிடுவாங்க” என்று பூர்ணிமாவிற்கு மாயா சொன்ன ஆலோசனை சரியானது. “எப்படியும் இந்த வாரம் நான் போயிடுவேன்னு தோணுது” என்று உதட்டைப் பிதுக்கி வருத்தப்பட்டார் பூர்ணிமா.

ஆரிய மாலா’ வை ஒலிக்க விட்டு டார்ச்சர் செய்ய முயன்ற பிக் பாஸ்

ஷாப்பிங் தொகையைச் செலுத்துவதற்கான அடுத்த டாஸ்க். “இது உங்கள் மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ஒருவேளை இதில் தோற்றால் உணவு வழங்கப்படமாட்டாது” என்றெல்லாம் ஓவராக பில்டப் தந்தார் பிக் பாஸ். சாப்பாடு மேட்டர் என்பதால் சரியான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். தன்னை எந்தவொரு டாஸ்க்கிலும் சேர்க்காமல் ஒதுக்குகிறார்களே என்கிற ஆதங்கம் விசித்ராவிற்குள் இருக்கிறது. அதே சமயத்தில் டாஸ்க்கின் வீரியம் என்ன என்று தெரியாமல் ஒப்புக் கொள்ளவும் தயக்கமாக இருக்கிறது. என்றாலும் வலிந்து வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் ‘நான் போறேன்’ என்றார். கூடவே யுகேந்திரனும் ரவீனாவும்.

‘அது என்னடா அது மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ரொம்ப டெரராக இருக்குமோ?’ என்று பார்த்தால்… ஆக்ட்டிவிட்டி ஏரியாவின் அறையில் மூவரையும் அடைத்த பிக் பாஸ், ஸ்பீக்கர் எல்லாம் வைத்து ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப அலறவிட்டார். என்ன பாட்டு அது என்று பார்த்தால் மிகவும் ஆறிப் போன பழைய பாடலான ‘ஆரிய மாலா… ஆரிய மாலா…’ 1958-ல் வெளியான ‘காத்தவராயன்’ என்கிற படத்திலிருந்து ‘வா கலாப மயிலே’ என்கிற பாடல். ஜி.ராமநாதனின் இசை. நல்ல பாட்டுத்தான். ஆனால் தேய்ந்த ரெக்கார்டு மாதிரி ஓரிடத்தில் ‘ஆரிய மாலா’ என்பது தொடர்ந்து வருவதால் கிண்டலாகவும் பார்க்கப்பட்டது.

இந்தப் பாடல் அதிக சத்தத்தில் தொடர்ந்து ஒலிபரப்பப்படும். டாஸ்க் முடியும் வரை மூவரும் அதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். யுகேந்திரன் அடிப்படையில் பாடகர் என்பதால் பாடலை ரசிப்பதில் இறங்கினார். பிறகு பஜன் செய்வது போல் அந்த ஒலியுடன் தன்னைப் பொருத்திக் கொண்டார். ரவீனாவோ அந்தப் பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கினார். விசித்ராவோ ரிங் மாஸ்டர் மாதிரி ஒரு சேரில் அமர்ந்து கொண்டு பாடலைச் சகித்துக் கொள்ள ஆரம்பித்தார்.

ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள்’ என்று நேரம் கடந்து கொண்டே இருந்தது. ‘ஆரிய மாலா’ விடாமல் ஓடிக் கொண்டேயிருந்தது. என்ன டாஸ்க் என்று தெரியாமல் மக்கள் வெளியே தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். பிறகு பாடல் வெளியே கசிநததும் அதற்கேற்ப டான்ஸ் ஆடத் தொடங்கி விட்டார்கள். 4 மணி நேரம் கடந்ததும் ‘ஆரிய மாலா’ டாஸ்க்கை ஒருவழியாக நிறுத்தினார் பிக் பாஸ். காதில் ரத்தம் வருவது போல் இருந்தாலும் மூவரும் சகித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். சோற்றுப் பிரச்னையாயிற்றே?!

யுகேந்திரனும் ரவீனாவும் பாடலோடு ஒன்றிணைந்து எப்படியோ சமாளித்தார்கள். ஆனால் விசித்ரா மட்டும் ஒரு கட்டத்தில் வயிற்று வலிப்பது போல் இருந்தார். ஆக… இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீடு வெற்றி. ‘ஆரிய மாலா’விற்குப் பதிலாகக் காலையில் போட்ட ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமாலை’ போட்டிருந்தால், மூவரும் அரைமணி நேரத்திலேயே தலைதெறிக்க வெளியே ஓடி வந்திருப்பார்கள். ஐடியா இல்லாத பிக் பாஸ்!

‘யார் இந்த கேமை நல்லா விளையாடறான்னு நெனக்கறே?’ என்று மணியை நேர்காணல் செய்து கொண்டிருந்தார் சரவணன். முதலில் தன் பெயரையே சொன்ன மணி, பிறகு நேர்மையுடன் அதை எச்சில் தொட்டு அழித்து விட்டு, “ஜோவிகா நல்லா ஆடறா… சண்டை போடும் போது போட்டுடறா… அதே சமயத்துல தன் டாஸ்க்கையும் நல்லா பண்ணிட்டு மத்தவங்களுக்கும் ஹெல்ப் பண்றா… பிரதீப் ப்ரோவோட ஆட்டம் ஒரு மாதிரி இன்ஸ்ட்ரஸ்டிங்கா இருக்கு. ஆனால் எல்லாத்தையும் விட கூல் சுரேஷ்தான் சூப்பர். எல்லா ஏரியாலயும் ரவண்டு கட்டி அடிக்கறாரு” என்பது மணியின் அப்சர்வேஷன்.

நாராயணா… இந்த கொசுத் தொல்லை தாங்கலைடா’ 

விளம்பரங்களையும் பிரமோஷன்களையும் இந்த நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக இணைப்பது பிக் பாஸ் ஸ்டைல். (இது அவர்களின் சோற்றுப் பிரச்னையாயிற்றே?!) ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூற்றுக் கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் வண்டிகளை அளித்து பணி வாய்ப்பையும் தந்ததை ‘நியூஸ் ரீல்’ ஆகத் திரையிட்டார்கள். இது அடிப்படையில் விளம்பரம்தான். ‘சென்டிமென்ட்’ என்பது அதன் மீது வைக்கப்பட்ட டாப்பிங்.

‘போன வாரம் அனன்யா போவான்னு நெனச்சியா?’ என்று பிரதீப்பிடம் ஐஷூ கேட்க, “இல்ல. ஆனா நான் அனன்யாவைத்தான் நாமினேட் பண்ணேன். ஏன்னா… அவ சிக்கன் சாப்பிட மாட்டா. வெஜிடேரியன். எதுக்கு சிரமப்படணும்னுதான்” என்பதை பிரதீப் சீரியஸாகச் சொல்லி விட்டு ‘எப்படி என் சர்காஸம்?’ என்பது மாதிரி மாயாவைப் பார்க்க, ‘இதுக்கு நான் ரியாக்ட் பண்ணணுமா… நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ என்பது மாதிரி பிரதீப்பை ஹாண்டில் செய்தார் மாயா.

பிறகு, `நாராயணா… இந்த கொசுத் தொல்லை தாங்கலைடா. மருந்தடிச்சுக் கொல்லுங்கடா’ என்பது மாதிரி, “பிக் பாஸ்… இந்த பிரதீப்போட டார்ச்சர் தாங்க முடியல. மக்களுக்கு ஒருவேளை இவரைப் பிடிச்சிருந்து ஓட்டு போட்டாங்கன்னா, நான் செமயா காண்டாயிடுவேன். உடனே வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்” என்று டென்ஷன் ஆனார் மாயா.

ஜெயில் தண்டனைக்குப் பதற்றத்துடன் காத்திருந்த அக்ஷயா மற்றும் வினுஷாவிடம், “அக்ஷயா… ஓகே… கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது. நீங்க ரிலீஸ்… ஆனா வினுஷா, ஏதோ ட்ரை பண்றீங்க… ஆனா வேலைக்கு ஆகலை. இருந்தாலும் அந்த முயற்சியைப் பாராட்டி உங்களையும் ரிலீஸ் பண்றேன். ஆனா ஒவ்வொரு வாரமும் எக்மோர் கோர்ட்ல வந்து சைன் பண்ணணும்” என்று ஜாமீனில் விடவும் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்தது மாதிரி கலங்கி, கசிந்துருகி, கண்ணீர் விட்ட வினுஷாவைப் பார்த்து ‘எமோஷனைக் குறை’ என்று தூரத்தில் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் மாயா.

மணி – ரவீனா – ஐஷூ – ஒரு டிரையாங்கிள் டிராமா

ஊருக்கெல்லாம் ஒரு பிரச்னை என்றால் ஐஷூவிற்கு ஒரு விநோதமான பிரச்னை. மணி தன்னிடம் சொல்லாமல் எந்தவொரு ரொமான்ஸ் டிராக்கிலும் இறங்கக்கூடாதாம். காரணம், மணியை இவருக்கு நிறைய வருடங்களாகத் தெரியுமாம். நட்பாம். “அவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்… ஏன் நம்மளப் பத்தி நோண்டறா?” என்று சிணுங்கிக் கொண்டிருந்தார் ரவீனா. “அது அப்படித்தான். லூஸ்ல விடு” என்று இரண்டு பக்கமும் சாமர்த்தியமாக சமாதானக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருந்தார் மணி. இந்த விஷயம் அங்கு விவாதிக்கப்படுவதில் மணிக்குச் சுத்தமாக விருப்பம் இல்லை என்று தெரிகிறது

ஆக, இப்படியொரு டிரையாங்கிள் டிராமா ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மாதிரி ரவீனாவும் ஐஷூவும் ஒரே டிராக்கில் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறார்களோ என்று முதலில் சந்தேகப்படத் தோன்றியது. ஆனால் அப்படியில்லை… ‘மணி அண்ணா’ என்று சொல்லி சந்தேகத்தைப் போக்கினார் ஐஷூ. என்றாலும் இது பொசசிவ்தான். தனக்கு நீண்ட காலமாகப் பழக்கமாக இருக்கும் அண்ணனின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு உறவு உள்ளே நுழைந்தால் தங்கைக்கு ஏற்படும் அதே பிரச்னை.

இந்த ஐஷூ ஏன் இப்படிப் பண்றா? அவளை எனக்குப் பிடிக்கலை!” என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த ரவீனா. அந்த வீட்டின் இன்டலெக்சுவல் ரவுடியான பிரதீப்பிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்க, “இது நாச்சுரல். அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா பிரெண்ட்ஸ். திடீர்ன்னு நீ உள்ளே வந்து மணியை ஆக்கிரமிச்சா, அவளுக்கு வருத்தம் வராதா? இந்த வீட்ல மணி தனக்கு சப்போர்ட்டா இருப்பான்னு அவ நெனச்சிருப்பா. ஆனா மணி என்னடான்னா, உன் பின்னாடியேதான் இருக்கான்… இதான் மேட்டர்” என்று நீளமாக விளக்கி விட்டு அடுத்து சொன்னதுதான் ஹைலைட். “சரி… இது உன் பிரச்னை!” என்ற பிரதீப், அடுத்து யாருக்கு ஆலோசனை சொல்வது என்று சுற்றிலும் தேடிப் பார்த்தார்.

இன்று இரண்டாவது வார பஞ்சாயத்து நாள். விசாரணைக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் சின்ன வீடு செய்த அட்ராசிட்டி. கமல் என்ன செய்யப் போகிறார்? ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்ன்னு பாரதி பாடியிருக்கார்’ என்று ஆரம்பித்து நிச்சயம் ஏதாவது சொல்வார்.
– சுரேஷ் கண்ணன்- நன்றி விகடன்

Share This Article