பெரிய பிக் பாஸ் கண்டிப்பான பெரியப்பா என்றால், இவர் ஜாலியான சித்தப்பாவாக இருக்கிறார். ‘நான் பாட்டு மேட்டர் ஒண்ணு சொன்னேனே… ரெடியாச்சா?’ என்று சித்தப்பா விசாரிக்க, பெரிய வீட்டை வெறுப்பேற்றுவதற்கு இன்னொரு சான்ஸ் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது சின்ன வீடு.
எந்தவொரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஒரு படு அபத்தமான சண்டை இந்த எபிசோடில் நிகழ்ந்தது. மற்ற சீசன்களில் சாப்பிட்டு விட்டு தெம்பாகச் சண்டை போடுவார்கள். ஆனால் இதில் சாப்பாடு செய்வதற்கே சண்டை. உணவு என்னும் அடிப்படையான விஷயத்தில் விளையாடுவது தவறானது. ‘உனக்கு பசிச்சா கூட பரவாயில்லை. எனக்கு என்னோட ஈகோதான் முக்கியம்’ என்று நினைக்கும் தனிமனித அகங்காரம்தான், இன்னொரு நாட்டில் அணுகுண்டுகளைக் கொண்டு போய் வீசும் அளவிற்குச் செல்கிறது.
இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, நார்வே அமைதி தூதுக்குழுவை விடவும் அதிகமாக ஓடி களைத்த சரவணன் நினைத்திருந்தால் ஒரே கணத்தில் பிரச்னையை முடித்திருக்கலாம். ஆனால் க்ளைமாக்ஸில்தான் அவருக்கு ஞானோதயம் வந்தது. ஆக… இருக்கு… இந்த வார பஞ்சாயத்தில் நிறைய சம்பவங்கள் இருக்கு!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘முருகேசா… பேய் இருக்கா… இல்லையா?’ என்பது போல மணிக்கும் ரவீனாவிற்கும் இடையே என்ன உறவு என்பதை அறிந்து கொள்வதில் சிலர் பயங்கர ஆர்வம் காட்டுகிறார்கள். ‘அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே’ என்று அவர்கள் இருவரும் நினைப்பது சரியானது. ‘போன சீசன்ல நான் பார்த்த சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கலை. நீங்க பிரெண்ட்ஸ்தான்… பிரெண்ட்ஸ் மட்டும்தான்’ என்று தான் விரும்புகிற முத்திரையை அவர்களின் மீது அழுத்தமாகக் குத்திக் கொண்டிருந்தார் விசித்ரா.
‘என்னது… விசித்ரா உளவியல் படிச்சிருக்காங்களா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்கும் அளவுக்குத்தான் அவரின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதில் எந்தவொரு முதிர்ச்சியும் தென்படவில்லை. சீரியலில் வரும் வழக்கமான மாமியார்கள் போலவே செயல்படுகிறார். ஒன்றுஇ தேடித் தேடி ஏதாவது குறை சொல்லி மற்றவர்களை எரிச்சல்படுத்துகிறார். இரண்டுஇ கேமரா முன்னால் வந்துஇ ‘அந்தக் காலத்துல பார்த்தீங்கன்னா…’ என்பது போல் தனியாக அனத்த ஆரம்பித்து விடுகிறார்.
சிறைத் தண்டனைக்காகக் காத்திருக்கும் ஜாமீன் பறவைகளான அக்ஷயா மற்றும் வினுஷாவை விசாரணைக்கு அழைத்தார் பிக் பாஸ். வினுஷாவாவது பரவாயில்லை. ‘நான் தோசை ரவுண்டா ஊத்தியிருக்கேன். சப்பாத்தியை சாஃப்ட்டா சுட்டிருக்கேன்’ என்கிற மாதிரி ஏதோ கிச்சன் கதை சொன்னார். ஆனால் அக்ஷயாவோ ‘அங்கிள்… அங்கிள்.. எனக்கு ரைம்ஸ்லாம் தெரியும். ஒண்ணு பாடிக் காட்டவா?’ என்று கான்வென்ட் பேபி மாதிரி கொஞ்சி கொஞ்சிப் பேசியதில் பிக் பாஸ் நொந்தே போயிருப்பார். ‘சரி… நீங்க கிளம்புங்க… உங்களை ஜாமீன்ல அனுப்பறதாஇ இல்ல வீட்டை விட்டே வெளியே அனுப்பறதான்றதை யோசிச்சு சொல்றேன்’ என்று அவர்களை வெளியில் துரத்தினார். சந்தடி சாக்கில் விசித்ராவை ‘பாட்டி’ என்று வினுஷா சொன்னது ரகளையான சம்பவம்.
‘லவ் பண்ணலாமா… வேணாமா’ – ரொமான்ஸ் பிரச்னை
‘லவ் கன்டென்ட் தர்றீங்களா ரவீனா… இந்த வாரம் விஷ்ணுவை லவ் பண்ணேன்… ஜாலியா இருக்கும்’ என்று ஏதோ காலண்டர் மாற்றுவது போல் பிரதீப் கேட்டது அபத்தம். இந்த சீசனின் ஹன்சிகா போலவே இருக்கும் ரவீனாவும் எல்லோரிடமும் பிரெண்ட்லியாகவே இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை மணியால் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘பொசசிவ்னஸ்’ காரணமாக அவர் எரிச்சல் படுவது நன்றாகத் தெரிகிறது. ஆகஇ அவருடைய முகமூடியும் கழன்று கொள்ள ஆரம்பிக்கிறது. எல்லோருமே சேர்ந்து பிக் பாஸ் வீட்டுக்காக ஒரு ஸ்பெஷல் நாடகத்தை ஆடுகிறார்கள் போல!
இதற்கு நடுவில் ஐஷூவிற்கும் இதே பிரச்னை. ‘உங்க நடுவுல என்னதான் இருக்கு. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லிட்டுச் செய்ங்க’ என்று ஏதோ காதல் வாகனத்திற்கு டோக்கன் போடுபவர் போல் கேட்டது அபத்தம். ‘இந்த மேட்டரை வெச்சு கன்டென்ட் பண்ணாதீங்க’ என்று பிரதீப்பிடம் மணி வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார். ‘நீங்க எதை வேணா பண்ணித் தொலைங்க… இந்த பிரதீப்பையும் ரவீனாவையும் சிரிக்க மட்டும் சொல்லாதீங்க… காது ஙொய்ங்க்குது’ என்று நமக்குத்தான் பாயைப் பிறாண்டத் தோன்றியது.
அடுப்பைப் பற்ற வைத்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த விசித்ரா
‘ஜித்து ஜில்லாடி’ என்கிற பாடலுடன் நாள் 11 விடிந்தது. ‘என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா…’ என்கிற அங்கலாய்ப்புடன் எழுந்து வந்தார் விசித்ரா. கிச்சன் இடம் சுத்தமாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியது சரியான விஷயம். ஆனால் ‘சண்டை போட எப்போது வாய்ப்பு கிடைக்கும்?’ என்று காத்துக் கொண்டிருக்கும் சின்ன வீட்டு ஆட்களுக்கு பம்பர் லாட்டரி பரிசைத் தூக்கிக் கொடுப்பது போல் வார்த்தைகளை விட்டார் விசித்ரா. ‘ஏம்மா மாயா… உனக்கு கல்யாணம் ஆச்சா… என்னது நாலைஞ்சு முறை ஆச்சா… கிச்சன் இப்படி இருந்தா அப்படித்தான் ஆகும்’ என்றதெல்லாம் எல்லைத் தாண்டிய தீவிரவாதப் பேச்சு.
‘எதிரியிடமிருந்து ஒரு வார்த்தையை பிடுங்கி விட்டு பதிலுக்கு மிஷின் கன் மாதிரி நூறு வார்த்தைகளை எறியும்’ நுட்பமான விளையாட்டில் மாயா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், விஷ்ணுவோ ‘யார் தொட்டாலும் ஷாக் அடிக்கும்’ ரிப்பேர் ஆன இயந்திரம் மாதிரி கோபப்படுகிறார். விசித்ராவின் தலையீடு அவருக்கு எரிச்சலைத் தர ‘அதெல்லாம் நீங்க கேட்கக்கூடாது. கெளம்புங்க’ என்று துரத்திவிட்டார். அந்த வீட்டின் அமைதிப்புறாவான யுகேந்திரன் அந்தப் பக்கம் வந்து எதையோ சொல்லஇ அந்தப் புறாவையும் ஃபிரை செய்து சாப்பிடும் கொலைவெறியில் இருந்தார் விஷ்ணு. பிரதீப் எல்லாம் கேட்கவே வேண்டாம், தேங்காயைத் துறுவிக் கொண்டே ‘கிட்ட வந்தீங்கன்னா… சுடுதண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்’ என்கிற மோடில் இருந்தார்.
தனது உடல்நலப் பிரச்னை காரணமாக எண்ணெய் சேர்க்காத தோசையை அக்ஷயா கேட்க, ‘அப்படில்லாம் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா செய்ய முடியாது’ என்று பிரதீப் சொன்னது அராஜகம். சின்ன வீட்டார் செய்யும் பயங்கரமான அட்ராசிட்டியைத் தாங்க முடியாமல் பெரிய வீட்டார் கூடிக் கூடி குமுறிக் கொண்டிருந்தார்கள். ‘இந்த கேப்டன் வேற பயப்படறான்… சண்டை வரக்கூடாதுன்னு பார்க்கறான்’ என்று டென்ஷன் ஆகிக் கொண்டிருந்தார் யுகேந்திரன். ஆக… கடைசியில் அமைதிப்புறாவாக இருந்த யுகேந்திரனின் கையையும் பிடித்து இழுத்து வந்து கடைத் தெருவில் நிறுத்திவிட்டது பிக் பாஸ் வீடு.
“இந்த இடத்துல ஏழு பேர் இருக்கணும்… ஆறு பேருதான் இருக்கோம். வேலைப் பளு அதிகம். குறை வேற சொல்லிட்டே இருக்காங்க… அதனால நாங்க ஸ்ட்ரைக் பண்ணலாம்ன்னு இருக்கோம்” என்று தங்களின் சதித்திட்டத்தைப் பற்றி தனது காம்பவுண்ட் சுவர் தோழியான பூர்ணிமாவிடம் முதலில் ‘லீக்’ செய்தார் மாயா. “ஏதாச்சும் சாப்பிடறதுக்கு வேணும்னா இப்பவே எடுத்து வெச்சுக்கோ” என்று டிப்ஸ் வேறு தந்தார்கள்.
சின்ன பிக் பாஸ் வீடு அறிவித்த அநியாயமான ஸ்ட்ரைக்
சின்ன வீடு தருகிற பில்டப்பின் படி, பதினாறு பேருக்கு ஆறு பேர் சமைப்பது அத்தனையொன்றும் பளுவான வேலை இல்லை. மனதிருந்தால் செய்யலாம். ஆனால் ‘செய்ய மாட்டேன்’ என்று ஸ்ட்ரைக் செய்வது அநியாயம். ‘விதம் விதமா கேக்கறாங்க… குறை சொல்லிட்டே இருக்காங்க… வேலை அதிகம்’ என்று சின்ன வீடு சொல்வதிலும் கொஞ்ஞூண்டு நியாயம் இருக்கிறது. இந்தச் சமயத்தில் நமது வீடுகளில் சமைக்கும் அம்மாமார்களின் தியாகத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது. ஒரு வீட்டில் நிறைய பேர் இருந்தாலும்இ ஒவ்வொருவருக்கும் தனித்தனியான டேஸ்ட் இருந்தாலும், அவர்கள் அத்தனை பேருக்கும் நிறைவான உணவைத் தந்து சமாளிக்கும் விஷயத்தை பல ஆண்டுகளாக அவர்கள் செய்து கொண்டிருப்பது உண்மையிலேயே கிரேட். ஒருநாளும் அவர்கள் ஸ்ட்ரைக் செய்ததில்லை.
“சமைக்கறதெல்லாம் ஒரு வேலையா… என்ன கொடுமை… என் கெரகம்… இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” என்று வழக்கம் போல் தனியாக அனத்திக் கொண்டிருந்தார் விசித்ரா. “என்னப்பா தம்பிங்களா.. ஏதோ ஸ்ட்ரைக்கலாம் பண்ணப் போறீங்களாமே… கேள்விப்பட்டேன்’ என்று ஒன்றுமே தெரியாதது மாதிரி விசாரித்தார் சின்ன பிக் பாஸ்.
பெரிய பிக் பாஸ் கண்டிப்பான பெரியப்பா என்றால், இவர் ஜாலியான சித்தப்பாவாக இருக்கிறார். ‘என்னடா… சாப்பாட்டுப் பிரச்னை இத்தனை பெரிதாக போய்க் கொண்டிருக்கிறதே’ என்றில்லாமல் ‘அதெல்லாம் இருக்கட்டும். நான் பாட்டு மேட்டர் ஒண்ணு சொன்னேனே… ரெடியாச்சா?’ என்று சித்தப்பா விசாரிக்க, பெரிய வீட்டை வெறுப்பேற்றுவதற்கு இன்னொரு சான்ஸ் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது சின்ன வீடு.
பாடல் பதிவு துவங்கியது. ‘மணி… ரவீனா’ ரொமான்ஸ் வரியையும் இதில் நுழைக்க ஒரு கவிஞர் முற்பட்ட போது ‘அது வேணாம்ப்பா’ என்று நியாயவுணர்ச்சியுடன் தடுத்தார் பிரதீப். என்றாலும் அதையும் இணைத்தே எழுதினார்கள். பாடல் ரெக்கார்டு ஆனதும் அதைக் கொண்டு வந்து மொத்த வீட்டிற்கும் பாடிக் காட்டினார்கள். ‘எங்க வீட்டுல நாங்க இருந்தோமே. எதிர் வீட்டில் அவங்க இருந்தாங்களே’ என்று ஆரம்பித்து பெரிய வீட்டில் இருந்தவர்களை பங்கமாகக் கிண்டலடித்த வரிகள் அதில் இருந்தன. ‘வலிக்கலையே… எங்களுக்கு வலிக்கலையே’ என்பது போல் ‘சிரிச்சா மாதிரியே மூஞ்சியை’ வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தது பெரிய வீடு. ஆனால் உள்ளுக்குள் காண்டாவது நன்றாகத் தெரிந்தது. அதிலும் ‘மணி… ரவீனா பின்னாலே…’ என்கிற வரி வந்த போது புன்னகையுடன் பல்லைக் கடித்துக் கொண்டார் மணி.
இரண்டு வீட்டிற்கும் நடுவில் தத்தளித்த கேப்டன்
பசி தாங்க முடியாத ஹன்சிகா… மன்னிக்கவும் ரவீனா, ‘பிறந்த நாள் கேக்கையாவது கொடுங்க’ என்று கிச்சன் ஏரியா பக்கம் வர, அதைக் கூட சின்ன வீடு தர மறுத்தது அழிச்சாட்டியம். ஆனால் இந்தச் சமயத்தில் பிரதீப் செய்தது நல்ல விஷயம். பிறந்த நாள் கேக்கை சம்பந்தப்பட்டவருக்கே தர மறுப்பது சரியான விஷயம் இல்லை. எனவே ‘இது பிக் பாஸ் பிராப்பர்டி இல்ல. கொடுத்து தொலைச்சுடுவோம்’ என்கிற மாதிரி சாமர்த்தியமாக ஹாண்டில் செய்தது நன்று. பெரும்பாலும் கோக்குமாக்காக இயங்கும் பிரதீப்பிடம் அவ்வப்போது ஒரு நல்ல புத்திசாலி வெளிப்பட்டு விடுகிறான். ஆனால் அவர் கேக் எடுத்துத் தந்தததற்காக மாயா கோபித்துக் கொண்டார்.
‘ஒரு ஆள் வேணும். இல்லையென்றால் சாப்பாடு செய்ய மாட்டோம்’ என்று அதிகாரபூர்வமாக ஸ்ட்ரைக்கை அறிவித்த சின்ன வீடு, தங்களுக்கு மட்டும் ரகசியமாக ஆப்பிள் பழங்களைக் கடத்திச் சென்று பதுக்கிக் கொண்டது அநியாயம். ‘கருமம். ஏண்டா கேப்டன் ஆனோம்’ என்று சரவணன் தன்னையே நொந்து கொண்டிருப்பார். அந்த அளவிற்கு இந்த வீட்டிற்கும் அந்த வீட்டிற்கும் மாறி மாறிச் சென்று சமாதானம் பேசியதில் டயட் இல்லாமலேயே ஒல்லியாகிக் கொண்டிருந்தார். “ஒருத்தர் கம்மியா இருக்கறது பிக் பாஸ் முடிவு. அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல… (எதே?!) சாப்பாடு விஷயத்தில பிரச்னை பண்ணாதீங்க” என்று சின்ன வீட்டிற்குச் சென்று அதிகாரமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
‘உங்களுக்கு மட்டும்தான் பண்ணத் தெரியுமா வம்பு… எங்க கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்.’ என்று பதிலுக்குக் களத்தில் இறங்கிய பெரிய வீடு, தாங்கள் தந்திருந்த ஷாப்பிங் பொருள்களைத் திருப்பிக் கொண்டு வந்து அதிலிருந்த நொறுக்குத் தீனிகளை எடுத்து நொறுக்க ஆரம்பித்தார்கள். ‘கொஞ்ஞூண்டு சர்க்கரை கொடுங்க’ என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டி மாதிரி இரவல் கேட்ட விஜய்க்கு, ‘சுகர் இல்ல’ என்கிற ஆரோக்கியமான தகவலைச் சொல்லித் திருப்பியனுப்பினார்கள். “அப்ப உணவுப்பொருள்கள் எல்லாம் உங்களுக்கு மட்டுமே சொந்தமா… தெளிவா சொல்லிடுங்க…” என்று அடுத்த சண்டைக்கான விதையைப் போட்டார் மாயா.
‘குத்தினா… கத்துவேன்… கத்தினா குத்துவேன்’!
மனதிற்கு ஏதாவது பிரச்னையென்றால் உடனே ஆன்மிகப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது போல, பிக் பாஸ் வீட்டில் எந்தப் பிரச்னையென்றாலும் ‘ரூல் புக் எடுங்க’ என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அந்தப் புத்தகம் வந்ததும் முதல் பரிசு வென்றது மாதிரி துள்ளிக்குதித்தது பெரிய வீடு. ‘சமைக்க வேண்டிய பொருளை மட்டும் தந்தால் போதும்’ என்று விதி 2(1) சொல்லியதில் இவர்கள் பக்கம் வழக்கு வென்றது. “அதாவது எங்களுக்குச் சாப்பிட கொடுக்கக்கூடாதுன்னு நெனக்கறீங்க… அதானே’ என்று சென்டிமென்ட்டாக கேட்டு பெரிய வீட்டைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்த முயன்றார் மாயா.
‘எதையும் வித்தியாசமாக யோசித்து செயல்படுத்தும்’ பிரதீப் இந்த முறையும் தனது திறமையைக் காண்பித்தார். ப்ரீசரில் இருந்த இறைச்சி அயிட்டங்களையெல்லாம் எடுத்து வெளியே வைத்த அவர் “இதெல்லாம் எடுத்து நீங்களே வெச்சுக்கங்க… நான் ஃபிரிட்ஜை க்ளீன் பண்ணணும்” என்று அழும்பு செய்ய ஆரம்பித்தார். ‘அடப்பாவிங்களா… கேஸ் ஸ்டவ்வை க்ளீன் பண்ணுங்கடா…ன்னு நான் சொன்னதுக்குத்தானே இந்த சண்டையை ஆரம்பிச்சீங்க’ என்று விசித்ராவின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கக்கூடும். பிரதீப்பின் அட்ராசிட்டியை எதிர்த்து கேப்டன் சரவணன் வந்து பேசிய போது “வாயை விடாதீங்க. வாய் உடைஞ்சிடும்” என்று வாயை விட்டார் பிரதீப். “அவருடைய வன்முறைப் பேச்சை சபைக்குறிப்பில் பதிவு செய்யுங்க!” என்று பிக் பாஸிடம் முறையிட்டார் யுகேந்திரன்.
‘குத்துனா கத்துவேன். கத்தினா குத்துவேன்’ என்பது மாதிரி இந்தச் சண்டை வெகுநேரமாக நீண்டு கொண்டேயிருந்தது. எல்லாவற்றையும் கள்ள மௌனத்துடன் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்தார் பிக் பாஸ். ‘பாஸூ ஏதாச்சும் பண்ணுங்க பாஸூ. என்னால முடியல’ என்று சரவணன் கத்தித் கதறித் தீர்த்தாலும் புன்னகை மாறாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். இப்போது ஜோவிகாவும் களத்தில் இறங்கி “சமைக்கறதுதான் உங்க வேலை” என்று கத்த, பிரதீப் பதிலுக்குக் கத்த நிலைமை இன்னமும் உஷ்ணமானது. அண்டை மாநிலம் போலத் தண்ணீர் கூட தராமல் சின்ன வீடு அழிச்சாட்டியம் செய்ததெல்லாம் ஓவர். இந்த வாரம் கமல் வரும் போது ‘எதைத்தான் விசாரிப்பது?’ என்று அவருக்கே தலை சுற்றி விடும். அந்த அளவிற்கு ஆளாளுக்கு கன்டென்ட் குடோனாக இருக்கிறார்கள்.
நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சரவணன், ஒருவழியாக ஒரு முடிவை எடுத்தார். “யாரும் சமைக்க வேணாம். நீங்க ரெஸ்ட் எடுங்க. நானே எல்லோருக்கும் சமைக்கறேன்… இது என் ஆர்டர்’” என்று கறாராகச் சொன்னதெல்லாம் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம். இதற்குப் பதிலாக “சரி… உங்களுக்கு ஒரு ஆள்தானே வேணும்… நான் வரேன்” என்று அப்போதே இறங்கியிருந்தால் பிரச்னை மதியமே தீர்ந்திருக்கலாம். ‘வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை’ என்கிற கதையாக, ‘நான் ஹெல்ப் பண்ண வர மாட்டேன். ஆனா நானே மொத்தமா சமைக்கறேன்’ என்று சரவணன் எடுக்கும் முடிவு அபத்தமானது.
‘இருங்கப்பா… ஒரு பொஷிஷன்ல நின்னு அழுதுக்கறேன்’ என்கிற வடிவேலு மாதிரி ஒரமாகச் சென்று கண்கலங்கிய சரவணன், “ஓகே… நான் இன்னொரு முடிவு எடுத்துட்டேன். யாரும் என்னைத் தடுக்காதீங்க.. நான் வந்து ஹெல்ப் பண்றேன். இனிமேலும் இதைப் பேசி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க” என்று நுட்பமான சமாதானக் கொடியை ஆட்ட, ஒருவழியாக உணவுப் போராட்டம் ஓய்ந்து சமைக்க ஆரம்பித்தார்கள். அதுவரை நடந்த அத்தனை வார்த்தைகளையும் மறந்து அனைவரும் ஃபிரைடு ரைஸ் மற்றும் சிக்கன் குழம்பு மீது பாய்ந்ததில் ஒன்று மட்டும் புரிந்தது. ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’.
ஆனால் அந்தப் பசியை வைத்தே பத்து நாள்களுக்கான கன்டென்ட்டைத் தேற்றிய பிக் பாஸ்தான் உண்மையான சமையல் மாஸ்டர்.
- சுரேஷ் கண்ணன்
- நன்றி – விகடன்
- (விகடன் இணைப்பு)