அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார் என்று கூறப்படும் முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு எந்தவித உயிர் அச்சுறுத்தல்களும் இருக்கவில்லை. முன்னேற்பாடாக திட்டமிட்டே அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று குற்றப் புலனாய்வு பிரிவின் டிஜிற்றல் பிரிவு அரசாங்கத்துக்கு அறிக்கையிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி. சரவணராஜா கடந்த மாதம் 25 ஆம் திகதி இந்தியா செல்வதற்காகவே விடுமுறை கோரினார். இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நீதிபதியின் முன்னேற்பாடான திட்டத்துக்கு இணங்க கடந்த செப்ரெம்பர் மாதம் 24 ஆம்
திகதி அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இந்தச் செயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்று எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸ்,
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் சரவணராஜா முறையிடவில்லை. 23 ஆம் திகதி இராஜிநாமா கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கிய அவர் 24ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் நீதிபதி தொடர்பில் முல் லைத்தீவு மாவட்ட நீதிபதியின் மனைவி, முல்லைத்தீவு மேலதிக நீதவான், முல்லைத்தீவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வாக்கு மூலங்களில் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்ப தாகவோ அல்லது அவர்
அவ்வாறு கூறினார் என்றோ அவர்கள் கூறவில்லை என்று அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கடந்த செப். 24 ஆம் திகதி துபாய் சென்றார்.
இதற்காக அவர் எயார் அரேபியா விமான சேவைக்கான விமான ரிக்கெற்றை குருநாகலிலுள்ள முகவர் ஒருவர் ஊடாக கொள்வனவு செய்துள்ளார். அமெரிக்காவின் தொலைபேசி இலக்கமொன்றின் மூலம் இச்செயல் முன்னெடுக்கப்பட்டது.
அந்த அமெரிக்க தொலைபேசி இலக்கம் செயல்படாவிட்டால், மீண்டும் அழைப்பதற்காக கென்யாவின் தொலைபேசி இலக்கமொன்று ரிக்கெற் விற்பனை முகவரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விமான ரிக்கெற்றுக்கான கட்டணம் கல்முனை பிரதேசத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.