‘அழக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிச்சே..இருந்தாலும் சில சமயங்களில் முடியல. ஸாரிம்மா..’ என்று காமிரா முன்னால் தனது அம்மாவிடம் வினுஷா பேசிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த எபிசோடு ஒருமாதிரி ‘கச்சா முச்சா’வென்றிருந்தது. ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் நின்று ஸ்பீக்கர்களுக்கே தீ பிடிக்கும் அளவில் கத்திக் கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் விதம் விதமாக தரும் நெருக்கடி காரணமாக ‘கன்டென்ட்’ தந்தே தீர வேண்டிய நிலைமையில் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். பதினெட்டு கமல்ஹாசன்கள் ஒரே பிரேமில் நடித்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது இந்த எபிசோடு.
பெரிய வீடு, சின்ன வீடு என்பதை இவர்கள் எதிரி நாட்டின் எல்லை என்பது போல் எடுத்துக் கொண்டு விதம் விதமான விரோத வியூகங்களை செய்து கொண்டிருப்பது நெருடலாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
முதல் நாள் சமையலில், பாஸ்தாவில் காரம் போட்டு சொதப்பிய கிச்சன் டீம், அடுத்த நாளில் சிறப்பாக உணவு செய்து பெரிய வீட்டில் இருந்து பாராட்டுக்களைப் பெற்றது. ‘என்னடா.. இது ரெண்டு வீடும் ஒத்துமையா ஆயிடும் போலியே’ என்று பிக் பாஸ் கூட ஒரு கணம் பயந்திருப்பார். ஆனால் அடுத்த வேளை உணவில் பெரும் பிரச்சினை ஏற்பட்டவுடன்தான் அவருக்கு ‘ஹப்பாடா’ என்று நிம்மதியாக ஆகியிருக்கும். (அதானே. பார்த்தோம்.. எவ்வளவு யோசிச்சு கொலைவெறியான விதிகளை உருவாக்கியிருக்கோம்?!).
பெரிய வீட்டிலிருந்து அடுத்த வேளைக்கான மெனு எழுதப்பட்டது. ரொட்டி, முட்டை என்று சிம்பிளாக இருந்தாலும் ‘அதை விதம் விதமாக செய்ய வேண்டும்’ என்கிற ஆர்டரை சின்ன வீடு ஏற்கவில்லை. ‘அப்படில்லாம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி செய்ய முடியாது. ஒரே மெனுவா சொல்லுங்க’ என்று அவர்கள் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஆனால் தங்களின் ஆட்சேபத்தை அவர்கள் ‘துடுக் துடுக்’ என்று துடுக்குத்தனமாக பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி தெரிவித்தது, பெரிய வீட்டை கோபப்படுத்தி விட்டது. அவர்கள் கூடிப்பேசி என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.
‘அப்படியா சங்கதி! நாமளும் பதிலுக்கு கேம் ஆடுவோம்’ என்று சின்ன வீடு பதிலுக்கு முஷ்டியை உயர்த்த வீட்டை போர்க்கால மேகங்கள் சூழ்ந்தன. சரசரவென வியூகங்கள் வகுக்கப்பட்டன. எதிரிகளின் நடமாட்டம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதற்கேற்ப ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இரண்டு தரப்பிற்கும் இடையே அமைதித் தூதுவராக மாற வேண்டிய கட்டாயத்திலிருந்த கேப்டன் சரவணன், இங்கிட்டும் அங்கிட்டும் மாறி மாறி ஓடி தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த காட்சிகள் பரிதாபம்.
‘நாமளும் பாட்டுப்பாடி அவங்களை வெறுப்பேத்துவோம்’ என்றார் மணி. இதுவரை அமைதியாக இருந்த நிக்சன் கூட இப்போது ‘கன்டென்ட்’ தருமளவிற்கு ஆவேசமாகி விட்டார். ‘ண்ணோவ்.. அங்க சொல்றதுக்குள்லாம் போய் போய் தலையாட்டிட்டு வந்துடறே.. அப்படில்லாம் பொறுத்துட்டு போக முடியாது.’ என்று கேப்டனை நோக்கி அவர் கோபித்துக் கொண்ட போது ‘இந்தப் பையனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்’ என்று ஆச்சரியமாக இருந்தது.
பிரதீப் – மந்தையில் இருந்து விலகும் ஆடு
எங்கே சென்றாலும் அங்கு தன்னுடைய கலகத்தை ஏற்படுத்தி, மந்தையில் இருந்து விலகிய ஆடாக இருக்க வேண்டும் என்கிற தனி அடையாளத்தை வைத்திருக்கும் பிரதீப், ‘சின்ன பிக் பாஸ் வீட்டுக்குள்’ ஒரு ரிபெல் ஆக இருந்தார். “அவங்க கேக்கறது சிம்பிள் மெனு. அதை சமைக்கறதுல என்ன பிரச்சினை? நான் ரெண்டு சைடும் இல்ல. தனியாள். நீங்க ஒதுங்குங்க.. நான் மொத்தமா சமைக்கறேன்.. நான் ரெண்டு பக்கமும் இல்ல’ என்று சொல்ல விஷ்ணுவிற்கும் பிரதீப்பிற்கும் இடையே முட்டிக் கொண்டது. ‘வாடா.. வாடா..சண்டைக்கு வாடா’ என்கிற மோடில் இருக்கும் விஷ்ணு, எதைத் தொட்டாலும் ‘கன்டென்ட்’ ஆக மாறுமா என்று சண்டைக் கோழியாக இருக்கிறார்.
‘அங்கும் இங்கும் பாதை உண்டு.. இதில் நீ எந்தப் பக்கம்’ என்கிற பாட்டு மாதிரி இங்கும் அங்கும் ஓடி ஓடி சமாதானம் செய்த சரவணணைப் பார்த்து பெரிய வீட்டுக்கு பரிதாபம் ஏற்பட ‘ஓகே.. காம்ப்ரமைஸ் ஆகலாம். ஆனா பாட்டுப்பாடி வெறுப்பேத்தினதுக்கு அவங்க ஸாரி சொல்லணும்’ என்று கேட்க மீண்டும் சின்ன வீட்டுக்கு ஓடினார். “ஆக்சுவலி.. ஸாரி கேட்கறதுல எனக்கு விருப்பமில்ல. ஆனா அவங்க இம்சை பண்றாங்க’ என்று கெஞ்சிய சரவணணைப் பார்த்து சின்ன வீட்டுக்கும் பரிதாபம் ஏற்பட்டது. ‘படுத்தே வி்ட்டானய்யா’ என்கிற ரேஞ்சிற்கு கேப்டன் இறங்கி ஒருவழியாக சமாதானத்தை ஏற்படுத்தினார். ‘தண்ணிய. குடி. தண்ணிய குடி’ என்று கேப்டனுக்கு ஆறுதல் சொன்னார் விசித்ரா.
முதல் குறும்படத்திற்கான அவசியம் வந்து விட்டதா?
‘க.. க.. போ’ என்கிற பாடலுடன் நாள் 9 விடிந்தது. கத்தி கத்தியே இம்சை செய்யும் சுரேஷிடம், உண்மையாகவே ஒரு ‘கூலான’ மனிதர் இருக்கிறார் என்பது வெளிப்பட்ட தருணம். ‘அக்ஷயாவும் வினுஷாவும் ஜெயிலுக்குப் போற ஆபத்துல இருக்காங்க.. டாஸ்க்ல முன்னுரிமை தந்து அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்தா ஜெயில்ல இருந்து தப்பிக்க சான்ஸ் இருக்கு’ என்று கேப்டனிடம் அவர் சொன்ன ஆலோசனை மனிதாபிமானம் மிக்கது.
‘எங்க அம்மா பத்தி தப்பா பேசிட்டாங்க’ என்று பிரதீப் சொன்ன விஷயம் ஒரு மாதிரி குழப்பமான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அப்படி பேசினாங்களான்னும் தெரியல. பேசலைன்னா நான் ஸாரி கேட்பேன்’ என்றும் சொல்லி பிரதீப் குட்டையைக் குழப்புகிறார். இந்தப் பழி தன் மீதும் விழுந்திருப்பதால் அது குறித்த மனஉளைச்சலில் மாயா இருக்கிறார். பக்கத்தில் நின்று சிரித்த இரண்டு நபராக மாயாவையும் பூர்ணிமாவையும் வீடு கருதிக் கொண்டிருக்கிறதோ என்கிற பதட்டம் அவருக்குள் இருக்கிறது. ‘நாம அப்படில்லாம் பண்ற ஆளு நிச்சயம் கிடையாது. ஒருவேளை காதுல சரியா விழாம.. நான் சிரிச்சிருப்பேன்.. இதை நிச்சயம் கூல் சுரேஷூம். விஷ்ணுவும்தான் செஞ்சிருப்பாங்க.. அவங்க செய்யக்கூடிய ஆளுங்கதான்’ என்று பூர்ணிமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. குறும்படம் வெளியாகாமல் இதற்கு தீர்வு கிடைக்காது போல.
வீட்டிற்குள் இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க, ரவீணாவும் நிக்சனும் ரணகளத்தில் கிளுகிளுப்பாக கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘மத்த பொண்ணுங்களை தம்பின்னு கூப்பிடறே.. நான் உன் தம்பி இல்லையா..” என்று ரவீணா கேட்டுக் கொண்டிருந்தார். இதில் ‘தம்பி’ என்பது அட்லி படங்களில் வருவது போல் ரொமான்ஸ் code word ஆக இருக்குமோ? ‘இங்க யாரு கூடயும் எமோஷனலா கனெக்ட் ஆகக்கூடாது. உன் மேலயும் கனெக்ட் கிடையாது.. ஆனா இருக்கு’ என்று குக்கர் விசிலை விழுங்கியது போன்ற குரலில் ரவீணா ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்து சிரித்து ஸ்பீக்கருக்கு இம்சையைத் தந்தார்.
வினுஷாவிற்கும் அக்ஷயாவிற்கும் சிறைத்தண்டனை நிச்சயம்?
அக்ஷயாவிற்கும் வினுஷாவிற்கும் முன்னுரிமை தந்து அவர்களை சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க முடியுமா என்று யோசித்தது நல்ல விஷயம். வீடு சுத்தம் செய்யும் பணிக்கான டாஸ்க்கில் விஜய்யுடன் சிறப்பாக போரடினார் அக்ஷயா. என்றாலும் விஜய் வெற்றி. அதே போல் ‘பாத்ரூம் சுத்தம் செய்யும் அடுத்த டாஸ்க்கில் ஐஷூவுடன் மோதி தோற்றுப் போனார் வினுஷா. ஆக இரண்டு வாய்ப்புகளிலும் இவர்கள் போராடி தோற்றது துரதிர்ஷ்டம். ‘என்னாச்சு.. ரெண்டுத்துலயும் தோல்வி. ஜெயில் தண்டனை காத்திக்கிட்டு இருக்கு.. சுதாரிச்சுக்கங்க.. டிக் டாக்.. டிக் டாக்’ என்று பிக் பாஸ் வேறு தனியாக வெறுப்பேற்றி பீதியைக் கிளப்பினார்.
கர்ப்பிணி பெண்ணாக அக்ஷயா நடித்த ஒரு ‘மோனோ ஆக்டிங்’ உருக்கமாக இருந்தது. அல்லது அந்த பாவனையில் அனைவரும் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். ரவீணாவின் கண்களில் நீர். ‘அழக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிச்சே..இருந்தாலும் சில சமயங்களில் முடியல. ஸாரிம்மா..’ என்று காமிரா முன்னால் தனது அம்மாவிடம் வினுஷா பேசிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. செயற்கையாக உருவாக்கி நடிப்பதை விடவும் இயல்பாக வெளிப்படும் உணர்வுகள்தான் பார்க்க அசலாக இருக்கிறது.
‘கோவைக்காய் கறி’ காரமாக இருந்ததால் அதை அப்படியே குப்பையில் கொட்டினார் வினுஷா. உணவை வீணடிப்பது பொதுவாகவே தவறான விஷயம். அதிலும் ரேஷன் முறை அமுலில் இருக்கும் பிக் பாஸ் வீடடில் இப்படிச் செய்வது மகா தவறு. ‘ஃபிரை பண்ணியிருந்தா சாப்பிடுவேன். இப்படி பண்ணது பிடிக்கல’ என்று கொட்டியதற்கான காரணத்தை வினுஷா சொன்னது இயல்பான விஷயம். அதற்குப் போய் ‘அப்ப வீட்ல போய் சாப்பிடு.. நாங்க ஒண்ணும் செப் இல்ல. விதம் விதமா சமைக்கறதுக்கு..’ என்று அநாவசியமாக விஷ்ணு கோபப்பட்டது, கோவைக்காயை விடவும் அதிகமாக காரமாக இருந்தது.
பிரதீப்பின் உக்கிரமான ஸ்ட்ராட்டஜி
‘நான் வீட்டை விட்டு போறேன்’ என்று அழும்பு செய்த மாயா, இப்போதோ ‘நான் இந்த வீட்டோடு மிங்கிள் ஆயிட்டேன். எல்லோருமே சொந்தக்காரங்களா ஆயிட்டாங்க..’ என்று கற்பனை கிரிக்கெட் டீம் மாதிரி ஒரு ரேஷன் கார்டு தயாரித்துக் கொண்டிருந்தார். பிடிக்காத மாமா பிரதீப்பாம். விஷ்ணு அண்ணனாம். சரவணன் முறை மாமனாம். விஜய்யும் அதே கேட்டகிரியாம். டீன் ஏஜ் மாணவர்கள் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு ‘மச்சான்.. அந்த ஃபிகர் என்னுது.. பச்சை சுரிதாரை வேணுமின்னா நீ சைட் அடிச்சுக்கோ’ என்று டீல் போட்டுக் கொள்வார்கள் அல்லவா? மாயாவும் பூர்ணிமாவும் கிளுகிளுப்பாக பேசிக் கொண்டிருந்தது அப்படித்தான் இருந்தது. ஆக ஏதோ ரொமான்ஸ் கன்டென்ட் கொடுக்க தயாராகி விட்டார்கள் போலிருக்கிறது.
இன்னொரு பக்கம் வழக்கம் போல உக்கிரமாக ஸ்ட்ராட்டஜி யோசித்துக் கொண்டிருந்தார் பிரதீப். “ஜோவிகா கிட்ட உஷாரா ஆடணும்.. டேஞ்சரஸ் கோ்ள். நல்லா ஆடறா.. நிக்சன் பயலை இரக்கம் பார்த்து விட்டு வெச்சிருக்கேன். முதல்ல பணக்காரப்பசங்களை தூக்கிட்டு அப்புறம் ஏழைப்பசங்களுக்கு வரணும். விஜய்லாம் ஜிம் சொந்தக்காரன். விஷ்ணுவைப் பார்த்தா அவ்ள வசதி மாதிரி தெரியல’ என்றெல்லாம் பிரதீப் சொல்லிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜி என்றாலும் கூட அதில் கம்யூனிச நோக்கில் எம்.ஜி.ஆர் படம் மாதிரி வர்க்க பேதம் பார்க்கும் பிரதிப்பீன் சமூக சிந்தனை குறித்து வியப்பாக இருந்தது. (என்ன இருந்தாலும் படிச்சவன்.. படிச்சவன்தாம்பா!)
‘அந்த விஷயத்தை நான் பண்ணலை.. பண்ணியிருந்தாலும் சரியா கேட்டிருக்காது’ என்று புலம்பிக் கொண்டிருக்கும் மாயா, பிரதீப்பிடம் சென்று எப்பவோ தனியாகப் பேசியிருக்கலாம். இப்போது அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. மாயாவும் பிரதீப்பும் பேசினார்கள்.
“இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் நான் சிரிக்க மாட்டேன். நான் அவ்ளோ கேவலமானவ இல்ல. என்னை அப்படியல்லாம் வளர்க்கல.. ஒருவேளை எனக்கு சரியா கேட்டிருக்காது.. என் பக்கம் தப்பு இருந்தா இப்பவே ஸாரி கேட்டுட்டு கிளம்பிடுவேன்’ என்றெல்லாம் தார்மீகமான ஆவேசத்துடன் பிரதீப்பிற்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார் மாயா. “நான் எதுக்கும் காண்டாக மாட்டேன். தெரிஞ்சுதானே வந்திருக்கோம். ஆனா இந்த ஒரு விஷயம்தான் என்னை அப்செட் ஆக்கிடுச்சு.. ஓகே.. நீ பேசலைல்ல.. விடு’ என்று பிரதீப் சொல்ல இருவரும் ஸாரி சொல்லி கட்டியணைத்துக் கொண்டு சமரசம் ஆனார்கள். “நீங்க ஒண்ணா இருந்தா பார்க்க நல்லாவே இல்லை” என்று ஐஷூ சொல்லியது பிக் பாஸின் குரல் மாதிரியே இருந்தது.
பெரிய வீட்டுக்கு எதிராக சின்ன வீடு சதியாலோசனை செய்து கொண்டிருந்தது. “அந்த வீட்ல எல்லோருமே வேஸ்ட். மணி ரொம்ப டிப்ளமாட்டிக்கா இருக்கான். கமல் சார் கேள்வி கேக்கற மாதிரியாவது ஏதாச்சும் செய்யணும்ல.. அடுத்த வாரம் நம்மள்ல ஒருத்தர் கேப்டன் ஆகணும்.. அவங்க எண்ணிக்கை அதிகமா இருக்கறதால ஓட்டு பயங்கரமாக குத்தறாங்க..” என்றெல்லாம் தீவிர உரையாடல் நடந்து கொண்டிருந்தது.
கோல்டன் ஸ்டார் – ஜெயிக்கப் போவது யார்?
கோல்டன் ஸ்டாருக்கான டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘இந்த பத்து நாட்களில் யார் மக்களுக்கு அதிகமா எண்டர்டெயின்மென்ட் தந்திருப்பது என்று ஒவ்வொருவரும் பேச வேண்டும். மற்றவர்கள் அதில் சந்தேகம் எழுப்பலாம். இறுதியில் அனைவரும் கலந்துரையாடி ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கே ஸ்டார்’ என்பது விதி.
முதலில் வந்த கூல் சுரேஷ் ‘என்னைப் பார்த்தவுடனே மக்களுக்கு எண்டர்டெயின்மென்ட் எனர்ஜி வந்துடும். வேக் அப் டான்ஸுக்கு நான் ஆடறது எப்படியும் இன்டர்நேனஷல் லெவலுக்கு போயிருக்கும். நான் எக்சர்சைஸ் செய்யறதைப் பார்த்து மக்களுக்கு உற்சாகம் வரும்’ என்றெல்லாம் அடித்து விட்டார். ‘நீங்க அடிக்கடி கத்தறது மக்களுக்கு எரிச்சலைத் தராதா?’ என்று சரியான கேள்வியைக் கேட்டார் ஜோவிகா. “அப்படி எரிச்சல் வந்தாலும் என்னை நெனக்கறாங்கள்ல?’ என்றார் சுரேஷ். நெகட்டிவ் பப்ளிசிட்டி எப்போதும் நிலைக்காது. “இப்பவும் எனக்கு ஓட்டு போட மாட்டீங்கள்ல.. நீங்கள்லாம் நல்லா வருவீங்கடா” என்று இறுதியில் அவர் ஜாலியாக சாபம் விட அதற்கும் வீடு கலகலகத்தது.
இரு வீட்டுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதான். ஆனால் உணவு விஷயம் முதற்கொண்டு அனைத்திலும் எல்கேஜித்தனமாக இவர்கள் சண்டை போடுவதைப் பார்க்கும் போது ‘ஸ்கூல் பிள்ளைகள் டாஸ்க்’கை இப்போதே பிராக்டிஸ் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.
- சுரேஷ் கண்ணன்
- ன்றி – விகடன்
- (விகடன் இணைப்பு)