பிக்பாஸ் 07; 08 ஆம் நாள் – சுரேஷ் கண்ணன்!

editor 2

பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும் போறேன்’ என்று மாயாவும் கூடவே கிளம்ப முயன்றது, விஷ்ணுவின் அடாவடித்தனங்கள், இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்ட், அக்ஷயாவின் அழுகை

இந்த எட்டு நாளைக்குள் நிறைய ஏழரைத்தனமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.

பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும் போறேன்’ என்று மாயாவும் கூடவே கிளம்ப முயன்றது, விஷ்ணுவின் அடாவடித்தனங்கள், இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்ட், அக்ஷயாவின் அழுகை என்று பிக் பாஸ் வீட்டின் சம்பிரதாய சம்பவங்கள் பெரும்பாலும் இப்போதே நிறைவேறி விட்டன.

‘வைல்டு கார்ட்டு என்ட்ரி” நிகழ்ந்து ‘குறும்படமும்’ காட்டப்பட்டு விட்டால் ஒரு மாதிரி முழுமையாகி விடும். இந்த சீசன் அத்தனை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 8 EP9)

பவா செல்லத்துரை வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும் மனநிலைக்கு வந்து விட்டார். ஆரம்ப நாளிலேயே சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டது, விசித்ராவின் அவமதிப்பு, எக்ஸ்ட்ரா காஃபி தரப்படாத சோதனை, பாவக் கதை சொன்னதற்குக் கிடைத்த பாவமான எதிர்வினைகள், ‘பவாதான் முதல் வாரம் வெளியே போவார்’ என்று பெரும்பாலும் சொன்னது, “வேலை செய்ய மாட்றாரு, சோம்பேறி” என்று இளைஞர்கள் சொல்லும் கமென்ட் போன்ற விஷயங்கள் அவருடைய மனதைப் பாதித்திருக்கலாம். போதாக்குறைக்கு ‘கடவுளே வந்து சொன்னா கூட கேட்க மாட்டேன்ன்னு சொல்றவங்களும் மேடைக்கு வந்துடலாம்’ என்று வாழைப்பழத்தில் கடப்பாறையே வைத்து சென்று விட்டு விட்டார், கமல்.

ஊருக்கெல்லாம் மற்றவர்களின் கதையை சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தார் பவா. இப்போது அவருடைய சொந்த சோகக் கதையை ஊர் பரிதாபமாக பேசும்படி ஆக்கி விட்டது பிக் பாஸ் வீடு.

‘என்னோட டார்க் சைடை பார்க்க வந்தேன்’ என்றவர், மற்றவர்களின் டார்க் சைடுகளை தாங்க முடியாத அளவிற்கு சென்று விட்டார். இதன் உச்சமாக இன்னொரு வாரமும் சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டது பரிதாபத்தின் சிகரம்.

“எனக்கு இந்த டீம் ஓகேதான். ரொம்பவும் இரிட்டேடிங்கா இருந்தது அந்த மேடம்தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் பவா. அந்த மேடம் விசித்ரா. “நீயும் விசித்ராவும் பயங்கரமா சண்டை போட்டுக்கறீங்க.. அப்புறம் ஒண்ணா பேசறீங்க. இல்ல.. எனக்குப் புரியல.. தலை சுத்துது’ என்று பிரதீப்பிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பவா.

ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் கலாட்டா போதாதென்று பிரதீப்பின் கலாட்டா வேறு. ‘இவங்க கூடத்தான் எங்க அம்மா பத்தி தப்பா பேசினாங்க’ என்று மாயாவை நோக்கி பிரதீப் இயல்பாக சொல்லி விட ‘இன்னாது.. யார் பேசினாங்க.. என்ன திடீர்னு என்னைப் பார்த்து பாயைப் பிறாண்டற?’ என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே மாயா கேட்டார். ‘கமல் சார்.. தராசு.. ஒரு பக்கம்’ என்றெல்லாம் பிரதீப் சொல்ல “அடேய்.. அது விசித்ரா, பிரதீப், விஜய் மூன்று பேரும் பேசிய வன்முறைப் பேச்சு பற்றியது. அதில் விஜய்யின் பக்கம் தராசு அதிகமாக இருக்கு’ன்னு சொன்னாரு’ என்று அவர்கள் விளக்கம் தந்தார்கள். ‘இன்னா உளர்ற.. நான் அப்படில்லாம் பேச மாட்டேன்’ என்று விஜய்யும் இந்தப் புகாரை மறுத்தார்.

‘பிரதீப் என்னை சாவடிச்சுடுவான்’ – ஓவர் சீன் போட்ட மாயா

என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முயலலாம். ‘ஒருவரின் சோகத்தை கிண்டலடித்து விஜய் பேசினார். கூடவே நின்று இரண்டு பேர் சிரித்துக் கொண்டிருந்தனர். யாரு.. என்னன்னுலாம் சொல்ல மாட்டேன்.. அது விஜய்க்குத் தெரியும். மத்தவங்களை விட தராசு விஜய் பக்கம் அதிகமா சாய்ஞ்சதால அவருக்கு மஞ்சள் கார்டு.. புரியுதா?’ என்று விஜய்க்கு மட்டும் வார்னிங் தரப்பட்டதின் பின்னணியைப் பற்றி கமல் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய குடும்பத்தைப் பற்றி விஜய்யும் இன்னும் இருவரும் ஏதோ மோசமாக புறணி பேசியிருக்கிறார்கள்’ என்று பிரதீப் கருதிக் கொண்டிருக்கிறார். ‘எனக்குத் தெரியல. தப்பா இருந்தா ஸாரி கேட்குக்கறேன்.’ என்று வழக்கம் போல் இப்போது பிரதீப் ரிவர்ஸ் கியர் போட, “குறும்படம் பார்த்துட்டுதான் மறுவேலை. என்ன நெனச்சிக்கிட்டு இருக்க?” என்று மாயாவும் பதிலுக்கு ஆவேசமானார்.

“அவனுக்கு சைக்கியாட்ரிஸ்ட் உதவி தேவை. என்னென்னமோ உளர்றான். தூங்கிட்டு இருக்கும் போது என்னைக் கொன்னாலும் கொன்ருவான்.. நான் வீட்டுக்குள்ள வர மாட்டேன்.. பவா சார் வெளில போறாரு. நானும் போறேன்’ என்று பெட்டியை வைத்துக் கொண்டு வாசலிலேயே தர்ணா செய்தார் மாயா. இவர் பல சமயங்களில் அறிவுபூர்வமாக பேசுகிறார். ஆனால் சில சமயங்களில் ஆர்வக் கோளாறு காரணமாக மாயா செய்யும் விஷயங்கள் சகிக்கவில்லை. பிரதீப்பின் வன்முறைப் பேச்சு பற்றி ‘அறியாமையின் பலவீனம்’ என்று சரியான சொற்களால் கமல் ஏற்கெனவே வர்ணித்து விட்டார். மற்றவர்களை எரிச்சலூட்டுவது போல் பிரதீப் நடந்து கொள்கிறாரே, தவிர ஆபத்து ஏற்படுத்தும் அளவிற்கெல்லாம் அவர் மோசமானவர் அல்ல. மாயாவின் இந்த ஓவர் ரியாக்ஷன் தேவையில்லாத ஆணி.

‘கூல் சுரேஷ் ஏடாகூடமா பேசறாரு.. போய் கேட்டா திமிரா பேசறாரு.. கூட இருக்கற பசங்களும் என்னன்னு கேக்கவே மாட்றாங்க’ என்று மாயா சொல்லும் இன்னொரு புகார் சற்று ஏற்கத்தக்கது.

சுரேஷ் செய்யும் கொனஷ்டைகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு வீட்டில் பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.. இதைப் போன்ற விஷயங்களை எதிர்கொள்ளும் திராணியோடுதானே பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும்?!

‘நானும் போறேன்’ என்று அனத்திக் கொண்டிருந்த மாயாவை பிக் பாஸ் வாக்குமூல அறைக்கு அழைத்தார். “பிரதீப்போட தங்கறதுக்கு எனக்குப் பயமா இருக்கு. சேஃப்டியா ஃபீல் பண்ணலை.. இவ்ளேளோ சீக்கிரம் வெளியே போக முடிவு செய்வேன்னு நானே நெனக்கலை.. ஆனா என்னால முடியல” என்றெல்லாம் மாயா சொல்ல, “இப்ப மணி என்ன ஆகுது.. நடுராத்திரி.. இந்தச் சமயத்துல நீங்க எங்கயோ இருக்கீங்க.. என்ன அர்த்தம். 24 மணி நேரமும் எங்க டீம் உங்களை உன்னிப்பா கண்காணிக்குது.. என்னை நம்பு.. நான் இருக்கேம்மா.. அண்ணன் இருக்கேன்.. அப்படில்லாம் நடக்க விட்டுருவேனா தங்கச்சி” என்றெல்லாம் பிக் பாஸ் பாசத்துடன் தைரியம் சொன்னவுடன் அதைப் பற்றிக் கொண்டு உள்ளே சென்றார் மாயா.

‘ஊருக்கெல்லாம் கதை சொன்னேன். என் கதையை சோகமா மாத்திட்டீங்களேடா!’

இன்னொரு பக்கம், ‘என்னை அனுப்பிடுங்க.. பிக் பாஸ்.. மண்டை குழம்புது.. லோவா ஃபீல் பண்றேன். முடியல.. தூக்கம் வரல..’ என்றெல்லாம் விடியும் வரை அனத்திக் கொண்டிருந்தார் பவா. எந்தவொரு செயலையும் அதன் உச்சம் வரை நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு கிளைமாக்ஸில் இறங்கி ஆக்ஷன் எடுப்பதுதான் பிக் பாஸின் ஸ்டைல். ஒருவேளை சம்பந்தப்பட்டவர் இடையில் மனம் மாறலாம் என்பது காரணமாக இருக்கலாம்.

பவா தொடர்ந்து கோரிக்கை வைத்ததால் ‘ஓகே.. பவா.. உங்களின் மனநிலை மற்றும் உடல்நிலை கருதி வெளியே அனுப்பறேன்’ என்று ஒருவழியாக ரிலீஸ் செய்தார் பிக் பாஸ். ‘ஹப்பாடா’ என்று கிளம்பிய பவா, வெளியே சென்றவுடன் நல்ல ஹோட்டலாகப் பார்த்து ஒரு ஸ்ட்ராங் காஃபி சாப்பிடும் விஷயத்தைத்தான் முதலில் செய்திருப்பார் என்று தோன்றுகிறது. (காஃபி இல்லாத வாழ்க்கை.. என்ன வாழ்க்கை!)

பவா இளைய தலைமுறையினருடன் தன்னை இணைத்துக் கொள்ளும் மனநிலையுடன்தான் உள்ளே வந்தார். ‘ஐயா.. ல்லாம் வேண்டாம். பவான்னு கூப்பிடுங்க’ என்று இணக்கமாக முயன்றார். ஆனால் நுண்ணுணர்வு மிக்கவர்கள், பிஞ்சு நெஞ்சம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு பிக் பாஸ் வீடு கொடுமையான அனுபவமாக இருக்கும். ‘நான் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்த்ததில்லை’ என்று சொன்ன பவா, ஒன்றிரண்டு நிகழ்ச்சியையாவது பார்த்து விட்டு வந்திருக்கலாம் அல்லது சரியான மனிதர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். ‘இந்த அனுபவத்தையும் பார்த்து விடுவோம்’ என்று அவர் வந்தது நல்ல விஷயம்தான். ஆனால் உள்ளே என்ன நிகழும் என்பதை சற்றாவது சாம்பிள் அறிந்திருக்க வேண்டும். (வனிதா விஜயகுமாரின் ஒரு எபிஸோட் பார்த்திருந்தால் கூட போதும். இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டார்!).

அடாவடி விஷ்ணுவுடன் மல்லுக்கட்டிய சரவணன்

சரவணன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட நேரம் கொழுத்த ராகு காலமாக இருந்திருக்க வேண்டும். விஜய்யின் ஒரு வார கேப்டன் காலம் ஒரு மாதிரியாக போய் விட்டது. ஆனால் சரவணனுக்கு ஆரம்பத்திலேயே நிறைய சோதனைகள். அதில் மிகப் பெரிய சோதனை விஷ்ணு செய்யும் ராவடிகளை எதிர்கொள்வது. ‘அவ்ளதான.. பார்த்துக்கலாம்’ என்று கூலாக ஹேண்டில் செய்வது போல் தோன்றினாலும் சரவணன் உள்ளுக்குள் பயங்கர எரிச்சலாகிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. பாவம். விஷ்ணு செய்யும் அட்ராசிட்டிகள் அப்படி.

“என்னை சோம்பேறின்னு முத்திரை குத்தி அனுப்பினல்ல.. நான் சும்மாவா உக்காந்து இருந்தேன்.. நீ ஆடினது செல்ஃபிஷ் கேம்.. இவனுக்கு எல்லோரும் ஓட்டு போட்டு வெளிய அனுப்புங்க.. ஏழு பேரும் இங்க வந்தாதான் வேலை செய்வேன்.. கேப்டன் நீயும் வந்து வேலை செய்யணும்.. என்ன.. ஏய்..ன்னு ஒருமைல கூப்பிடறே.. அப்படில்லாம் கூப்பிடற வேலை வெச்சுக்காத.. அவ்ளதான் சொல்லிட்டேன்..’ என்றெல்லாம் சரவணனை போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார் விஷ்ணு. இத்தனைக்கும் இவருக்கு கிடைத்த பட்டம் ‘சோர்வு’ என்பதுதான். அதை இவரே சோம்பேறி என்று ஆக்கிக் கொண்டார்.

அதுவரை ‘வாடா. மச்சான்.. போடா மச்சான்..’ என்று பேசிக் கொள்கிறவர்கள், ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் ‘மரியாதையாப் பேசு’ என்று திடீரென்று ஆவேசமாவது மோசமான விஷயம். ஆறாம் சீசனில் அசிம் அடிக்கடி செய்த விஷயம் இது. ‘பிரதீப் ஆடற கேம். நல்லா இருக்கு. அவ்ளதான் நான் சொல்லுவேன்’ என்று கமல் சூசகமாக சொன்ன டிப்ஸ், விஷ்ணுவின் மண்டையில் கன்னாபின்னாவென்று ஏறியிருக்க வேண்டும். எனவே சும்மாவே ஆடிக் கொண்டிருந்தவர், இப்போது காலில் சலங்கையையும் கட்டிக்கொண்டிருக்கிறார். “வேணும்ன்ட்டே பண்றாண்டா அந்தப் பய.. இனிமே உங்களை வாழ விட மாட்டான்’ என்கிற தேவர் மகன் சிவாஜி வசனம் மாதிரி விஷ்ணுவி்ன் ராவடியை சரியாக யூகித்துச் சொன்னார் யுகேந்திரன்.

விஷ்ணு வேலை செய்ய மறுத்ததால் கேப்டன் சரவணன் தலைமையில் வட்ட மேஜை மாநாடு கூடியது. ‘என்னை வேணா வைஸ் காப்டன் ஆக்கிடறியா?’ என்று சந்தர்ப்பம் பார்த்து டீல் பேசிக் கொண்டிருந்தார் பிரதீப். (அநியாயம் பண்றாம்ப்பா..இவன்!). ‘உனக்கு சமையல் தெரியும்ல.. அந்த டீமிற்கு போ’ என்று விஷ்ணு நாட்டாமைத்தனம் செய்ய ‘அத நீ சொல்லாத.. ஓனரைச் சொல்லச் சொல்லு’ என்று சித்தப்பூ ‘செவ்வாழ’ மாதிரி கூலாக பதில் சொன்னார் பிரதீப். ‘அப்ப டக்ளஸூ ஓனரில்லையா.. பய புள்ள பொய் சொல்ட்டான் போல’ என்பது மாதிரி சரவணன்தான் அங்கு கேப்டனா என்பதில் அவருக்கே சந்தேகம் வந்திருக்கும்.

ராவடி விஷ்ணுவை கூலாக ஹேண்டில் செய்யும் பிரதீப்

‘உன்னைப் பார்த்து ஊரே சிரிக்குது.. உனக்கு கேமே ஆடத் தெரியல’’ பிரதீப்பிடம் கன்னாபின்னாவென்று எகிறினார் விஷ்ணு. ‘வேறு யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறார்கள்’ என்பது மாதிரி பிரதீப் ஜாலியாக காலாட்டிக் கொண்டிருந்தது அநியாயமான குறும்பு. இது போதாதென்று விஷ்ணு உரித்து வைத்திருந்த மாதுளம் பழத்தை எடுத்து பிரதீப் ஊருக்கெல்லாம் தானம் செய்து விட “டேய்.. கஷ்டப்பட்டு பழத்த உரிச்ச எனக்கு தோல் மட்டும்தான் இருக்கு.. என்னடா பண்ணி வெச்சிருக்கே” என்று விஷ்ணு இன்னொரு ரவுண்டு வந்து எகிற அதையும் சிரித்துக் கொண்டே அசால்ட்டாக சமாளித்த பிரதீப்பைப் பார்த்த பிக் பாஸ் திருஷ்டி கழித்து அகம் மகிழந்திருப்பார். (நுட்பமாக வெறுப்பேற்றுவதில் நம்மையும் மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே!)

‘பாவம்ப்பா.. பிரதீப்.. அந்த ராட்சசன் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கான்.. என்ன அவஸ்தைப் படறானோ.. கொஞ்சம் ஏடாகூடமா பேசுவானே தவிர.. நல்ல பையன்..’ என்பது மாதிரி ரவீணா உள்ளிட்டவர்கள் பிரதீப்பிற்காக பெரிய வீட்டில் பாவம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அப்ப பொண்ணுங்க மனசுலயும் பிரதீப் இடம் பிடிச்சிட்டாரா? நாட்டி ஃபெல்லோ!)

‘என்ன வேணா நடக்கட்டும்.. நான் உல்லாசமா இருப்பேன்’ என்கிற மோடில் எப்போதும் இருக்கும் பிக் பாஸ், இந்த வாரத்திற்கான நாமினேஷனை ஆரம்பித்தார். முதலில் பெரிய வீடு. நாமினேட் செய்ய கிளம்பும் போது ‘சிரிச்சு பேசி பழகறது எங்க சொத்து.. சிரிச்சு முடிச்சு கன்ஃபெஷன் ரூமில் குத்து..’ என்று கானா ஸ்டைலில் பாடிக் கொண்டே வினுஷா சென்றது சுவாரசியமான காட்சி. விஷ்ணுவின் திடீர் ராவடி காரணமாக அவருக்குத்தான் நிறைய நாமினேஷன் ஓட்டுக்கள் கிடைத்தன.

அடுத்ததாக சின்ன வீட்டு நாமினேஷன். ‘மரியாதையில்லாமல் பேசுகிறார்’ என்று ஜோவிகாவைப் பற்றி புகார்கள் வந்தன. ‘பிக்னிக் வந்தவர் போல் ஜாலியாக இருக்கிறார்’ என்று அக்ஷயாவைப் பற்றியும் நிறைய புகார். அக்ஷயாவை நாமினேட் செய்யும் போது விஷ்ணு சொன்ன வார்த்தைகள் ரசிக்கும்படியாக இல்லை. சின்ன வீட்டிலிருந்து நிறைய வாக்குகளைப் பெற்றவர் அக்ஷயா. இதற்கு முந்தைய சீசன்களில் ஒருவருக்கு எத்தனை நாமினேஷன் ஓட்டுக்கள் கிடைத்தன என்கிற எண்ணிக்கையை பொதுவில் சொல்ல மாட்டார்கள். இந்த சீசனில் எண்ணிக்கையையும் சொல்லி ஆட்டத்தை மேலும் சூடாக்க முயல்கிறார் பிக் பாஸ்.

ஆக.. இந்த வார எவிக்ஷன் பிராசஸ் லிஸ்ட்டில் இருப்பவர்கள்: விஷ்ணு, மாயா, பிரதீப், அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா மற்றும் பூர்ணிமா.

இரண்டு பேருக்கு கிடைத்த அரெஸ்ட் வாரண்ட்

ஷாப்பிங் அறிவிக்கப்பட்டதும் மக்கள் வழக்கம் போல் பாய்ந்து பொருட்களை அள்ளியதில் சர்க்கரையை எடுத்து வர மறந்து விட்டார்கள். ‘சரி சுகர் உடம்புக்கு நல்லதில்ல’ என்று ஆறுதல் சொன்னார் மணி. இவர்கள் அள்ளி வந்த லிஸ்ட்டை பார்த்து மாமியார் மாதிரி தனியாக புலம்பிக் கொண்டிருந்தார் விசித்ரா. “தக்காளி.. ஏற்கெனவே நிறைய இருக்கு. இன்னமும் அள்ளிட்டு வந்திருக்குதுங்க.. அதுலயும் இந்த பாரதி கண்ணம்மா பண்ற சேட்டை இருக்கே… அப்பப்பப்பா..’ என்று அனத்திய விசித்ரா, சில நிமிடங்களிலேயே அதே கண்ணம்மாவுடன் பிறகு ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தது கண்கொள்ளா காட்சி. (இது போன்ற விஷயங்களை சில பெண்கள் சிறப்பாகச் செய்கிறார்கள்!).

கூல் சுரேஷ் செய்யும் கொனஷ்டைகள் பொதுவாக எரிச்சல் தந்தாலும், பிக் பாஸ் தந்த மளிகை லிஸ்டில் கெட்டுப் போன தேங்காய் இருந்தது தொடர்பாக அவர் வைத்த ஜாலியான புகார் ரசிக்கும்படியாக இருந்தது. “எங்க கணக்குல முப்பது ரூவா கழிச்சுக்கங்க.. பிக்பாஸ். அண்ணாச்சி கடையா இருந்தா மாத்திக் குடுப்பாரு.. பால் கெட்டுப் போயிருந்தா குக்கரோட தூக்கிட்டு கடைக்குப் போயிடுவோம்’ என்றெல்லாம் நடைமுறை விஷயங்களை வைத்து அவர் செய்த காமெடி ரகளை. ரோஷம் பொத்துக் கொண்ட பிக் பாஸ் உடனே இரண்டு புதிய தேங்காய்களை அனுப்ப ‘பிக் பாஸிற்கு வணக்கத்தைப் போடு’ என்று ஹைடெசிபலில் மறுபடியும் ஆரம்பித்தார் சுரேஷ்.

திடீரென்று வீட்டிற்குள் அலார்ம் சத்தம் அடிக்க, தூங்கிக் கொண்டிருந்த ஜோவிகா அலறியடித்து எழுந்தார். ஆனால் அது அரெஸ் வாரண்ட்டிற்கான ஒலி. “மக்களை எண்டர்டெயின் பண்றது முக்கியமான ரூல். அந்த வகையில் ‘Boring performer’-ஆக இரண்டு பேரை நான் முடிவு பண்ணியிருக்கேன். அவங்களுக்கு அரெஸ் வாரண்ட் இஷ்யூ ஆகியிருக்கு. ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். ஆனா மூணு நாள் அவங்களுக்கு வாய்தா இருக்கு. அதுக்குள்ள தங்களோட தரப்பு நியாயத்தை சரியா சொன்னா சிறைத் தண்டனையிலிருந்து அவங்க தப்பிக்க வாய்ப்பு இருக்கு’ என்று அதிரடியாக அறிவித்த பிக் பாஸ் சொன்ன அந்த இரண்டு நபர்கள்: அக்ஷயா மற்றும் வினுஷா. தங்களின் பெயர் சொல்லப்பட்டதும் இருவருமே அதிர்ச்சியடைந்தார்கள். இதில் வினுஷாவிற்கு உடனே கண்கலங்கி விட்டது.

இது போதாதென்று விஷ்ணுவின் ராவடி வேறு. அக்ஷயாவின் பெயர் சொல்லப்பட்டதுமே ‘யெஸ்’ என்று உற்சாகமான சத்தத்துடன் அவர் வெற்றிக்குறி காட்டியதால் அக்ஷயா அப்செட் ஆனார். இது பற்றி அவர் பிறகு விஷ்ணுவிடம் நேரடியாக விசாரித்த போது “எனக்கு எதிரா அந்த வீட்டில் எல்லோரும் ஓட்டு போட்டிருக்கீங்க. எல்லார் மேலயும் பழிவாங்கற உணர்ச்சில இருக்கேன்’ என்று சொல்லி சமாளித்தாலும் அக்ஷயாவின் மீது விஷ்ணு எரிச்சலில் இருக்கிறார் என்பது வெளிப்படை. ‘சும்மாவே இருந்து ஓபி அடிக்கறாங்க’ என்பது அக்ஷயாவை நாமினேட் செய்யும் போது விஷ்ணு சொன்ன காரணம். தனியாகச் சென்று கண்கலங்கிய அக்ஷயா ‘தண்டனைக்காக அழல.. ஆனா விஷ்ணு செஞ்ச காரியம்’ என்று மேலும் கலங்கிக் கொண்டிருந்தார்.

கூல் பிரதீப் மற்றும் அடாவடி விஷ்ணு என்கிற ரகளையான காம்போ காரணமாக இந்த வாரம் நிறைய களை கட்டும் என்று தெரிகிறது.

Share This Article