இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார். அந்த நேர்காணலின் விவரம் வருமாறு,
கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக் கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்னைக ளுக்கு தீர்வு கிடையாதா? இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
பதில்- நீங்கள் கூறியது போன்று இரு தரப்பிலும் தமிழ் பேசும் மீனவர்களே உள்ளனர். பிரச்னை என்னவென்றால் மீன்களுக்கு எல்லை என்று இல்லை.
மீன்கள் எல்லா பக்கங்களும் செல்லக்கூடியன. மீனவர்கள் மீன்களை பின் தொடர்ந்து சென்று பிடிக்கிறார்கள்.
பாக்குநீரிணை ஒரு சிறிய பகுதியாகும். இதுப்பற்றி விரிந்த பேச்சுகள் நடத்துகின்றோம். தற்போது உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. கைதான இந்திய மீனவர்கள் சிலர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பிடிக்கப்படும் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. வட பகுதியில் சிறந்த மீன்பிடி வளம் உள்ள பகுதியாகும்.
கேள்வி- இந்திய மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கி மீன் பிடிக்கக் கூடிய இந்தியாவின் முன்மொழிவுகள் பற்றிய உங்களது கருத்து என்ன?
பதில் – ஆமாம். அதைப்பற்றி பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு பயணம் செய்திருந்த போதும் பேசப்பட்டது.
கேள்வி- இந்த திட்டத்தை பரீசிலிக்க தயாராக இருக்கிறீர்களா?
பதில்- ஆம். பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம். இருப்பினும் இந்த இரண்டு தரப்பு மீனவர்களின் ஒத்துழைப்புகளும் அவசியமாக உள்ளது.
ஏனென்றால் இது அரசு தரப்பு சார்ந்த விடயம் மட்டுமல்ல. பிரதானமாக மீனவர்கள் சம்பந்தப்பட்டது. இந்தவிவகாரத்தில் இருதரப்பு புரிந்துணர்வு கட்டாயம் இருக்க வேண்டும்.