திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல. திறமையை பயன்படுத்தி நாடு ஒரு இடத்தில் விழுந்துள்ளது என்றால் அதனை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டில் இருக்குமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நாட்டிலிருந்து சவால்களுக்கு முகங்கொடுங்கள். சவாலுக்கு முகங்கொடுக்க முடியாது எனின் கற்ற கல்வி முறையாக கற்க வில்லை என்றே பொருள்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் அதிபர்களுக்கான பிரதிபா பிரநாம விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை கல்வியமைச்சில் நடைபெற்றது.
இதன்போது 09 மாகாணங்களை சேர்ந்த 91 அதிபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உண்மையில் நாட்டில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டது. இருப்பினும் இந்த பிரச்சினையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டு செல்கிறோம். பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிக பட்டதாரிகளை விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம் மற்றும் சர்வதேச மொழி பாடங்களுக்காக உள்ளீர்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும் திறமைசாலிகள் செய்யவேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல. திறமையை பயன்படுத்தி நாடு ஒரு இடத்தில் விழுந்துள்ளது என்றால் கட்டியெழுப்பதற்கு அதனை பயன்படுத்த வேண்டும். நாட்டில் இருக்குமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
நாட்டிலிருந்து சவால்களுக்கு முகங்கொடுங்கள்.சவாலுக்கு முகங் கொடுக்க முடியாது எனின் கற்ற கல்வி முறையாக கற்க வில்லைஎன்றே பொருள்படும். இவர்கள் அனைவரும் திறைமைசாலிகளானது நாட்டில் சாதாரண மக்கள் உழைக்கும் பணத்திலேயே ஆகும்.
கல்விக்கும், உயர்கல்விக்கும் ஒதுக்கி உள்ள பணம் யாருடையேனும் தனிப்பட்ட பணமல்ல. இவ்வாறானவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க வேண்டிய வேலையினையே திறமைசாலிகள் மேற்கொள்ள வேண்டும். இங்கு மாத்திரமல்ல உலகில் பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டன. இருப்பினும் அவர்கள் மீண்டும் மீட்சி நிலைக்கு வந்தனர். இதுவே நிலைமை என்றார்.