யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த பகுதியானது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்நிலையில் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் தமது பகுதியில் குடியேற முடியாத சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வெளி நாடுகளுக்கும் வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளனர்.
தற்பொழுது அந்த பகுதியானது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் முழுமையாகவும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. அங்கு ஒருசில வீடுகளின் சுவர்கள் நல்ல நிலையும் இருந்தாலும் கூரைகள் இல்லாமலும் ஜன்னல்கள் இல்லாமலும் காணப்படுகின்றன.
சில வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரை மட்டமாக்கப்பட்ட வீடுகள் திட்டமிட்டு இடிக்கப்பட்டதா என தெரியவில்லை.
அத்துடன் அப் பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்திற்கு முன்பாக ஒரு அரச மரம் உள்ளதுடன் அந்த அரச மரத்தின் கீழ், ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸில் வசிக்கும் குடும்பம் ஒன்று, தமது காணிகள் விடுவித்ததையடுத்து அதனை பார்வையிடுவதற்கு நேற்றையதினம் தமது சொந்த இடமான மாங்கொல்லை பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 40 ஆண்டுக்கு முன்னர் புலம்பெயர்ந்து சுவிஸிற்கு சென்றுவிட்டு, எமது காணிகளை பார்ப்பதற்காக வந்துள்ளோம்.
இந்த ஞானவைரவர் ஆலயம் எங்களது குல தெய்வம். இந்த ஆலயத்திற்கு சற்று தள்ளி முன் பக்கமாக ஒரு ஆலமரம் மாத்திரமே நின்றது. ஆனால் தற்போது ஆலயத்தின் முன் பக்கமாக தற்போது அரச மரம் உள்ளதுடன், அதன் கீழ் புத்தர் சிலையும் உள்ளது. இது நாங்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் நாட்டப்பட்ட மரமாகத்தான் இருக்க முடியும்” என தெரிவித்தனர்.
அந்த பகுதியில் இருந்த இராணுவத்தினர் தமக்கு வழிபட வேண்டிய தேவை இருந்தால் புத்தர் சிலையை வேறு ஒரு இடத்தில் வைத்து வழிபட்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் குறித்த ஆலயத்திற்கு முன்பாக அரச மரத்தினை வைத்து வளர்த்து, அதன் கீழ் புத்தர் சிலையை வைத்துள்ளமை மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.