நீதிபதி விவகாரம்; 07 புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை!

editor 2

தமிழ் நீதிபதிக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், இலங்கையின் எந்தவொரு அரசியல் கட்டமைப்பினாலும் தமிழ் மக்களை நியாயமாகவும், சமத்துவமாகவும் நடத்தமுடியாது என்பதையே காண்பிப்பதாக 7 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக விசனம் வெளியிட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும், அவர்களது தாயகத்தின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கக்கூடியவகையிலான சுதந்திர வாக்கெடுப்பை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வமைப்புக்கள் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளன.

உலகளாவிய தமிழர் அமைப்புக்களின் சம்மேளனம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை தமிழ்ச்சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள், தமிழ் அமெரிக்கர் கூட்டிணைவு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகிய 7 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

தமிழ் நீதிபதியான ரி.சரவணராஜா அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதுடன் இலங்கை அதிகாரிகள் மற்றும் சிங்கள தேசிய அரசியல்வாதிகளால் அவரது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்காக இலங்கையைவிட்டு வெளியேறி, பிறிதொரு நாட்டில் அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்ப்பகுதியான முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கள், தமிழர்களின் பாரிய மனிதப்புதைகுழிகள், தமிழ் மக்களுக்கான உரிமைகளைக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமை போன்றவற்றுடன் தொடர்புடைய வழக்குகளைக் கையாண்டுவந்தார்.

இலங்கை அரசாங்கம் அவருக்கான பாதுகாப்பைக் குறைத்ததாகவும், குற்றவியல் விசாரணைப்பிரிவின் உறுப்பினர்கள் சிலர் அவரைப் பின்தொடர்ந்ததாகவும் கூறப்படுகின்றது. அதுமாத்திரமன்றி சிங்கள தேசியவாதத் தலைவர்கள் நீதிபதியைப் பகிரங்கமாகவே அச்சுறுத்தியுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ் நீதிபதிகள் சிங்கள அதிகாரிகள், பௌத்த தேரர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிக்கடி முகங்கொடுத்துவந்துள்ளனர். அந்தவகையில் குறிப்பாக முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் மற்றும் திலீபன் நினைவேந்தல் விவகாரம் ஆகியவற்றில் நீதிபதி சரவணராஜாவினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை அடுத்து அவர் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் நிலையிலேயே இருந்திருக்கின்றார்.

எனவே, இலங்கைவாழ் தமிழ்மக்கள் உள்நாட்டுக்கட்டமைப்பின் மீதான நம்பிக்கையோ அல்லது அதனூடாக நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போ அற்றவர்களாக இருக்கின்றார்கள். ஆகையினால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் அவர்கள் ‘நியூரம்பேர்க் விசாரணை’ போன்ற சர்வதேச தீர்ப்பாயத்தையோ அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என்றோ கோருகின்றார்கள். அதன்படி தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

தமிழ் நீதிபதிக்கு எதிராக அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட இச்சம்பவமானது, இலங்கையின் எந்தவொரு அரசியல் கட்டமைப்பினாலும் தமிழ்மக்களை நியாயமாகவும், சமத்துவமாகவும் நடத்தமுடியாது என்பதைக் காண்பிக்கின்றது.

அத்தோடு, இலங்கையின் கட்டமைப்பு நிலையானதும் செயற்திறனானதும் அல்ல என்பதையும் அது வெளிப்படுத்தியுள்ளது. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை இலங்கை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது. சர்வதேச நியமங்களுக்கு முரணாகச் செயற்படும் இலங்கை, அதன் உள்நாட்டுச்சட்டங்களை தமிழர்களை ஒடுக்குவதற்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றது.

தமிழ்மக்கள் அவர்களது தாயகத்தில் பெருமளவான பகுதிகளை இழந்துவரும் தற்போதைய சூழ்நிலையில், தமது நிலைத்திருப்பை உறுதிசெய்வதற்கான தலையீட்டை மேற்கொள்ளுமாறு அவர்கள் சர்வதேச சமூகத்திடம் கோருகின்றனர். தமிழர்களை ஆட்சிசெய்வதற்கான ஆணையோ அல்லது தார்மீக ரீதியான அதிகாரமோ இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

எனவே, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுமாறும், அவர்களது தாயகத்தின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கக்கூடியவகையிலான சுதந்திர வாக்கெடுப்பை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகின்றோம். சர்வதேச சமூகத்தின் முழுமையான தலைமைத்துவத்தின் மூலமே இப்பிராந்தியத்தில் நிலையான அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டமுடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article