“தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…” என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, “எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க” என்று பிரதீப் குறுக்கிட்டு ஒரு கவுன்ட்டரைப் போட சபை கலகலகத்தது.
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே கேப்டனுக்கான டாஸ்க், ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சின்ன வீட்டில், அதாவது சின்ன பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத் தண்டனைக் காலத்திற்குச் செல்ல ஆறு பேர் தேர்வானார்கள். அங்கு வசதிகள் குறைவு. ஆறுதலாகச் சின்ன வீட்டில் ஒரு ஜாலியான தம்பி பிக் பாஸ் உண்டு.
சின்ன வீட்டில் இருப்பவர்கள், பெரிய வீட்டில் இருப்பவர்களுக்குப் பல பணிகளைச் செய்து தர வேண்டும் என்பது தொடங்கிப் பல விதிமுறைகள் வெளியாகின. மேலும் இந்த சீசனில் புதிய மாற்றங்களும் இருந்தன.
பவா செல்லத்துரை (பாவா அல்ல), ஏன் பிக் பாஸிற்குள் வந்தார்? அவருக்கு ஏன் இந்த வேலை? செல்லத்துரையை
பழைய ஜோக்’ தங்கதுரை மாதிரி ஆக்கி விடுவார்களோ?’ என்கிற அங்கலாய்ப்பும் வருத்தமும் பலருக்கு இருந்தது. ஆனால் அவர் உள்ளே வந்ததற்கான நியாயமான விடை இன்று கிடைத்தது. என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 1 EP 2)
போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்பறையில் அமர வைத்த பிக் பாஸ், “இந்த நிகழ்ச்சியின் மூலம் இனி உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழலாம். ஆனால் இந்த வீட்டில் மாறாத ஒன்று உண்டு. அது நான்தான். ‘எதை வேணும்னாலும் செய்ங்கன்னு சொல்லல. ஆனா. ஏதாச்சும் செய்யுங்க…’, ‘நான் நானா இருப்பேன்’ன்னு சொல்றதெல்லாம் இந்த வீட்டைப் பொறுத்தவரைக்கும் உட்டாலக்கடி. மக்களைக் கவர்ந்து ஜெயிக்கற வழியைப் பாருங்க” என்பது போல் பிக் பாஸ் ஆற்றிய வீரவுரையின் சுருக்கம் என்னவென்றால் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’.
வாக்குமூல அறைக்கு வீட்டின் கேப்டனான விஜய்யை அழைத்த பிக் பாஸ் முதல் ரகசிய டாஸ்க்கைத் தந்தார். அதன் படி விஜய் சக போட்டியாளர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதில் அவரைக் குறைவாகக் கவர்ந்த ஆறு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து காலையில் பிக் பாஸிடம் சொல்ல வேண்டும். ‘இது நமக்குள்ள. வெளில சொல்ல வேணாம்’ என்று சதி ஆலோசனையைச் சொல்லி விஜய்யை வெளியே அனுப்பினார், பிக் பாஸ்.
ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கைச் சுருக்கத்தைப் பரஸ்பரம் பகிர்ந்து பொழுதைப் போக்கினார்கள். “எப்படியாவது கிராஜூவேஷன் முடிச்சுடும்மா” என்று ஓர் அங்கிளுக்கான பொறுப்புடன் யுகேந்திரன் ஆலோசனை சொல்ல, “அடுத்து அதைத்தான் பண்ணப் போறேன்” என்று சொல்லி அவரின் வாயை அடைத்தார் ஜோவிகா. (வனிதாவோட பொண்ணாச்சே… பேச சொல்லியா தரணும்?!).
ஆறு நபர்களை வெளியேற்றிய கேப்டன் விஜய்
நாள் 1 விடிந்தது. ‘நான் ரெடிதான் வரவா’ என்று ‘லியோ’ படத்திலிருந்து பாடல் ஒலிக்கப் பெரும்பாலோனோர் இறங்கிக் குத்தி ஆடி கார்டன் ஏரியாவை ரகளையாக்கினார்கள். பிக் பாஸ் தந்த ரகசிய டாஸ்க்கைச் செயல்படுத்த ஆரம்பித்தார் கேப்டன் விஜய். அதன் படி தன்னை மிகவும் குறைவாக இம்ப்ரஸ் செய்த ஆறு நபர்களைக் காரணங்களோடு பட்டியலிட்டார். ஐஷூ, நிக்சன், பவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா மற்றும் ரவீணா என்பதே அந்த ஆறு நபர்கள்.
இதில் பவாவிற்காக விஜய் சொன்ன காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. ‘ஐயா…’ என்று பவாவை விஜய் கூப்பிட ஆரம்பித்த போது, “ஐயா என்பதெல்லாம் வேண்டாம். பவா என்றே என்னைக் கூப்பிடலாம்” என்று அவர் சொல்லியிருக்கிறார். “ஆரம்பத்திலேயே அவர் இப்படிச் சொன்னது எனக்குச் சரியாகப்படவில்லை” என்று விஜய் சொல்கிற காரணம் பொருத்தமற்றது. “நான் உங்களோடு ஒன்றாக இணைய விரும்புகிறேன். ‘ஐயா’ என்கிற விளிப்பு என்னை உயரத்தில் அமர வைப்பது போல் தெரிகிறது. எனவேதான் ‘பவா’ என்று அழைக்கச் சொன்னேன்” என்று தனது தரப்பு விளக்கத்தை மிகச் சரியாகவே முன்வைத்தார் பவா.
“தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…” என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, “எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க” என்று பிரதீப் குறுக்கிட்டு ஒரு கவுன்ட்டரைப் போட சபை கலகலகத்தது. “தமிழ் கல்ச்சர்லதான் பெரியவங்களைப் பெயர் சொல்லி அழைக்கக்கூடாதுன்றதும் இருக்கு” என்கிற நடைமுறைக் காரணத்தை விஜய் அப்போது சொன்னது ஓகேதான். ஆனால் ஒரு பெரியவர், “என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடலாம்” என்று சொன்னது எப்படித் தவறானதாகும்? “உரிமைக் குரல் எழுப்புவதற்காகத் தந்த அடையாளத் துணியை அலட்சியமாகப் போட்டு வைத்திருந்தார்” என்பது ரவீணாவிற்கு சொல்லப்பட்ட காரணம். மற்ற நால்வருக்கான காரணம் என்னவென்றால், அவர்கள் கூட்டத்துடன் இணையாமல் விலகியிருக்கியிருக்கிறார்களாம்.
“கேப்டன் விஜய்யால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களும் ஒரு வாரத்திற்கான உடையைப் பெட்டியில் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள். நீங்கள் சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு மாற்றப்படுவீர்கள்” என்று அறிவித்தார் பிக் பாஸ். “அது எப்படிங்க… இப்பத்தான் நாங்க பழக ஆரம்பிச்சிருக்கோம். அதுக்குள்ள எங்களை பிரிச்சா எப்படி?” என்று ஏதோ இந்தியப் பிரிவினைக்கான போராட்டம் போல கூல் சுரேஷ் ஆட்சேபித்துக் கொண்டிருக்க, தனது இரும்புக்குரலில் அறிவிப்பை மீண்டும் வெளியிட்டு கூல் சுரேஷை அசால்ட்டாக ஆஃப் செய்தார் பிக் பாஸ். “எனக்கு பல்லு வலி… அதனாலதான் பேசலை” என்று ஐஷூ காரணம் சொல்லிக் கொண்டிருக்க, “இல்லாட்டி மட்டும் பட்டிமன்றத்துல பேசற மாதிரி பேசிடுவியா?” என்று கலாய்த்துக் கொண்டிருந்தார் மணி சந்திரா.
‘சின்ன பிக் பாஸ்’ வீட்டுக்குத் தரப்பட்ட கடுமையான ரூல்ஸ்
ஆறு பேரும் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு கார்டன் ஏரியாவில் பரிதாபமாக நிற்க, தீவிரவாதிகள் போல் முகமூடி அணிந்த சில நபர்கள் உள்ளே வந்து, பக்கத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சின்ன பிக் பாஸ் வீட்டைத் திறந்து விட்டார்கள். சின்ன வீடு குறுகலாக இருந்தாலும் வசதியாகவே இருந்தது. அனன்யாவும் ரவீணாவும் மேல் படுக்கையில் கர்ச்சீப் போட்டு இடம் பிடித்தார்கள்.
சின்ன வீட்டில் பிக் பாஸிற்கு ஒரு தம்பி இருக்கிறார். ஆனால் அண்ணன் மாதிரி கடுகடுக்காமல், அங்கிருக்கும் மைக் வழியாக இளம் பெண்களை கூலாக்குவது போல் ஜாலியாகப் பேசுகிறார். “லெஃப்ட் பக்கம் பாருங்க… ரைட்ல பாருங்க… கம்மியா இம்ப்ரஸ் பண்ண அந்த மூஞ்சிகளை நான் பார்க்கணும்… முதல் நாளே லாஸ்ட் பென்ச்ல உக்காந்தவங்களா நீங்க?” என்றெல்லாம் பங்கமாகக் கலாய்த்துக் கொண்டிருந்தார் தம்பி பிக் பாஸ்.
சின்ன வீட்டில் இருக்கும் ஆறு நபர்களும் கடைப்பிடிக்க வேண்டிய அநியாயமான விதிமுறைகளை பிக் பாஸ் வெளியிட்டார். அதன்படி சின்ன வீட்டில் உள்ளவர்கள் பெரிய வீட்டிற்குள் செல்லக்கூடாது. ஷாப்பிங் செய்ய முடியாது. டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது. பிக் பாஸ் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்வதற்கு மட்டும் இரு வீட்டாருக்கும் இடையே இரண்டு டாஸ்க் தரப்படும். இதில் சின்ன வீடு தோற்றால் பெரிய வீட்டின் வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும். பெரிய வீட்டின் பாத்திரங்களைச் சின்ன வீட்டார்தான் சுத்தம் செய்ய வேண்டும். பெரிய வீட்டார் சொல்லும் சமையல் மெனுவை சின்ன வீட்டார் சமைத்துத் தர வேண்டும். எப்போது கேட்டாலும் டீ, காஃபி போட்டுத் தர வேண்டும். சின்ன வீட்டுக்குள் செல்ல கேப்டனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு… என்று அந்தப் பட்டியல் நீண்டது.
இதைச் சுருக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பெரிய பங்களாவிற்கு பக்கத்தில் ‘சர்வண்ட் க்வார்ட்டர்ஸ்’ என்று சிறிய வீடுகள் இருக்கும். பங்களாவில் பணிபுரியும் வேலைக்காரர்கள் தங்குமிடம் அது. ஏறத்தாழ இதே ஃபார்மேட்டைத்தான் பிக் பாஸ் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய வீட்டாருக்குச் சேவகம் செய்ய வேண்டிய நிலைமையில் சின்ன வீட்டார் இருக்கின்றனர். ஒரு வாரக் காலத்திற்கு இவர்கள் அனுபவிக்கப் போகும் தண்டனை காரணமாக அடுத்தடுத்த வாரங்களில் போட்டிகளில் இன்னமும் சூடு கிளம்பும் என்பது பிக் பாஸ் டீமின் டெரரான ஐடியா.
பெரிய வீட்டில் ஜோவிகாவும் சின்ன வீட்டில் பவாவும் உறங்கி வழிந்து இந்த சீசனின் முதல் நாய் குரைப்பு சத்தத்தை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார்கள்.
முதல் வார நாமினேஷன் – இடம் பெற்ற ஏழு நபர்கள்
போட்டியாளர்களுக்கு ஆசுவாசப்படுத்தக் கூட நேரம் தராமல் அடுத்த ஆயுதத்தை உடனே எடுத்தார் பிக் பாஸ். இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ். சின்ன வீட்டில் இருப்பவர்களைப் பெரிய வீட்டு நபர்கள் நாமினேட் செய்யலாம். அதே போல் பெரிய வீட்டில் இருப்பவர்களையும் சின்ன வீட்டார் நாமினேட் செய்யலாம். முதலில் பெரிய வீட்டார் ஆரம்பித்தார்கள். இதில் அதிக முறையாக அனன்யாவின் பெயர் அடிபட்டது. அடுத்ததாக ஐஷூவின் பெயர். பவா மற்றும் ரவீணாவின் பெயர்களும் வந்தன. எனவே இந்த நால்வரும் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தார்கள். நிக்சனும் வினுஷாவும் எப்படியோ தப்பித்து விட்டார்கள்.
பெரிய வீட்டார் நாமினேஷன் செய்யும் போது பவா செல்லத்துரையின் பெயரை விஷ்ணுவால் சரியாகச் சொல்ல முடியாமல் தவித்தார். ‘புவன் சந்திரன்’ என்று எதையோ அவர் சொல்ல ‘அப்படி யாரும் இல்லையே?’ என்று கலாய்த்தார் பிக் பாஸ். ‘ஐஷூ அணியும் உடை, அவர் அமரும் விதம் போன்ற விஷயங்கள் ரசிக்கத்தக்கதாக இல்லை’ என்கிற காரணத்தைச் சொன்னார் விசித்ரா. “சின்னப்பசங்கள்லாம் இருக்கற வீடு… பெரியவங்களும் இருக்கோம்” என்று அலுத்துக் கொண்டார்.
அடுத்ததாக சின்ன பிக் பாஸ் வீட்டின் நாமினேஷன். இதில் யுகேந்திரன் டாப் லிஸ்டில் வந்தார். ஜோவிகா அடுத்தது. பிரதீப் மூன்றாவது. “அவருடைய உடல் மொழியும் சரி, பேசுகின்ற மலினமான மொழியும் சரி. ரசிக்கத்தக்கதாக இல்லை” என்பது போல் கூல் சுரேஷ் பற்றிய புகாரை பவா செல்லத்துரை முன்வைத்தது சரியான காரணம். ‘‘கூல் சுரேஷ்’ என்கிற தனது பெயரை ஹேட்டர்ஸ் வீடியோ கமெண்ட்டுகளில் எப்படி அழைப்பார்கள்?’ என்று கொச்சையான மொழியில் சுரேஷ் சபையிலேயே அதிரடியாகச் சொன்னது முகம் சுளிக்க வைத்தது. (இந்தக் காட்சி மெயின் எபிசோடில் வரவில்லை).
‘பெண்களின் டிரெஸ்ஸிங் சென்ஸ்’ பற்றி விசித்ரா சொன்ன காரணத்தைப் பெயர் குறிப்பிடாமல் பொதுவில் போட்டு உடைத்தார் பிக் பாஸ். இது பற்றி பிறகு இளம் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட போது “யாரு அப்படில்லாம் சொன்னது… உன் உடை… உன் உரிமை” என்று மாயா சொல்லச் சிரிப்பொலிகள் பரவின.
ஆக… இந்த வார எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பெற்றவர்கள் – பவா செல்லத்துரை, ஐஷூ, அனன்யா, ரவீணா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் ஜோவிகா.
‘இஷ்டம் போல ஷாப்பிங் செய்ங்க… ஆனா பில்லு கட்டிடணும்!’
அடுத்ததாக ஷாப்பிங் விஷயத்தைக் கையில் எடுத்தார் பிக் பாஸ். வழக்கமாகச் சமையலுக்குத் தேவையான அடிப்படையான பொருள்கள் வழங்கப்பட்டு விடும். லக்ஸரியான பொருள்களை மட்டும் டாஸ்க்கில் ஜெயித்து வாங்கிக் கொள்ளலாம். இதுதான் இதுவரையான சீசன்களில் பின்பற்றப்பட்ட நடைமுறை. ஆனால் இந்த முறை அதில் மாற்றம். அடிப்படையான பொருள்கள் கூட வழங்கப்பட மாட்டாது.
அதற்குப் பதிலாக சூப்பர் மார்க்கெட்டை ‘பப்பரப்பே’ என்று திறந்து விட்டுவிடுவார் பிக் பாஸ். ஒவ்வொருவரும் தங்களின் கணக்கில் பொருள்களை அள்ளிக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பில் தொகை அவர்களுக்கு அனுப்பப்படும். டாஸ்க்குகளில் ஜெயிப்பதன் மூலம் இந்தத் தொகையை அவர்கள் கழிக்கலாம். ஒருவேளை கணக்கில் பாக்கியிருந்தால்? அதற்குத்தான் வில்லங்கமான பின்குறிப்பை எழுதியிருந்தார் பிக் பாஸ். ‘கடன் அன்பை முறிக்குமாம்’. சுருங்கச் சொன்னால் கிரெடிட் கார்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிக் பாஸ். ஒழுங்காகப் பணத்தைக் கட்டிவிட்டால் சரி. இல்லையென்றால் வீடு தேடி ஆட்கள் வருவார்கள். சின்ன வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. மார்க்கெட் திறந்ததும் மக்கள் கூடி கும்மியடித்து ரூ.54,963/- மதிப்பிற்கான பொருள்களை எடுத்துக் குவித்தார்கள். (எப்படிக் கட்டப் போறாங்களோ?!).
‘பவா செல்லத்துரைக்கு பிக் பாஸில் என்ன வேலை?’
‘பவா செல்லத்துரை ஏன் பிக் பாஸிற்குள் வந்தார், இவருக்கு ஏன் இந்த வேலை, இதெல்லாம் தேவையா?’ என்பது போல் பல கேள்விகள் இணையத்தில் கிளம்பிக் கொண்டேயிருந்தன. அதற்கான தகுந்த விடை முதல் நாளிலேயே கிடைத்தது. கமலின் மூலம் தான் உள்ளே வந்ததற்கான நியாயத்தை ஆரம்பத்திலேயே செய்துவிட்டார் பவா.
இவர் செய்த சமையலை சில பெண்கள் புகழ்ந்த போது, “அது ஓகே… ஆனா பெண்களின் சமையலைப் புகழாதீங்க. அது அவர்களைச் சமையல் அறையிலேயே முடக்கிப் போடுவதற்கான ஒரு தந்திரம்” என்று பவா சொன்னது சரியான பாயிண்ட்.
இரவு நேர அமைதியில், “’தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி, எழுத்தாளரைப் பற்றிச் சொல்லுங்க.’ என்று கமல் என்னிடம் சொன்னார். அதன்படி இன்னிக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்” என்று ஆரம்பித்த பவா, எழுத்தாளர் ஆதவனின் ‘ஓட்டம்’ என்கிற கதையை உணர்ச்சிகரமாக விவரித்தார்.
ஒரு காலத்தில் ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்த ஒரு பெண், பிறகு குடும்பம் என்கிற அமைப்பிற்குள் சிக்கி, அவளிடம் இருக்கும் திறமைகளை மறந்து எப்படிச் சமையல் அறைக்குள் முடங்கி விடுகிறாள் என்பதை விவரிக்கும் கதை அது. வசந்த் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. (‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்கிற தொகுப்பில் இருக்கிறது).
அந்தக் கதையை நிதானமான குரலில் பவா உணர்ச்சிகரமாக விவரித்த போது சபையே கனத்த மௌனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது. இறுதியில் பிரதீப்பும் கூல் சுரேஷூம் கண்கலங்கி விட்டார்கள். இப்படியாக நவீன இலக்கியத்தின் ஒரு துளியாவது பிக் பாஸ் போன்ற பிரபல மேடையின் வழியாக மக்களுக்குச் சென்று சேர்ந்தால் அது நல்ல விஷயம்தானே?!
ஆரம்பத்திலேயே பல விதிமுறைகளை அதிரடியாக பிக் பாஸ் மாற்றியிருக்கிறார். போகப் போக இன்னமும் பல வெடிகுண்டுகள் இருக்கும் போலிருக்கிறது. அவற்றில் என்னவெல்லாம் வெடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
- சுரேஷ் கண்ணன்
- நன்றி – விகடன்
- விகடன் இணைப்பு