பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்!

editor 2

ஏழு ஆண்டுகளாக உலக மக்களைக் கவர்ந்துவரும் தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 100 நாள் நிகழ்ச்சி நேற்று வழமைபோன்று பிரமாண்டமாகத் தொடங்கியது.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறியவர்களுக்காகவும் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட பிக்பாஸ் ரசிகர்களுக்காகவும் விகடன் இணையத்தளத்தில் நாளாந்த நிகழ்ச்சிகளை விமர்சனப் பார்வையுடன் வெளியிட்டுவருகிறது. பிரபல எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் குறித்த தொடரினை எழுதி வருகின்றார்.

நேற்றைய நாள் நிகழ்வு தொடர்பில் விகடன் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையை வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்கிறோம்..

‘என் பிரெண்டுக்குத் தெரிஞ்சவனுக்குத் தெரிஞ்சவன்’ என்பது மாதிரி, முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து எட்டிப் பார்த்தவர்கள் என்கிற கலவையான பட்டியல் சுவாரஸ்யத்தை அளிக்கிறது.

ஓர் ஆடம்பரமான விடுதியின் படுக்கையறையில் கமல் உறங்கிக் கொண்டிருக்க ‘நெஞ்சம் உண்டு… நேர்மை உண்டு… ஓடு ராஜா…’ என்கிற எம்.ஜி.ஆர் பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் பல கேமராக்கள் அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தன.

அத்தனை ஆடம்பரமான வீட்டில் கமலுக்கு காபி போட்டுத்தர ஆளில்லை. எனவே தனக்குத் தானே காபி தயாரித்துக் கொண்ட கமல் “புதுசா ஏதாவது செய்யணும்னா… அதுக்கு முதல்ல ஆரம்பிக்கணும்… புது ரிசல்ட் வரணும்னா புதுசா ஏதாவது செய்யணும்… அதுல ரிவார்ட் கிடைக்காம போகலாம். ஆனா அந்த அனுபவம்தான் ரிவார்ட்…” என்று சுயமுன்னேற்ற வாசகங்களையெல்லாம் தனக்கேயுரிய திறமையுடன் சொல்லிவிட்டு “கேமரா இல்லையே?!” என்று ஜாக்கிரதையாக விசாரித்து விட்டு குளியல் அறைக்குள் சென்றார்.

பிறகு அட்டகாசமானதொரு சிவப்பு கோட்டைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு கிளம்பினார். சம்பந்தமே இல்லாமல் ஒரு மைதானத்தில் நாலைந்து பணக்கார கார்கள் நின்றிருக்க, அநாவசியமாக ஸ்லோமோஷனில் நடந்து பிறகு அதில் ஏறி வில்லனைப் பழிவாங்கச் செல்லும் சினிமா காட்சி போலக் கிளம்பினார். கல்யாண ஊர்வலம் மாதிரி பின்னால் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

இரண்டு வீடு, இரண்டு கமல், ஒரே கிச்சன்!

மேடைக்கு வந்த கமல், “வீடு புதுசு… விதிகளும் புதுசு… விளையாட்டும் மாறப் போகுது…” என்று ஆரம்பிப்பதற்குள் வீட்டிற்குள் இருந்து ‘அலார்ம்’ சத்தம் கேட்டது. ‘ஷோ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எவனோ உள்ளே பூந்துட்டாம்பா’ என்று பார்த்தால் வீட்டிற்குள் இன்னொரு கமல். ‘பம்மல் கே சம்பந்தம்’ மாதிரி மெட்ராஸ் பாஷையில் பேசிக் கொண்டிருந்தார். (அடுத்த தபா இவ்ள டைட்டா டீஷர்ட் போடாதீங்க வாத்யாரே…).

“யோவ் அகம் டிவி…” என்று டீஷர்ட் கமல், தொலைக்காட்சி பெட்டியைப் பார்த்து அழைக்க, ‘யாருய்யா நீ… எப்படி உள்ளே வந்தே?’ என்று கோட்டு கமல் மேடையிலிருந்தே விசாரிக்க… அய்… டபுள் ஆக்டிங்ப்பா! ‘எனக்கு ஆர்டி பர்மனைத் தெரியும்’ என்று உள்ளே புகுந்த கமல் சொல்ல, ‘அவருக்கு உன்னைத் தெரியுமா?” என்கிற மாதிரி மேடை கமல் கேட்க, பிறகுதான் தெரிந்தது, அது ‘ஆர்ட் டிபார்ட்மெண்ட்டாம்’. (ஜோக்கு… ஜோக்கு)

‘மெட்ராஸ் பாஷை’ கமல் மூலமாகவே நமக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தது சுவாரஸ்யமான உத்தி! “சோத்தாங்கை பக்கம் போ… அதாவது ரைட்டு பக்கம்” என்றதும் “அப்படிப் புரியறாப்பல சொல்லு. தமிழ் வாழ்க” என்று மொழி அரசியல் தொடர்பான கிண்டலைச் செய்தார் சம்பந்தம். ஷங்கர் படத்தின் செட் மாதிரி வீடு அத்தனை அட்டகாசமாக இருந்தது. (ஆர்ட் டிபார்ட்மெண்ட்டிற்குப் பாராட்டு). பெரிய வீட்டின் அருகில் ஒரு சின்ன வீடு. அங்கு மட்டுமே கிச்சன் உண்டு. பெரிய வீட்டில் சமையல் அறை கிடையாது என்பது ஒரு சுவாரஸ்யம். சின்ன வீட்டிற்கும் ஒரு ‘சின்ன பாஸ்’ இருப்பாராம். இரண்டு கமல்களும் கிரேஸி மோகன் நாடகம் மாதிரி பேசிக் கொண்டது சுவாரஸ்யம்.

ஒருவழியாக உள்ளே புகுந்த கமல், பீச்சாங்கைப் பக்கம் சென்று மெயின் டோரைத் திறந்து ஷேர் ஆட்டோ பிடித்துக் கிளம்பியதும் மேடையிலிருந்த கமல் ‘ஹப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டு போட்டியாளர்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தார்.

‘கூல் சுரேஷ்’ முதல் ‘ஐஸ்’ அனன்யா ராவ் வரை

இந்த சீசனில் மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள். ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள். ஆக இரண்டு செட் நவகிரகங்கள் எனலாம். அதிகம் பிரபலம் ஆகாத முகங்கள் இருப்பது, பார்வையாளர்களின் ஒரு பகுதியை சுவாரஸ்யம் இழக்கச் செய்யலாம். ‘யாருப்பா இவிய்ங்க… எங்க இருந்து கூட்டுன்னு வந்தாங்க’ என்று தோன்றலாம். ஆனால் அறிமுகம் இல்லாத நபர்கள் என்பதில் சில அனுகூலங்கள் இருக்கின்றன. பிரபலமான நபர் என்றால் சில முன் தீர்மானங்களுடனும் அவரை அணுகுவோம். பிரபலமற்ற நபர் என்றால் க்ளீன் ஸ்லேட் மாதிரி அவர்களுடன் நாம் புதிதாகப் பழகத் துவங்கலாம்.

அறிமுகமான முகங்களைத் தாண்டி இந்த முறை போட்டியாளர்களின் பட்டியல் சற்று விநோதமாக இருந்தது. ‘என் பிரெண்டுக்குத் தெரிஞ்சவனுக்குத் தெரிஞ்சவன்’ என்பது மாதிரி, முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், விஜய் டிவியுடன் ஏதோவொரு வகையில் கனெக்ட் ஆனவர்கள், பிரபலங்களின் சிபாரிசுகள், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து எட்டிப் பார்த்தவர்கள், அந்த ரோட்டைத் தற்செயலாக கிராஸ் செய்தவர்கள் என்கிற கலவையான பட்டியல் சுவாரஸ்யத்தை அளிக்கிறது. (அடுத்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை டிவியில் பார்த்த உங்களுக்குக் கூட அழைப்பு வரலாம். ஜாக்கிரதை!).

மேடைக்கு வந்த ஆண் போட்டியாளர்கள் சேட்டு வீட்டுக் கல்யாணம் போலப் பளபளப்பான உடைகளை அணிந்து வர, பெண்கள் அணியும் ஆடைகளின் பின்பக்கத்தில் அநாவசிய நீளத்திற்குத் துணி விடப்படுவது கட்டாயமான விதி போலிருக்கிறது. அசௌகரியமான நடையுடன் தரையைச் சுத்தம் செய்து தன்னிச்சையான சேவையைச் செய்த பெண் போட்டியாளர்கள் “பிக் பாஸ் வீட்டில் உங்களின் வாய்ப்பு” என்று கேட்கப்பட்டதும் உலக அழகிப் போட்டியில் வென்றவர்கள் போல “ஆக்சுவலி… நான் ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு…” என்று சம்பிரதாயமாகச் சொல்லி விட்டு உள்ளே சென்றதும் தேமே என்று விழித்தார்கள். ஆனால் சில பெண்கள் சூழலைத் துணிச்சலாக ஹாண்டில் செய்தார்கள். ‘அண்ணா’ என்கிற ஒட்ட வைத்த முன்குறிப்புடன் ஆண்களை அழைத்து உடனடி பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கி விடுகிறார்கள். (பையன் ஸ்மார்ட்டாக இருந்தால் இந்த முன்குறிப்பு தானாகக் கழன்றுவிடும் போல!).

(கூல் சுரேஷ்)

கூல் சுரேஷ் எண்ட்ரி – வெந்து தணிந்தது வீடு

கமலால் அறிமுகம் செய்யப்பட்ட போட்டியாளர்களைப் பற்றி வரிசையாகப் பார்ப்போம். ஆரம்பமே அதிரடிதான். ‘கூல் சுரேஷ்’. எல்கேஜி கிளாஸிற்கு முதல் நாள் வந்த பையன் மாதிரி கலங்கலான முகத்துடன் திருதிருவென்று விழித்த சுரேஷ், சற்று நேரத்தில் வார்ம்-அப் ஆகி ஹைடெசிபலில் கத்திய போது ‘ஓவ்… இவன் நமக்கு மேல நடிகனா இருப்பான்டோவ்’ என்று கமலின் மைண்ட் வாய்ஸ் ஒலித்திருக்கலாம். “கோச்சுக்காதீங்க சார்… சிம்பு, என் நண்பன் சந்தானம் மற்றும் ரசிகர்கள் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு திடீர்னு கெடைச்சது” என்று கலங்கினார் சுரேஷ். ‘ஜோக்கர்’, ‘ஏழாம் சீசனில் வந்த ஏழரை’ என்றெல்லாம் தன்னைப் பற்றி சுயபகடிகளைச் சொல்லியபடியே உள்ளே சென்றார். (வெந்து தணிந்தது வீடு).

வீட்டிற்குள் செல்லும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஓர் அடையாளப் பொருளைத் தந்து அனுப்பினார் கமல். அந்தப் பொருள் ஏதோவொரு வகையில் அவர்களின் ஆளுமையுடன் தொடர்புள்ளதாக இருந்தது. ஆனால் இதை எதற்குத் தருகிறார்கள் என்று ஒவ்வொரு சீசனிலும் தெரியாது. கடந்த சீசன்களிலும் செடி, கடுகு டப்பா என்று என்னென்னமோ தந்தார்கள். அவற்றின் பயன் என்ன என்பது பிறகு தெரியவே இல்லை.

முதல் போட்டியாளரான சுரேஷ், வீட்டிற்குள் நுழைந்ததும் தன் திருவிளையாடலை உடனே ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ். சுரேஷை உடனடி கேப்டன் ஆக்கி ஆட்டத்தை ஆரம்பித்தார். அடுத்து வரும் போட்டியாளரிடம் விவாதித்து வெற்றி பெறுவதன் மூலம் அந்தப் பதவியை அவர் தக்க வைத்துக் கொள்ளலாம். விவாதத்தில் தோற்றுவிட்டால் பதவியைத் தந்து விட வேண்டும். முடிவு தெரியவில்லையென்றால் இருவருக்கும் வாய்ப்பு போய், புதிதாக நுழைபவரிடம் பதவி அளிக்கப்படும் என்பதுதான் ஆரம்ப விளையாட்டு. இதில் சிலர் எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டார்கள். சிலர் சற்று நேரம் போராடிப் பார்த்து பிறகு கழன்று கொண்டார்கள். சிலர் விடாக்கண்டன்களாக இறுதி வரை முட்டி மோதினார்கள்.

ஆரம்பத்திலேயே விட்டுத் தரும் போட்டியாளர்கள் ‘நல்லவர்களாக’ பார்வையாளர்களின் மனதில் பதிவார்கள். இதை உத்தியாகவும் சிலர் பயன்படுத்தலாம். ஆனால் ‘நல்லவர்கள், பெருந்தன்மை உடையவர்கள்’ என்றால் பிக் பாஸிற்கு ஆகாது. முட்டி மோதி மண்டையை உடைக்கும் சண்டைக்கோழிகளைத்தான் அவருக்குப் பிடிக்கும். எனவே பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை ‘விட்டுத் தருபவர்கள், கெட்டுப் போவார்கள்’ என்பதுதான் நடைமுறை.

பூர்ணிமா ரவி

இரண்டாவதாக வந்த போட்டியாளர் பூர்ணிமா ரவி. யூடியூப் பிரபலம். நடிப்பில் நிறைய ஆர்வம். வேலூர் பொண்ணு. ‘எமோஷனல், அட்வெஞ்சரஸ்’ என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார். பேச்சுதான் ஆயுதம் என்ற பூர்ணிமா ‘நேர்ல அழகா இருக்கீங்க சார்’ என்று கமலைப் பார்த்த சந்தோஷத்தில் எதையோ சொல்லித் தடுமாறினார். இவருக்கு விசிலை அளித்த கமல் வாழ்த்தி உள்ளே அனுப்பினார்.

உள்ளே சென்ற பூர்ணிமாவிற்கும் சுரேஷிற்கும் ‘யார் கேப்டன்’ என்கிற விளையாட்டு ஆரம்பித்தது. சுரேஷ் வெளியே கத்துவதுதான் டெரராக இருக்கிறதே தவிர, வீட்டிற்குள் கட்டிய பசு மாதிரி இருக்கிறார். சற்று நேரம் வாக்குவாதம் செய்து விட்டு பிறகு விட்டுக் கொடுத்துவிட்டார். “கேப்டன் பாண்டை நீங்களே கட்டி விடுங்கண்ணா…” என்று பூர்ணிமா கேட்க “இல்ல வேண்டாம்மா… நீயே கட்டிக்க” என்று சுரேஷ் சட்டென்று பின்வாங்கியது புத்திசாலித்தனம். (அந்தப் பயம் இருக்கணும்ல. சமீபத்தில் ஒரு பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு துடுக்குத்தனமாக மாலை அணிவிக்கப் போய் பலத்த கண்டனத்தைப் பெற்றார்).

ஒரு நடனத்திற்குப் பிறகு, மூன்றாவதாக உள்ளே வந்தவர் ரவீணா தாஹா. சீரியல் நடிகை. ‘குக் வித் கோமாளி’ புகழ். ‘ஆல்யா மானசா’வின் ஜாடையில் உள்ள இவர் வளர்ந்த குழந்தை போல இன்னமும் எல்கேஜித்தனம் மாறாமல் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டின் செல்லக் குழந்தையாகப் பல நாள்கள் தாக்குப் பிடிப்பார் போலிருக்கிறது. இவருக்கு ‘பட்டர்பிளை’ பொருள் வழங்கப்பட்டது. வீட்டிற்குள் சென்றவர், ஐஸ்கீரிமிற்கு அடம் பிடிக்கும் குழந்தை மாதிரி பூர்ணிமாவுடன் செல்லம் கொஞ்சி கேப்டன் பதவிக்கு மல்லுக்கட்டியது சுவாரஸ்யம். புத்திசாலியான பூர்ணிமாவும் அத்தனை எளிதில் விட்டுத்தரவில்லை. பிறகு சுரேஷின் பஞ்சாயத்துக்குப் பிறகு பூர்ணிமா விட்டுத்தர ரவீணாதான் வீட்டின் கேப்டன். (தற்காலிக சந்தோஷம்!).

ரவீணா தாஹா

நான்காவதாக உள்ளே வந்தவர் பிரதீப் ஆண்டனி. ‘அருவி’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருப்பவர். முந்தைய சீசனில் கவினின் நண்பனாக உள்ளே வந்து கவினை அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியவர். “இதுதான் உங்களுக்கு முழுமையான எண்ட்ரி. முன்ன வந்தது அரை எண்ட்ரிதான்ல” என்று சிலேடையில் விளையாடினார் கமல். பிரதீப் நிறையப் புத்தகங்களை வாசிக்கிறார். குறிப்பாகத் தத்துவம். சினிமாவிலும் நிறைய ஆர்வம். “இதுல வர்ற பரிசுப் பணத்தை வெச்சு நானே சொந்தமா படம் தயாரிப்பேன். யார் கிட்டயும் போய் கதை சொல்லிக் காத்துக்கிட்டு இருக்கணும்னு அவசியமில்ல” என்று ப்ரதீப் சொல்ல, “அந்த ஒருத்தருக்குக் கதை சொல்லி திருப்திப்படுத்தினா மட்டுமே இங்க உள்ள ஏராளமான பேரையும் திருப்தி பண்ண முடியும்” என்று கமல் குறுக்கிட்டுச் சொன்னது நன்று.

பிரதீப் ஆண்டனி

பிரதீப் புத்திசாலித்தனமான, தன்னம்பிக்கையுள்ள போட்டியாளராகத் தெரிகிறார். வீட்டிற்குள் துணிச்சலாக லாஜிக் பேசுகிறார். ஆனால் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் மதன்பாப்பின் ஒன்று விட்ட தம்பி மாதிரி ‘ஹெஹ்ஹ்ஹ’ என்று சிரிப்பதுதான் சற்று கலவரத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பார்வையாளர்களின் விரோதத்தை எளிதில் சம்பாதித்துக் கொள்வாரோ என்று தோன்றுகிறது. யாராவது தனியாகச் சென்று பேச விரும்பும் போது அங்கு வம்படியாக போய் ஒட்டிக் கொள்வது கெட்ட பழக்கம். ஆனால் ‘கன்டென்ட்’ தருவதில் முக்கியமான ஆளாக இருப்பார் என்று தோன்றுகிறது. வீட்டிற்குள் நுழைந்த பிரதீப்,”‘நான் ரொம்ப கேவலமானவங்க… எனக்கு பிரெண்டா இருக்கப் போறீங்களா… எனிமியா ஆகப் போறீங்களா?” என்று மிரட்டியே கேப்டன் பதவியை ரவீணாவிடமிருந்து ஏறத்தாழ பிடுங்கிக் கொண்டார். (உன்னை மாதிரி ஆளைத்தாம்ப்பா தேடிட்டு இருந்தேன் – பிக் பாஸ் மைண்ட் வாய்ஸ்!).

ஐந்தாவதாக உள்ளே வந்தவர் நிக்சன். இளைஞன். ஆவடியைச் சேர்ந்த பையன். கடந்த சீசன் அசல் கோலாரை ஞாபகப்படுத்தினார். சில திரைப்படங்களில் வந்து போயிருக்கிறார். சினிமாவின் பல துறைகளில் வேலை செய்த அனுபவம் உண்டு என்றாலும் இன்னமும் அடையாளம் கிடைக்கவில்லை. ராப்பர். “கோவம் சட்டுன்னு வந்துடும்… சூழ்நிலை காரணமா எனக்கு ஃபேமிலியை ஹாண்டில் பண்ணத் தெரியாது” என்கிறார் நிக்சன். ‘YOU HAVE YOU’ என்கிற வாசகம் இருந்த முகக்கண்ணாடியைத் தந்த கமல் அதற்குச் சொன்ன பொழிப்புரை நன்று. ‘ண்ணா… ண்ணா’ என்று வீட்டிற்குள் நுழைந்ததும் மற்றவர்களை அழைத்து இளைய தம்பியாக மாறிய நிக்சன், “நீ எனக்கு பிரெண்டா… எனிமியா?!” என்கிற பிரதீப்பின் இம்சைத் தாங்காமல் பதவியை விட்டுத் தந்துவிட்டார்.

நிக்சன்

ஆறாவதாக உள்ளே நுழைந்தவர் வினுஷா தேவி. ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புகழ். அம்மா பொண்ணு. அப்பா இல்லை. நிறம் சார்ந்து நிறையக் கிண்டல்களைச் சந்தித்துப் போராடி மேலே வந்திருக்கிறார். “என் பொண்ணு தைரியமானவ…” என்று சொன்ன அவரின் அம்மா “பார்த்துக்கங்க சார்” என்று எல்லோரின் அம்மா மாதிரியும் கமலிடம் வேண்டுகோள் வைக்க “வெளில இருந்துதான் பார்த்துக்க முடியும்” என்றார் கமல். “உங்களின் நிறம் பற்றிய விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். மனம் பிரகாசமாக இருந்தால் போதும். அங்கே இருட்டாக இருந்தால்தான் பிரச்னை. பூகோளத்தின் இந்தப் பகுதியின் நிறம் இது. இதைக் கிண்டலடிக்க எவருக்கும் உரிமையில்லை” என்று அறச்சீற்றத்துடன் பேசினார் கமல்.

வினுஷா தேவி

வீட்டிற்குள் சென்ற வினுஷா, எளிதாகச் சரண் அடையாமல் பிரதீப்பிடம் சாமர்த்தியமாக மல்லுக்கட்டியது ரசிக்கத்தகுந்த காட்சி. இருவருமே விடாமல் போராடியதால் அடுத்து வந்தவருக்கு அடித்தது கேப்டன் சான்ஸ்.

மணி சந்திரா

ஏழாவதாக வந்தவர் மணி சந்திரா. நடனக்கலைஞர். துள்ளலான அசைவுகளின் மூலம் கவர்கிறார். பிக் பாஸ் உள்ளிட்டு நிறைய ஷோக்களில் ஆடியிருக்கிறார். சாண்டிதான் இவருக்கு குருநாதர். எனவே உடல்மொழி உள்ளிட்டு சாண்டியின் க்ளோனிங் மாதிரி இருக்கிறார். “நிறைய மீம்ஸ் வரும். ஜாக்கிரதை” என்ற கமல், மணியை உள்ளே அனுப்பினார். பிரதீப்பிற்கும் வினுஷாவிற்கும் இடையே நடந்த இழுபறி காரணமாக, மணிக்கு உடனடி கேப்டன் லக் அடித்தது.

எட்டாவதாக வந்தவர் அக்ஷயா. கேரளா. பாலக்காடு. மலையாளப் பொண்ணு. நடிப்பில் ஆர்வம். நவரசங்களில் முகபாவத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மந்திரித்து விட்ட கோழி மாதிரியே சமயங்களில் தடுமாறுகிறார். “உங்க வீடியோல எடிட்டிங் பிடிச்சிருக்கா?” என்று கமல் கேட்ட போது இவர் தந்த எக்ஸ்பிரஷனை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. கமலும் அதை மெலிதாகக் கிண்டலடித்தார். உள்ளே சென்ற அக்ஷயாவிற்கும் மணி சந்திராவிற்கும் சம்பிரதாயமாக வாக்குவாதம் நடக்க, இருவருமே விட்டுத் தரவில்லை.

அக்ஷயா

ஒன்பதாவது போட்டியாளராக எண்ட்ரி தந்தவர் ஜோவிகா. வனிதா விஜயகுமாரின் மகள். இந்த சீசனில் குறைவான வயதுள்ள போட்டியாளர். பார்க்க வசீகரமாக இருக்கிறார். படிப்பைவிட நடிப்பில் ஆர்வம்… சமையல் தெரியுமாம்! “சிங்கிள் மதரா எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க” என்றார். விருந்தினர் வரிசையில் அமர்ந்திருந்த வனிதாவும், “உள்ளே என்ன சொல்லுதோ, அதைச் செய்” என்பது மாதிரி மகளுக்கு சில ‘டிப்ஸ்’களைத் தந்தார். துணி தொங்க விடும் ஹாங்கர் மாதிரி இருந்த ஒரு மினமிலிஸ்டிக் கலைப்பொருளை ஜோவிகாவிடம் தந்து அனுப்பினார் கமல். உள்ளே சென்ற ஜோவிகா உடனடி கேப்டன் ஆன திகைப்புடன் நின்று கொண்டிருந்தார். வனிதாவின் அலப்பறைகள் இவரிடம் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

பத்தாவதாக வந்தவர் ஐஷூ. கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த அமீரைத் தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்தவர். டான்ஸர். நடிகை ஸ்ரீதேவியையும் கஜோலையும் கலந்து செய்த கலவையின் ஜாடையில் இருக்கிறார். வீட்டில் தடுத்தாலும் அடம்பிடித்து உள்ளே வந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றவர், “ஜாலியான கேப்டனா இருப்பேன். உங்களுக்குப் புச்ச டீம்ல போடுவேன்” என்று கிளிப்பிள்ளை மாதிரி கான்வென்ட் தமிழில் திரும்பத் திரும்பச் சொல்லி அரைமனதாக வாக்குவாதம் செய்து தோற்றார். (ஜோவிகாவின் உடனடி காட்ஃபாதராக மாறியிருக்கிறார் பிரதீப்).

ஜூசு

பதினோராவது போட்டியாளர் விஷ்ணு. ‘ஆஃபீஸ்’, ‘சத்யா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர். இவர் பெரிய ஆளாகப் புகழ் அடைவது சித்தப்பாவின் பெரிய லட்சியமாம். மறைந்துவிட்ட சித்தப்பாவின் கனவைக் காப்பாற்றுவேன் என்று உருக்கமாகப் பேசினார் விஷ்ணு. கிரிக்கெட் ஆர்வத்தைத் தியாகம் செய்து நடிப்பிற்குள் வந்திருக்கிறார். விஷ்ணுவின் அறிமுகத்திற்கு இடையே நடிகர் திலகத்தின் பிறந்தநாள் என்பதால் சிவாஜியைப் பற்றிய நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டார் கமல். ‘மன்மதன் அம்பு’ படத்தில் மேக்கிங் வீடியோ செய்த அனுபவத்தை விஷ்ணு நீளமாகச் சொல்ல “கதை நல்லாயிருந்தது. ஆனா சுருக்கமா சொல்லிடுங்க. அந்த டிரிக்தான் வீட்டுக்குள்ளே செல்லுபடியாகும்” என்று சிரித்தபடியே டிப்ஸ் தந்து அனுப்பினார் கமல்.

கன்டென்ட் தருவதில் பிரதீப்பிற்கு அடுத்த இடத்தை விஷ்ணு பிடிப்பார் போலிருக்கிறது. “நீங்க வெளில இல்லைன்னா சினிமா பிரமோஷன்லாம் ஸ்தம்பிச்சு போயிடுமே…” என்று சுரேஷைக் கிண்டலடித்த விஷ்ணு, “வெந்து தணிந்தது காடு. இவர் ரொம்ப பிரச்னை செஞ்சா வெளில தூக்கிப் போடு” என்று சுரேஷைப் பற்றி டைமிங்காகச் சொன்னது சுவாரஸ்யம்.

பன்னிரண்டாவது போட்டியாளராக வந்தவர் மாயா. தியேட்டர் ஆர்டிஸ்ட். பார்த்தவுடன் ‘விக்ரம்’ படத்தின் கேரக்ட்டரும் அந்த வில்லங்கமான காட்சியும் உடனே நினைவிற்கு வந்துவிடும். மதுரைப் பொண்ணு. சினிமா ஆர்வம். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் சென்று நகைச்சுவையாகப் பேசி ஆறுதல் அளிப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்கிற தகவலைக் கேட்டதும் இவர் மீதுள்ள மதிப்பு கூடிற்று. “அவங்களோட கர்மா ஆஸ்பத்திரில அனுபவிக்கிறாங்கன்னு அப்படியே விட்டுட முடியாது” என்ற கமல் “பாலிட்டிக்ஸூம் அப்படித்தான்” என்று பின்குறிப்பில் செருகிய அரசியல் குண்டூசி சுவாரஸ்யம். உள்ளே சென்ற மாயா, விஷ்ணுவிடம் மல்லுக்கட்டி பிறகு விட்டுத் தந்தார்.

மாயா

சரவணன்

பதிமூன்றாவதாக வந்தவர் சரவணன். சின்னத் திரை நடிகர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடைக்குட்டி. துறுதுறுவென்று பேசுகிறார். சினிமாவில் ஆர்வம். சினிமா தியேட்டர்களில்தான் குடித்தனம் நடத்துவாராம். (பாப்கார்ன் விக்கற விலைக்கு எப்படித்தான் கட்டுப்படி ஆகுதோ?!). இவரை வாழ்த்த வந்திருந்த சக நடிகர்களும் மேடையேறி கமலுடன் கட்டிப்பிடி வைத்தியம் நடத்த “நானு… நானு…” என்று இவரும் கட்டிப்பிடித்தது சுவாரஸ்யம். உள்ளே சென்ற சரவணன், எல்லோருக்கும் கருப்பட்டி மிட்டாய் தர, இவருக்கு அல்வா தந்து கேப்டன் பதவியைச் சாமர்த்தியமாகத் தக்க வைத்துக் கொண்டார் விஷ்ணு.

யுகேந்திரன்

பதினான்காவது போட்டியாளர் நமக்கு அறிமுகமானவர். பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன். “‘யுகேந்திரனோட அப்பாதான் வாசுதேவன்’ன்னு சொல்ற அளவுக்கு நான் வளரணும்” என்கிற ஆசையைக் கொண்ட யுகேந்திரன், ஓஷோவின் ஒன்றுவிட்ட சொந்தக்காரரின் ஜாடையில் இருக்கிறார். “இத்தனை நல்ல க்வாலிட்டிஸ் இருக்கற ஒருத்தரை பிக் பாஸ் வீடு இப்பத்தான் பார்க்கப் போகுது” என்று சாந்தமாகப் பேசி உள்ளே சென்ற யுகேந்திரனிடம் விஷ்ணுவின் சாமர்த்தியம் செல்லுபடியாகவில்லை. ‘விடாக்கண்டன், கொடாக்கண்டனாக’ இருவரும் போட்டியிட்டது சுவாரஸ்யம். கடைசியில் பாடகரே வெற்றி பெற்றார்.

பதினைந்தாவது போட்டியாளருக்கு அறிமுகம் தேவையில்லை. விசித்ரா. “என்னோட வெளித் தோற்றத்தைப் பார்த்து நிறைய பேர் தவறா எடை போடறாங்க… ஆக்சுவலி, நான் ரொம்ப அமைதி. சென்சிட்டிவ்… எமோஷனல். நண்பர்கள் என்னைப் பத்தி புறணி பேசறது பிடிக்காது. ஃபேமிலிதான் எனக்கு முக்கியம். சமையல் நல்லா தெரியும்” என்கிற விசித்ரா, சைக்காலஜியில் பிஎச்டி முடித்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.

விசித்ரா

உள்ளே சென்ற விசித்ரா “புஜ்ஜூக்குட்டி. பட்டுக்குட்டி” என்று ரவீணாவை முகர்ந்து மிகையாகச் செல்லம் கொஞ்சினார். “எனக்குத்தான் சமையல் நல்லா தெரியும்… பார்த்துக்கங்க!” என்று தன் பிளஸ் பாயிண்ட்டைச் சொல்லி யுகேந்திரனிடம் வாதம் செய்தாலும் இறுதியில் விட்டுத் தந்துவிட்டார் விசித்ரா.

பவா செல்லத்துரை

பதினாறாவது போட்டியாளர் பவா செல்லத்துரை. இருப்பதிலேயே சீனியர் இவர்தான். பிக் பாஸ் வீட்டு ரேஷன் கார்டின் படி அப்பா கேரக்ட்டர். பவா அடிப்படையில் எழுத்தாளர். ஆனால் ‘கதை சொல்லியாக’ மாறி ஏராளமான வாசகர்களைச் சம்பாதித்திருப்பவர். இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நிகழ்த்தியவர். வழக்கத்தில் இல்லாத பளபளப்பான உடையணிந்து அசௌகரியமாக வந்த பவாவை வரவேற்ற கமல் “உங்களுக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம் ஒன்றைச் சொல்லுங்கள். பரிந்துரையை இப்பவே ஆரம்பிச்சிடலாம்” என்று கேட்க மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர நினைவுகள்’ என்கிற தமிழ் மொழிபெயர்ப்பு நூலை பவா சொன்னது சிறப்பு. அருமையான நூல். தன்னுடைய வாழ்க்கையை மிக அப்பட்டமான நிர்வாண மொழியில் எழுதியிருப்பார் பாலச்சந்திரன். மிகச் சிறந்த கவிஞர். உள்ளே சென்ற பவா “நீங்களே வெச்சுக்கங்கப்பா” என்று கேப்டன் பதவியை எடுத்துத் தந்தது பெரிய மனிதருக்கான அடையாளம்.

அனன்யா ராவ்

பதினேழாவது போட்டியாளர் அனன்யா ராவ். மங்களூர் பொண்ணு. ‘ஐஸ் மாதிரி எப்பவும் கூலா இருப்பேன்’ என்கிறார். (கூல் சுரேஷுடன் உடனே பிரெண்டாகி விடுவாரோ?!) “ரொம்ப வருஷமா பிக் பாஸிற்கு டிரை பண்றேன். அதுக்காகவே தமிழ் கத்துக்கிட்டேன்” என்றவர் தன்னுடைய அம்மா முதல் வீட்டின் குட்டி நாய் வரை பாசம் காட்டுகிறார். மாடல், நடனக்கலைஞர் என்று வேறு பரிணாமங்களும் உண்டு. ‘சலங்கை’யை பொருளாகத் தந்த கமல், வாழ்த்தி உள்ளே அனுப்பினார். இவரது இரட்டை சகோதரி தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால் அதை வைத்து சற்று வேடிக்கை நாடகம் நடத்தினார் கமல். உள்ளே சென்ற அனன்யாவை உடனே இம்ப்ரஸ் செய்ய முயன்ற விஷ்ணு, அவருக்கு சில டிப்ஸ்களைத் தந்தார். ஆனால் இதை உடனே கண்டுபிடித்து விட்ட யுகேந்திரன் வாக்குவாதத்தை இழுத்ததால் இருவருக்கும் வாய்ப்பு பறிபோனது.

கடைசியாக வந்த பதினெட்டாவது போட்டியாளர் விஜய் வர்மா. (ஹப்பாடா!). டான்ஸர். திருச்சி பையன். பிட்டெனஸ்ஸில் நிறைய ஆர்வம். “கடைசியா உள்ளே போனாலும் நான்தான் முதல்ல ஜெயிப்பேன்” என்று இவர் பன்ச்சாக பேசிய போது “உறுதி… இறுதி…ன்ற வார்த்தைகள்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு…” என்று கமல் சொன்ன போது, ‘உள்ளே போ தம்பி… அப்ப தெரியும்’ என்பது மாதிரியே இருந்தது. ‘புல்லட்’ பொம்மையைப் பொருளாக வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற விஜய்க்கு உடனடி அதிர்ஷ்டம் அடித்தது. முந்தைய போட்டியாளர்கள் அனைவருமே கேப்டன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளாததால் இவர்தான் வீட்டின் முதல் கேப்டன். இது அதிர்ஷ்டமா, தண்டனையா என்பது பின்னால்தான் தெரியும். பிக் பாஸ் வீட்டின் விதிகள் எப்போது வேண்டுமானாலும் கோக்குமாக்காக மாறும் என்பதால் எதுவும் நிச்சயமில்லை.

விஜய் வர்மா

பதினெட்டு போட்டியாளர்களும் உள்ளே சென்ற பிறகு அகம் டிவி வழியாக அவர்களைச் சந்தித்த கமல் உரிமைத் தொகையை… மன்னிக்கவும் உரிமைக் குரலை எழுப்புவதற்கான ஓர் அடையாளத்தை அனைவருக்கும் தந்தார். சிவப்பு நிற கையுறை. தனக்கோ அல்லது மற்றவருக்கோ அநீதி இழைக்கப்பட்டதாக ஒருவர் கருதினால் இந்தக் கையுறையை அணிந்து உயர்த்தி அடுத்த கமல் ஷோவில் இது பற்றிப் பேசலாம். இந்தப் பஞ்சாயத்திற்கு முன்னுரிமை தந்து தீர்ப்பு அளித்த பிறகுதான் கமல் ஷோவை ஆரம்பிப்பாராம்.

கமல் விடைபெற்றுச் சென்றதும் அவர் சொன்ன ‘உரிமைக்குரல்’ விஷயத்தை ஒருவர் இன்னொருவருக்கு விளக்க, ‘கிச்சனே இங்க இல்லையே… சோறு எப்ப போடுவாங்க… பெட்ரூம்ல இடம் பிடிக்கணுமே’ என்கிற கலவையான எண்ணவோட்டங்களுடன் உலவிக் கொண்டிருந்த போட்டியாளர்களை ‘எல்லோரும் லிவ்விங் ஏரியால வந்து உக்காருங்க’ என்று பிக் பாஸ் அழைப்பதோடு இந்த துவக்க நாள் எபிசோடு முடிந்தது.

Share This Article